Breaking
Sun. Nov 24th, 2024

(சுஐப் எம்.காசிம்)  

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலேதான் அமைக்க வேண்டுமெனவும், மாவட்ட அபிவிருத்திக்குழு இதற்கான அனுமதியை வழங்க வேண்டுமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும், மஸ்தான் எம்.பியும், கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் விடுக்கின்ற கோரிக்கையை, தன்னால் ஒருபோதும் ஆதரவளிக்க முடியாதெனவும், இவ்வாறான முயற்சிக்குத் தான் எதிர்ப்பு என்பதை பிரேரணையில் சுட்டிக்காட்டுமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், வவுனியா கச்சேரியில் இடம்பெற்றபோது பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கொண்டுவந்த பிரேரணையின் போதே அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த எதிர்ப்பை வெளியிட்டார்.

இந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், மதவாக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க வேண்டுமென்று மேற்கொண்ட முடிவை மாற்ற வேண்டாமெனவும், மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்படுங்கள் எனவும் வேண்டினார். மாகாணசபை உறுப்பினர்களான ஜயதிலக, தர்மபால ஆகியோர் மதவாக்குளத்திலேயே அமைக்க வேண்டுமெனவும், மீண்டும் இதை மாற்ற வேண்டுமெனக் கூறுவோர் திட்டமிட்டு இந்தக் கோரிக்கையை விடுப்பதாகக் கூறினர்.

அமைச்சர் றிசாத் இங்கு மேலும் கூறியதாவது,

கிராமியப் பொருளாதார விவகார அமைச்சர் ஹரிசனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதென மாவட்ட அபிவிருத்திக்குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

பின்னர், அந்த இடத்தில் அமைக்கக் கூடாது என்று முதலமைச்சர் விடாப்பிடியாக நின்றதனால் பல்வேறு இழுபறிகள் ஏற்பட்டன. அமைச்சரவையிலும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. எனினும், ஜனாதிபதி, பிரதமரின் தலையீட்டினால் சமரசத்தீர்வு ஏற்பட்டு, வவுனியா மதவாக்குளத்திலும், கிளிநொச்சியிலும் இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டு, அதற்கான வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில், தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும் என்பதில் நான் பெருவிருப்பம் கொண்டிருந்தபோதும், ஜனநாயக ரீதியாக பெரும்பான்மையினர் எடுத்த முடிவை ஏற்றுக்கொண்டு மதவாக்குளத்தில் அமைப்பதை ஆதரித்தேன்.

கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பொருளாதார மத்திய நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற இருந்தபோதும், திடீரென அது இரத்துச் செய்யப்பட்டது. இப்போது இதனை ஓமந்தையிலேதான் அமைக்க வேண்டுமென புதிதாக நீங்கள் கோரிக்கை விடுக்கின்றீர்கள். ஏற்கனவே எடுத்த முடிவுகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு “ரிவேர்ஸ்” இல் நீங்கள் செல்வதன் பின்னணிதான் என்ன? என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

மேலும், அரச உயர்மட்டத்தில் கலந்துரையாடப்பட்ட முடிவுக்கு நாம் எல்லாம் இணங்கிவிட்டு, அதற்கான முன்னெடுப்புக்கள் கருக்கொண்டிருக்கும் சமயத்தில் இந்த குழப்பத்துக்கான பின்னணி என்ன? காரணம் என்ன?

எம்மைப்பற்றி, எமது மாவட்ட அபிவிருத்திக் குழுவைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? இந்தக் கோரிக்கை நகைப்புக்கிடமாக இல்லையா? என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, ஓமந்தையில் மீண்டும் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, தன்னால் ஆதரவளிக்க முடியாதென பகிரங்கமாகவும், உறுதியாகவும் தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார். unnamed-5

கடந்த காலத்தில் தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டுமென செல்வம் எம்,பியும், பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்திலேயே அமைக்க வேண்டுமெனக்கோரி வவுனியா பிரதேச விவசாயிகளும், வர்த்தகர்களும் வவுனியாவில் உண்ணாவிரதம் இருந்தபோது, அதில் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவு வெளியிட்ட மஸ்தான் எம்.பியும் தற்போது இவ்வாறான நிலைப்பாட்டை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  unnamed-6

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *