கடந்த யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் இன மத பேதமின்றி சகோதரத்துவத்துடன் தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அதே ஒற்றுமையுடன் இனி வரும் காலங்களிலும் வாழவேண்டுமெனவும் அந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும் நோக்கிலான இந்த நிகழ்வு வெற்றியளித்துள்ளது எனவும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியா முஸ்லிம் தேசிய பாடசாலையின் 60வது ஆண்டு பூர்த்தி விழாவில் இன்று பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இது வவுனியா மாவட்டத்திலுள்ள ஒரேயொரு முஸ்லிம் தேசியப்பாடசாலையாக இருந்தாலும் இங்கு தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதும் அவர்களது மதம், கலாசாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதும் ஒரு சக வாழ்வுக்கான அடிப்படையாகவே நான் கருதுகின்றேன்.
அத்துடன் இவ்வாறான நிகழ்வுகளில் பாடசாலைக்கும் இந்த மாவட்டத்துக்கும் பெருமை சேர்க்கும் மாணவர்களை கௌரவப்படுத்துவதன் மூலம் மேலும் பல சாதனையாளர்களை உருவாக்குவதற்கு வழி சமைக்கிறது எனவும், இந்தப்பாடசாலை அனைத்து துறைகளிலும் இன்னும் பல சாதனைகளை படைத்து தேசிய ரீதியில் சிறந்த பாடசாலையாக எதிர்காலத்தில் திகழ வேண்டும் எனவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இந்த பாடசாலையின் வளர்ச்சிக்கு என்னாலான அனைத்து பங்களிப்புகளை இனி வரும் காலங்களிலும் வழங்குவேன் என்றும், இந்த பாடசாலையின் வளர்சிக்கு எப்பொழுதும் பக்கபலமாக நின்று செயற்படுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பாடசாலைக்கும் மாவட்டத்துக்கும் கல்வி, விளையாட்டில் பெருமை சேர்த்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.ரம்சீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர்கள், வலயக்கல்விப்பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.