வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முன்னதாக தம்மிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அண்மையில் அரேபிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்து வெளிவிவகார அமைச்சர் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகளும் உரிமை கோரி வரும் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று தொடர்பில் ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பு நடத்திய வாக்கெடுப்பின் போது, முஸ்லிம் நாடுகளுக்கு ஆதரவளிக்கப்படவில்லை என ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்களான பைசர் முஸ்தபா உள்ளிட்டவர்களும் ஜனாதிபதியிடம் இது குறித்து முறைப்பாடு செய்திருந்தனர்.
இதன் போது தமக்கு இந்த விடயம் பற்றி தெரியாது எனவும், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான விடயங்களில் தீர்மானம் எடுக்கும் போது தம்மிடம் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்க உள்ளதாக ஜனாதிபதி அரேபிய நாடுகளின் தூதுவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் சர்வதேச விவகாரங்களில் தீர்மானம் எடுக்கும் போது தமது ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.