Breaking
Sun. Nov 24th, 2024

செத்து சீரழிந்த நிலையில் இருக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் இனவாத அரசியலுக்கு ஒட்சிசன் வழங்கும் ஒரு நிகழ்ச்சியையே கிழக்கு மாகாணத்தில் அமைச்சர் தயாகமகே முன்னெடுத்துள்ளார். தோல்வியடைந்து போன இனவாத சக்திகளுக்கு உயிரூட்டும்  நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு தயாகமகே  ஒத்துழைப்பு வழங்கி வருகிறாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது என்றும்  நல்லாட்சிக்கும், சமூக நல்லுறவுக்கும் குந்தகம் விளைவிக்கும் தயாகமகேயின் இந்த இனவாத செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் கூறியுள்ளார்.

அண்மையில் அமைச்சர் தயா கமகே கிழக்கு மாகாணத்தில் புத்தர் சிலை வைப்பது தொடர்பாக வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய இனவாத கருத்துக்கு பதிலளித்துள்ள முஜீபுர் றஹ்மான் தனது அறிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில்,

இறக்காமம் – மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையின் போது அமைச்சர் தயா கமகே இனவாதத்தை கக்கும் தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.

அமைச்சர் தயா கமகே, இந்த நாட்டில் புத்த மதத்திற்கே முன்னுரிமை வழக்கப்பட்டுள்ளதாகவும். இலங்கையில் ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 வரையில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதாகவும், முஸ்லிம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்களும் புத்த மதத்துக்கு முதலிடம் வழங்குவதற்கு இணங்கியுள்ளதாகவும்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவையும் இதனை அனுமதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்தோடு, கிழக்கில்  சிறுபான்மை சமூகங்கள் வாழும் பிரதேசங்களில் தீகவாபி விகாரைக்குச் சொந்தமான (12) பன்னிரெண்டாயிரம்  ஏக்கர் காணிகள் கல்முனை, பொத்துவில் போன்ற  பகுதிகளிலும் இருந்துள்ளதாகவும் கூறி இனவாதத்திற்கு தூபமிட்டுமுள்ளார்.

மேலும் தயாகமகே தனது கருத்தில், இந்த நாட்டில் புத்தருக்காக சிலை வைப்பதை நிறுத்த வேண்டும் என்று சொல்ல முடியாது என்றும் அப்படிச் சொல்வது தவறானது என்றும் கூறியுள்ளதோடு, இறக்காமத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அரசாங்கம் அகற்றுவதற்கு முயற்சி செய்தால் தனது அமைச்சுப் பதவியைத் துறந்து விட்டு, தான் வீட்டுக்குச் செல்வேன் என்றும் கூறியுள்ளார்.

சிங்கள மக்கள் அறவேயில்லாத பகுதிகளில், வடக்கிலும், கிழக்கிலும் சிறுபான்மை மக்களின் பூர்விக பிரதேசங்களில் புத்தர் சிலைகள் நிறுவும் பணிகள் சர்ச்சைகளை உருவாக்கிவரும் நிலையில், நல்லாட்சியின் அமைச்சரொருவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருப்பது வேதனை தரும் விடயமாகும். அதுமட்டுமல்லாமல், திட்டமிட்டு  கிழக்கில் இடம்பெற்று வரும் இந்த மதவாத ஆக்கிரமிப்பின் பின்னணியில் அமைச்சர் தயாகமகே இருப்பது இவரது இனவாதக் கருத்துக்களால் இன்று அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

அமைச்சர் தயாகமகேயின் இந்தக் இனவாதக் கருத்து, இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் பலமான ஆதரவோடு ஆட்சிபீடமேறிய  நல்லாட்சி அரசாங்கத்தின் கட்டமைப்பை சீர்குலைக்க  எடுக்கப்பட்ட ஒரு சதிமுயற்சியாகவே அர்த்தப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.

இனவாதத்தை பூண்டோடு அழிக்கும் கருத்தியலோடு கட்டமைக்கப்பட்ட இந்த நல்லாட்சியில் அமர்ந்துக் கொண்டு, சிறுபான்மை சமூகங்களின் மத, கலாசார உரிமைகளை ஆக்கிரமிப்பு செய்வதற்கும், ஆதிக்கம் செலுத்துவதற்கும், அச்சுறுத்தல் விடுவதற்கும் அமைச்சர் தயாகமகேவுக்கு எவ்வித தார்மீக உரிமையுமில்லை.

சமூக நல்லிணக்கத்தையும், நல்லாட்சியையும் விரும்பியே ஐ.தே.க தலைமையிலான ஆட்சி மாற்றத்திற்கு இந்நாட்டு மக்கள் வாக்களித்தனர். மஹிந்த ராஜபக்ஷவின் இனவாதத்தை தோற்கடிப்பதற்கு அணிதிரண்ட மக்களின் சக்திக்கு முன்னால் மடிந்து போன இனவாதத்தை எந்த வடிவிலும் மீண்டும் உயிர்ப்பிக்கவோ, மக்கள் வழங்கிய ஆணையை கொள்ளையடிக்கவோ நல்லாட்சியின் அமைச்சரொருவருக்கு இடமளிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.

தோல்வியடைந்த இனவாதத்தின் தோழமை சக்திகள் நல்லாட்சி அரசாங்கத்தை இல்லாதொழிக்கவே இறுமாப்புடன் இயங்கி வருகின்றன. தெற்கில் மஹிந்தவின் தலைமையில் செயற்படும் தீய சக்திகள்  இனவாதத் தீயை ஏந்தித் திரிகின்றன. இனவாத அரசியலின் அடையாளமான  மஹிந்த ராஜபக்ஷவின் அணியினர் ஆகியிருக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்கு உரமூட்டுவதாகவும், உறுதுணை வழங்குவதாகவுமே தயா கமகேவின் இந்த இனவாதக் கருத்து இருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற  மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தது நல்லாட்சிக்கும், நல்லிணக்கத்திற்குமேயன்றி இறந்து போன மஹிந்தவின் இனவாத அரசியலை உயிரூட்டுவதற்கு அல்ல என்ற செய்தியை அமைச்சர் தயா கமகேக்கு நான் ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

குறிப்பாக, சிறுபான்மை மக்களின் வாக்குகளின் ஆணையினால் உருவான நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரான தயா கமகே  தனது கட்சிக்கு வாக்களித்த  மக்களின் மத, கலாசார, உரிமைகளுக்கு எதிராக செயற்படுவது துரோகத்தனமானதும், துரதிஷ்டவசமானதுமாகும்.

நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும், சிறுபான்மை சமூகங்களின் பூர்வீக பிரதேசங்களில் இடம்பெறும் சகல மத, கலாசார ரீதியிலான ஆதிக்கத்தையும், ஆக்கிரமிப்புகளையும்; வன்மையாகக் கண்டிப்பதோடு, தோல்வியடைந்து வங்குரோத்து நிலையில் வாழும் மஹிந்தவின் இனவாத அரசியலுக்கு உயிருட்டும் எந்த செயற்திட்டத்திற்கும் எந்த சக்திக்கும் ஒருபோதும் நாம் இடமளிக்க விடமாட்டோம்  என்பதையும்  கூறிவைக்க விரும்புகிறேன் என்றும் முஜீபுர் றஹ்மான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *