(அனா)
இலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி நூலக அணுகல் சேவை நேற்று (18.10.2016) பேத்தாழை பொது நூலகத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 2009இல் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகள் கொண்ட பொதுநூலகம் ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 2011-12-10 அன்று கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண சபையின் பிரதான அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்வோடு, கிழக்கு மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது இந் நூலகம்.
அன்று முதல் இன்றுவரை பல்வேறு பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, பிரதேசத்தின் நூலக சேவையில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவண்ணம் உள்ளது. இதன் பயனாக 2013ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள பொது நூலகங்களுக்கான தரப்படுத்தல் போட்டியில், பிரதேச சபைகளின் கீழ் இயங்குகின்ற பொதுநூலகங்களில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. அதன் பின் கடந்த 2014ஆம் ஆண்டில் தரம்-2 நூலகமாக தரமுயர்த்தப்பட்ட பேத்தாழை பொதுநூலக வரலாற்றில், பொன்னேட்டில் பொறிக்கத்தக்க நிகழ்வாக ‘இலங்கை பொதுநூலகங்களில் முதன்முறையாக இணையவழி நூலக அணுகல் சேவை’யினை உத்தியோக பூர்வமாக தொடங்கியுள்ளது.
பேத்தாழை பொதுநூலகமும், ‘விபுலானந்தா வாசகர் வட்டமும்’ இணைந்து நடாத்திய இந்நிகழ்வுக்கு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே..சித்திரவேல்;, அதிதிகளாக இணையவழி நூலக அணுகல் சேவைக்கான மென்பொருளினை நிறுவி, அதனை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு உறுதுணை புரிந்து கொண்டிருக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி நூலகர் எம்.என்.ரவிக்குமார், கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி நிரூபா பிருந்தன் கல்குடா வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் உத்தியோக பூர்வமாக இச்சேவையினை ஆரம்பித்து வைத்தார் அதனைத்தொடர்ந்து, பேத்தாழை நூலக உதவியாளர் எம்.பிரகாஷ்இச்சேவை குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன அதனைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி நூலகர் எம்.என்.ரவிக்குமாருக்கு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
விழாவில் பேசிய அதிதிகள் “இன்றைய விழாவில் தாம் கலந்து கொள்வதையிட்டு பெருமை கொள்வதாகவும், தாங்கள் பணிபுரிகின்ற இப்பிரதேசத்தில் இது போன்றதொரு சேவையினை இலங்கையில் முதன் முதலாக ஆரம்பித்துள்ள பொதுநூலகம் என்ற பெருமையினை பேத்தாழை பொதுநூலகம் பெற்றுக் கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இத்தகைய பெருமை மிக்க பெறுமதி வாய்ந்த பொது நூலகத்திற்கு மாணவர்களையும் வாசகர்களையும் வரவழைப்பதற்கு தங்களாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உதவுவதாக உதவி வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோர் உறுதி அளித்தனர் “இச்சேவையினை விஸ்தரிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை செய்துதரும் பட்சத்தில் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் போன்றவற்றை வாசகர்களுடன் தன்னியக்க முறையில் மேற்கொள்ள முடியும் எனவும், இலங்கை நூலக வரலாற்றில் பொதுநூலகங்களுக்கும் வாசகர்களுக்குமான தகவல் சேவை முறையில் பாரியளவிலான பணியினை பேத்தாழை பொதுநூலகத்தினால் வழங்க முடியும்” எனவும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட உதவி நூலகர் எம்.என்.ரவிக்குமார் தனதுரையில் தெரிவித்தார்.
இறுதியாக விபுலானந்தா வாசகர் வட்டத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினரான திரு.எஸ்.சந்திரமோகன் நன்றியுரை வழங்கினார் “பேத்தாழை பொதுநூலகத்தின் சாதனைமிக்க இத்தருணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்தார் அத்தோடு இத்தனை சாதனைகளுக்கும் பெருமைகளுக்கும் காரணமான கிழக்கு மாகாணசபையின் முதல் முதலமைச்சரும், தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எஸ்.சந்திரகாந்தனுக்கு நூலக சமூகம் சார்பிலும், பிரதேச மக்கள் சார்பிலும் மேலான நன்றிகளைக் கூறிக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.