Breaking
Mon. Nov 25th, 2024

(Balamurukan)

கடந்த வெள்ளிக்கிழமை (20/10/2016)இரண்டு யாழ்- பல்கலைக்கழக மாணவர்கள்   பொலீசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
குடும்பத்தினதும் சமூகத்தினதும் ஒளிமயமான எதிர்கால கனவுகளுடன் பல்கலைக்கழகம் வந்த அந்த இரண்டு உயிர்களினதும் இழப்பு ஈடுசெய்யமுடியாதது.
அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் அவர்களது குடும்பத்தினரதும் பல்கலைக்கழக சமூகத்தினதும் துயரங்களை  தமிழ் மக்கள் பேரவையும் பகிர்ந்து கொள்கிறது.





எவ்வகையிலும் நியாயப்படுத்தப்படமுடியாத இக்கொலைகள் , தமிழர் தாயகத்தில் உயிர்களுக்கான மதிப்பும் பாதுகாப்பும் எந்த நிலையில் தொடர்ந்தும் இருக்கிறது என்பதை மீண்டும் வெளிக்காட்டியிருக்கிறது.

சட்டத்தை காப்பாற்றுவதாக கூறிக்கொள்பவர்களே இக்கொடூர கொலைகளை புரிந்தது மட்டுமல்லாது , சம்பவம் வெளிப்படையாக அப்பகுதி மக்களுக்கு தெரிந்திருந்த போதிலும், அதனை மூடிமறைத்து வெறும் விபத்தினால் ஏற்பட்ட மரணம் என சம்பவங்களை சோடிக்க முற்பட்டமை மிகப்பாரதூரமான குற்றச்செயல் என்பதோடு, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்குப்பொறிமுறையானது, எந்த மாற்றமுமின்றி மேலாதிக்க மனோநிலையிலேயே இப்போதும் தொடர்கிறது என்பதையும் வெளிக்காட்டுகிறது.

வெளிப்படையான ஒரு சம்பவத்தையே மூடிமறைக்கமுற்பட்ட பொலிஸாரின் இச்செயற்பாடு , அவர்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணை மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

காலம் காலமாக தொடரும் வெளிப்படையான மற்றும் மறைமுகமான  மேலாதிக்க மனோபாவத்தினூடான அநீதிகளும் சட்டமீறல்களுமே, எமது மக்கள் சிறிலங்காவின் உள்ளூர் சட்ட , நீதிப்பொறிமுறைகளில் நம்பிக்கை இழக்கவும் இனியும் நம்பிக்கை வைக்கமுடியாதெனும் உறுதியான நிலைப்பாடு எடுக்கவும் காரணமாக அமைந்திருக்கிறது.

எம்மக்கள் மீது இழைக்கப்பட்ட மற்றும் இழைக்கப்பட்டுவரும் அநீதிகளிலும் அதை மறைப்பதிலுக் குற்றவாளிகளை பாதுகாப்பதிலும் சிறிலங்கா பொலிஸாரும் ஒரு பங்காளிகளேயன்றி அநீதிகளை விசாரிக்கும் 
 நேர்மையான ஒரு கட்டமைப்பு இல்லை எனும் எமது நிலைப்பாட்டையும் இச்செயற்பாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இது தொடர்பில் நேர்மையான பக்கச்சார்பற்ற விசாரணை வெளிப்படையான முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுவும்  மீள்நிகழாமை உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதுவும்  மக்களாலும் செயற்பாட்டாளர்களாலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்படவேண்டும்.
இதற்கு தமிழ் மக்கள் பேரவை தனது பூரண பங்களிப்பை வழங்கும்.


மக்கள்,  சட்டம் குறித்தும் எமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்தும் மிக தெளிவுடன் இருந்து இச்சம்பவத்தை நோக்கவேண்டும்.
இக்கொடூர கொலையும் அதை மறைக்கமுற்பட்ட முறையும் எவ்வித தயக்கமுமின்றி கண்டிக்கப்படவேண்டியவை.

இதற்காக நியாயத்துடன் குரல்கொடுக்கும் அனைத்து தரப்புகளுடனும் தமிழ் மக்கள் பேரவை கைகோர்த்து, இக்கொடூரத்தை எதிர்த்து குரல் எழுப்பும். இதற்கான நீதிக்கு பாடுபடும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *