பொத்துவில் சின்ன உல்லையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மபாஷா பள்ளிவாயல் மீட்பு நிதியத்துக்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் மீண்டும் நிதி உதவி வழங்கியுள்ளது.
குறித்த பள்ளிவாயல் பிரச்சினை தொடர்பான செய்தி கேள்வியுற்ற ஹிரா பௌண்டேஷன் செயலாளர் நாயகம் மௌலவி மும்தாஸ் மதனி மற்றும் அவரது பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர் ஒருவரும் இணைந்து இரண்டு இலட்சம் ரூபாவினை இவ்வாறு மீட்பு நிதியத்துக்கு வழங்கியுள்ளனர்.
இழுத்து மூடப்பட்டுள்ள பொத்துவில் மபாஷா பள்ளிவாயலை காணி உரிமையாளரிடமிருந்து மீட்பதற்கு 24 இலட்சம் ரூபா நிதி செலுத்தப்பட வேண்டும். இந்நிலையில்,நேற்று புதன்கிழமை இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கு மீட்பு நிதியம் கொண்டு சென்றதுடன் அதற்கு அவர் ஒரு மில்லியன் ரூபாவினை வழங்கியிருந்தார். இந்த செய்த இணையதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானதை பார்த்த ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செயலாளர் நாயகம் மௌலவி மும்தாஸ் மதனி மற்றும் அவரது பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர் ஒருவரும் குறித்த பள்ளிவாயலுக்கு உதவி செய்ய முன்வந்தனர்.
இதற்கமை இன்று வியாழக்கிழமை மபாஷா பள்ளிவாயல் மீட்பு நிதியத்தின் அங்கத்தவர்கள், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்து மீண்டும் அழைக்கப்பட்டு இரண்டு இலட்சம் ரூபா நிதி கையளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மௌலவி மும்தாஸ் மதனி மற்றும் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இந்நிதியை மீட்பு நிதியத்தின் தலைவர் எஸ்.எம்.சுபைரிடம் கையளித்தனர்.
சுமார் 13 வருடங்களாக இயங்கி வருகின்ற குறித்த பள்ளிவாயல் அமையப்பெற்றுள்ள காணி தனக்குச் சொந்தமானது என பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் கொழும்பை சேர்ந்த ஒருவரினால் வழக்குத் தொடரப்பட்டது. இதன் தீர்ப்புக்கமைய பள்ளிவாயல் காணி நிர்வாகத்திடமிருந்து பறிபோனது. பின்னர், அத்தீர்ப்புக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றத்தில் பள்ளிவசாயல் நிர்வாகம் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்தது. இங்கும் இவ்வழக்கு தோல்வி கண்டு பள்ளிவாயல் பறிபோனது.
இதனால், நீதிமன்ற கட்டளைப்படி சுமார் ஒருவருடகாலமாக பள்ளிவாயல் இழுத்து மூடப்பட்டு சமய கடமைகள் இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் குடியியல் சட்டக்கோவை பிரிவு 328இன் கீழான விண்ணப்பமொன்றை 2015.6.16ஆம் திகதி குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான தீர்ப்பு சுமார் ஒருவருடத்துக்கு பின்னர் கடந்த ஜுன் 16ஆம் திகதி வழங்கப்பட்டு பள்ளிவாயல் மீண்டும் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜுலை 28ஆம் திகதி வாதி பிரதிவாதிகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட சமரசப் முயற்சி காரணமாக சுமார் 6 மாதத்திற்கிடையில் குறித்த பள்ளிவாயல் அமையப் பெற்றுள்ள காணி உரிமையாளருக்கு 24 இலட்சம் ரூபா பணத்தை கொடுக்க உடன்பட்டுள்ளனர்.