Breaking
Sun. Nov 24th, 2024

ஜனாதிபதி அன்று சுயாதீனமானது எனக் கூறிய ஆணைக்குழுக்களையும் அதன் அதிகாரிகளையும் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் தெரிவித்துள்ளார். நாங்கள் ஆரம்பித்திலிருந்தே இதைக் கூறி வந்துள்ளோம். காலம் கடத்தாது இதை அவர் ஏற்றுக் கொண்டதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவெரட்டிய தொகுதியின் அமைப்பாளர் சீ.பீ.தென்னகோனின் இறுதிக் கிரியைகளின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக் ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஒவ்வொரு ஆணைக்குழுவுக்கு முன்னாலும் ஆஜராகும்படி அழைப்பு விடுக்கின்றது. இன்று இந்த அரசு புதிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குண்டு துளைக்காத வாகனங்கள் இருக்கின்றன எனக் கூறி அவற்றை தேடிக் கண்டுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அவ்வாறு  குண்டு துளைக்காத வாகனங்களை சிரட்டைகளைப் போல் வீடுகளில் மறைத்துவைத்திருக்க முடியாது. இது கூட தெரியாததுதான் கவலையளிக்கின்றது. இந்த நிலை நீடித்தால் இந்த நாட்டைப் போல் இந்த அரசாங்கமும் வீழ்ச்சியடைவது உறுதியாகிவிட்டது.

எமது அரசாங்கம் நாம் ஆரம்பித்த அபிவிருத்தித்திட்டங்களை இன்று அரசாங்கம் திறந்து வைப்பதுடன் எம்மவர்களை சிறையில் அடைப்பதைவிட வேறு எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளையும் நாட்டில் மேற்கொள்வதில்லை. நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. எமது கூட்டங்களைப் போலவே கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல்களைப் பார்த்தும் இந்த அச்சம் கொண்டுள்ளது. இன்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இது வெகுவிரைவில் வெடித்துச் சிதறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் தெரிவித்த கருத்துக்கள் இன்று வரை நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.  ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்களுக்குப் பின்னர் ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவர் தில்ருக் ஷி விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவரது இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதையடுத்து தில்ருக் ஷி விக்ரமசிங்க சட்டமா அதிபர் திணைக்கள மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக மீண்டும் கடந்த வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் நீதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு தனக்கு தெரியாமலும் அறிவிக்காமலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் கடற்படை தளபதிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது குறித்து ஜனாதிபதி பாரதூரமான கருத்துக்களை முன்வைத்தார். மேலும் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி மீது வழக்குத் தொடர்ந்தது குறித்தும் அவர் விசனம் தெரிவித்திருந்தார். இருந்தும் முன்னாள் அமைச்சரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மஹிந்த தரப்பு ஸ்ரீ.ல.சு. கட்சி முக்கியஸ்தருமான குமார வெல்கமவின் வீடு மற்றும் வீட்டு வளவில் பொலிஸார் குண்டு துளைக்காத இரண்டு வாகனங்களை கண்டுபிடிக்க தேடுதல் நடத்தினர். ஆனால் இது குறித்து இதுவரை ஜனாதிபதி வாயைத் திறக்கவில்லை.

ஜனாதிபதியின் பரபரப்பூட்டும் உரை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை பதவியில் அமர்த்த அயராது உழைத்த கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போது மஹிந்த ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதியளித்து விட்டு இப்போது ஊழல் மோசடிப் பேர்வழிகளைக் காப்பாற்ற ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா? என்று சிவில் அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.

ஜனாதிபதியின் இந்த உரை அரசுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மீன்பிடி நீரியல்வள அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான மஹிந்த அமரவீரவின் அரசியல் வாழ்க்கை 25 வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் இந்த அமைச்சர்கள் எங்களது அரசாங்கத்தை அமைப்பது எப்போது? என்றும் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கேள்வி எழுப்பிய அமைச்சர் டிலான் பெரேரா உட்பட ஏனைய சில முக்கியஸ்தர்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி அது குறித்து தனக்கு தெரியாதெனவும் தான் நிரப்பப்படாத கைச்சாத்திட்ட காசோலையொன்றை ஸ்ரீ.ல.சு.கட்சி பொதுச்  செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிடமும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவிடமும் வழங்கியுள்ளதாகவும் என்ன செய்ய வேண்டுமென்ற பொறுப்பு அவர்களது கைகளிலேயே இருக்கின்றது என வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து, ஸ்ரீ.ல.சு. கட்சி மைத்திரி தரப்பையும் ஸ்ரீ.ல.சு கட்சி மஹிந்த தரப்பையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றே கூறவேண்டும்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதியின் இந்தக் கருத்து குறித்து அதிருப்தி கொண்டிருந்த போதும் இது குறித்து பகிரங்கமாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது குறித்து எதுவித கருத்தும் தெரிவிக்க வேண்டாமென ஐ.தே.க. அமைச்சர்கள் எம்.பி.க்களுக்கு தெரிவித்துவிட்டே பெல்ஜியம் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றதாக தெரிய வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நாட்களில் தெரிவித்து வரும் கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்புவதாகவும் நல்லாட்சி அரசின் பங்காளிகளான ஐ.தே.கட்சி, ஸ்ரீ.ல.சு கட்சிக்கிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் இதற்கு முன்னர் ஆவேசமான உரையொன்றை நிகழ்த்தியதாகவும் அப்போது அரச ஊடகங்கள் தமக்கு ஆதரவாக செயற்படாதது குறித்து குறைபட்டுக்கொண்டதாக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சரொருவர் தெரிவித்தார்.

சுயாதீன தொலைக்காட்சி ரூபவாஹினி மற்றும் அரச அச்சு ஊடகங்கள் தமக்கு ஆதரவாக செயற்படவில்லை என்றும் தமது இந்திய விஜயம் குறித்த செய்தியை இரண்டாம் பக்கத்தில் வெளியிட்ட அரசு அச்சு ஊடகம் தில்ருக் ஷி விக்ரமசிங்க இராஜினாமா செய்த செய்தியை முதலாம் பக்கத்தில் வெளியிட்டது குறித்தும் ஜனாதிபதி விசனம் தெரிவித்துள்ளார்.

தமது உரையை ஊடகங்கள் பிழையாக அறிக்கையிட்டுள்ளதாகவும் அந்த உரையில் கோத்தாபய ராஜபக் ஷவை பாதுகாக்க வேண்டுமென்று கருத்துப்பட தெரிவிக்கவில்லையென்றும் தெரிவித்த ஜனாதிபதி, கடற்படைத்தளபதிகள் சிறைச்சாலை பாதுகாப்பில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த முன்னாள் படைத்தளபதியொருவர் தம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததால் தான் அது போன்ற கருத்தை தெரிவித்ததாகவும் அந்தப் புகைப்படத்தில் கோத்தாபய ராஜபக் ஷ இருந்ததால் அவரையும் தனதுரையில் சேர்த்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி அப்போது தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக அரசாங்கம் கவிழும் என சிலர் கருதுகின்றனர். சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் நிலை உருவாகியுள்ளதெனத் தெரிவிக்கின்றனர். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *