மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு கிராமத்தில் நேற்று(18)
செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை
ஏற்பட்டுள்ளதோடு கடற்படையினர் பொது மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
சவேரியார்புரம் மற்றும் அரிப்பு கிராமத்தில் கடந்த சில தினங்களாக திருட்டுச்சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் நேற்று (18) செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் அரிப்பு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் சிலர் செல்ல முற்பட்ட போது வீட்டில் உள்ளவர்கள் கண்டு சத்தமிட்டுள்ளனர். இதன் போது குறித்த நபர்கள் உடனடியாக அருகில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைந்திருந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது ஒருவர் பிடிப்பட்டதோடு கடும் தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்பு மேலும் ஒரு நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இதன் போது அங்குள்ள கடற்படையினர் குறித்த நபரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இதனால் கிராம மக்களுக்கும் கடற்படைக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில் கடற்படையினர் மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.
பிடிக்கப்பட்ட குறித்த நபர் கடற்படை வீரர் என தெரிய வந்துள்ள நிலையில் அரிப்பு கிராம மக்கள்கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். மக்களினால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட கடற்படை வீரரை கிராம மக்கள் அரிப்பு ஆலயத்தில் சிறை பிடித்து வைத்தனர். எனினும் குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாது என்றும் மன்னார் நீதவானிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, சட்டத்தரணிகள், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இந்த நிலையில் சிலாபத்துறை பொலிஸார் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்றனர்.நீண்ட நேரம் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில்
மக்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையின் பலனாக மக்களினால் சிறை
பிடிக்கப்பட்ட கடற்படை சிப்பாயி சிலாபத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக
வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து அங்கு அமைதி நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கடந்தசில தினங்களுக்கு முன் அரிப்பு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் திருட்டுச்சம்பவம் இடம் பெற இருந்த போது வீட்டினுள் வந்த மர்ம நபரை துரத்திய போது குறித்த நபர் கொண்டு வந்த பாரிய கத்தியினால் வெட்டிய போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த நிலையிலே மீண்டும் ஒரு சம்பவம் இடம்பெற இருந்த நிலையில் அரிப்பு கிராம மக்கள் ஒன்றினைந்து குறித்த கடற்படை சிப்பாயியை பிடித்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.