கடந்த 11-04-2016ம் திகதி டெய்லி சிலோன் கேள்விக்கு பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வை.எல்.எஸ் ஹமீத் தெரிவித்த கருத்துக்களைப் பார்த்த போது எனக்குள் சில வினாக்கள் உதித்தன.
1.வை.எல்.எஸ் ஹமீதிடம் உங்கள் பதவி என்ன என்ற கேள்விக்கு தானே கட்சியின் சட்ட ரீதியான செயலாளர் எனக் கூறியுள்ளார்.வை.எல்.எஸ் ஹமீத் 21-01-2016ம் திகதி வியாழக்கிழமை அ.இ.ம.காவைச் சேர்ந்த 15 நபர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு வழக்குத் தாக்கல் ஒன்றை செய்திருந்தார்.குறித்த வழக்குத் தாக்கல் செய்த போது அம் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட குறித்த செயலாளரை செயற்பட முடியாதவாறு நீதி மன்றத்தினால் வழங்கப்படும் தற்காலிகத் தடையுத்தரவை (adjoining injunction) நீதிமன்றத்திடம் கோரி இருந்தார்.இவரது இக் கோரிக்கையை நீதி மன்றம் நிராகரித்திருந்தது.இப்படி இருக்கையில் இவர் தன்னை சட்ட ரீதியான செயலாளர் என எவ்வாறு கூற முடியும்? நீதி மன்றத்தில் குறித்த விடயம் இருக்கும் போது எப்படி தன்னை சட்ட ரீதியான செயலாளராக குறிப்பிட முடியும்.
2.கெளரவ அமைச்சர் றிஷாத் ஒரு அலங்காரத் தலைவர் என்ற விடயத்தை அடிக்கடி கூறி வருகிறார்.இதனை டெய்லி சிலோன் கேள்விக்கு பதில் நிகழ்ச்சியிலும் கூறியிருந்தார்.குறித்த ஷூரா சபையில் உள்ள ஏழு பேரும் இணைந்து கட்சியை வழி நடாத்த வேண்டும் என்ற விடயம் நல்லது.இருந்தாலும் ஒரு கட்சியின் தலைவரை ஒரு போதும் அலங்காரத் தலைவராக கூற முடியாது.சில நேரங்களில் சில விடயங்களை அவசரமாக முடிவெடுக்க வேண்டிய சூழ் நிலை ஒரு தலைவருக்கு எழலாம்.இதன் போது ஒரு கட்சித் தலைவர் என்ற வகையில் சுயமாக முடிவெடுக்கும் உரிமை ஒரு கட்சியின் தலைவருக்கு இருக்க வேண்டும்.அவருக்கு எந்த அதிகாரமுமில்லை எனக் கூறினால் கட்சியை சில நேரங்களில் வழி நடாத்த முடியாது.முதலில் வை.எல்.எஸ் ஹமீத் கட்சித் தலைவர் ஒருவரின் இவ்வாறான பண்புகளை அறிந்து கொள்ள வேண்டும்.
3.கெளரவ அமைச்சர் றிஷாத்தின் ஊழல்களால் சமூகமே கேவலப்படுவதாக கூறியுள்ளார்.கெளரவ அமைச்சர் றிஷாத் ஊழல் செய்ததாக பலரும் பல வகையில் கூறினாலும் எவராலும் நீதி மன்றம் சென்று நிரூபிக்க முடியவில்லை.வை.எல்.எஸ் ஹமீத் ஒரு சட்டத்தரணி என்பதால் நீதி மன்றம் குற்றவாளி என தீர்ப்பளிக்காத ஒருவரை குற்றவாளி என கூற முடியுமா? அஷ்ரபையும் ஊழல் செய்தவர் எனக் கூறிய சமூகம் தானே எமது சமூகம்.சில வேளை வை.எல்.எஸ் ஹமீத் கெளரவ அமைச்சர் றிஷாத்திற்கு அண்மையில் இருந்ததால் அவர் செய்த ஊழல்கள் தெரியலாம்.அப்படி இருந்தால் வை.எல்.எஸ் நீதி மன்றம் சென்று வழக்குப் போடுவாரா? அவர் அமைச்சர் றிஷாத்துடன் இருந்த காலப்பகுதியில் அவர் செய்த ஊழல்கள் பற்றி இவர் அறியவில்லையாம்.கெளரவ அமைச்சர் றிஷாத் ஊழல் வாதியென பணியிரண்டு வருடங்கள் அறியாத உண்மையை தேர்தல் முடிந்த கையோடு அறிந்ததன் ரகசியமென்ன? வகி ஏதும் வந்ததா?
4.கெளரவ அமைச்சர் றிஷாத் சில விடயங்களை சிறந்த முறையில் செய்கிறார் என்ற உணர்வு ஊட்டப்பட்டமையாலேயே தான் அமைச்சர் றிஷாதை புகழ்ந்ததாக கூறியுள்ளார்.அ.இ.ம.காவின் அதிகாரமிக்க செயலாளராக இவரை அமைச்சர் றிஷாத் வைத்திருந்தமை யாவருக்கும் தெரியும்.இப்படி இருக்கையில் கெளரவ அமைச்சர் றிஷாத்தின் செயற்பாடுகள் பற்றி இவர் நன்கே அறிந்திருப்பார்.இவருக்கு அமைச்சர் றிஷாத் சிறந்த முறையில் செயற்படுகிறார் என ஊட்டப்பட்டிருந்தது எனக் கூறுகிறாரே இவர் என்ன சிறு பிள்ளையா? இதில் மறைமுகமாக கெளரவ அமைச்சர் றிஷாத் சிறந்த முறையில் செயற்பட்டதை ஏற்றுக்கொள்கிறார் என்பதே உண்மை.
5.கெளரவ அமைச்சர் றிஷாத் தேசியப்பட்டியல் விடயத்தில் தன்னை ஏமாற்றி இருந்ததாக வை.எல்.எஸ் ஹமீத் கூறியிருந்தார். இவர் எந்த விடயத்திலும் முடிவெடுக்கும் அதிகாரம் றிஷாத்திற்கில்லை எனக் கூற ஆரம்பித்தது தேசியப்பட்டியல் பகிர்வின் பின்னர் தான்.தேசியப்பட்டியல் விடயத்தில் அ.இ.ம.காவின் ஷூரா சபை ஒன்று கூடி முடிவெடுக்கவில்லை.அமைச்சர் றிஷாத் தனது தனிப்பட்ட கருத்தின் படியே வை.எல்.எஸ் ஹமீதை தேசியப்பட்டியல் உறுப்பினராக கூறியிருந்தார்.வை.எல்.எஸ் ஹமீத் உண்மையாளராக இருந்தால் தன்னை அறிவித்த போதே இதனைக் கூறும் அதிகாரம் அமைச்சர் றிஷாதிற்கில்லை என அறிவித்திருக்க வேண்டும்.ஏன் அறிவிக்கவில்லை (தேசியப்பட்டியல் இவருக்கு வழங்கப்படாதது குறித்து பின்னர் அலசப்படும்).
அ.இ.ம.காவானது அமைச்சர் றிஷாத்தின் தனிப்பட்ட செல்வாக்கினால் வளர்ந்த கட்சி.இவர் அ.இ.ம.காவை தேசிய ரீதியில் வளர்த்திருந்தால் அவரது ஊரான கல்முனையில் அதன் வளர்ச்சியை எதனையாவது அடிப்படையாகக் கொண்டு நிறுவ முடியுமா?
ஏ.சி.எம் சஹீல்
இளைஞர் அமைப்பாளர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,சம்மாந்துறை தொகுதி
பிரதிச் செயலாளர்,மத்திய குழு,சம்மாந்துறை.