Breaking
Mon. Nov 25th, 2024

(கரீம் ஏ.மிஸ்காத்)

தேசிய போதனாவியல் ஆசிரியர் நியமனத்திற்கான ஆசிரியர் சம்பள அளவுத்திட்டத்தில் இம்முறையும் தவறு காணப்படுவதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

இது குறித்து இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குறிப்பிடுவதாவது.

கல்வி அமைச்சு கடந்த 04ம் திகதி அலரிமாளிகையில் வைத்து, 3225 கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கியுள்ளது. இதன்போது அவர்களுக்கு அமைச்சினால் வழங்கப்பட்ட நியமனக்கடிதங்களே கையளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இவர்கள் ஆசிரியர் சேவையின் 3-1(ஆ) தரத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்த நியமனக்கடிதத்தின் 11ஆவது பந்தியில் அவர்களுக்குரிய சம்பளத்திட்டமும், அவர்கள் நியமனத்தைப் பொறுப்பேற்ற தினத்தில் அமர்த்தப்பட வேண்டிய சம்பளப்படி நிலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பந்தியில் சம்பள அளவுத்திட்டத்தை சரியாகக்குறிப்பிட்டுள்ள அமைச்சு, அமர்த்தப்பட வேண்டிய சம்பள படிநிலையை பிழையாக 9 எனக்குறிப்பிட்டு, அதன் பிரகாரம் மாதாந்தம் 30,300 ரூபா வழங்கப்படும் எனக்குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2014.10.23 ஆம் திகதி வெளியிடப்பட்டு, 2008.07.01 முதல் அமுல்படுத்தப்பட்டுவரும் மீளமைக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவைப்பிரமாணக்குறிப்பில் சம்பளம் பற்றிக் குறிப்பிடப்படும் 5ஆவது பந்தியில் வரும் குறிப்பு 1இல் 2015.01.01ஆம் திகதி தொடக்கம் ஆசிரியர் சேவையில் 3-1(ஆ) தரத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படும் ஆசிரியர்களின் ஆரம்பச் சம்பளம் ரூபா 15,000(பொ.நி.சு இலக்கம் 03-2016இல் ரூபா 31,060)க்கு உரிய சம்பள அளவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சம்பள அளவுத்திட்டத்தின் 11ஆவது சம்பளப்படி நிலையாகும்.
இத்தவறு காரணமாக இந்த ஆசிரியர்கள் இரண்டு சம்பளப்படிநிலைகளை இழக்கின்றார்கள். அரசாங்க சேவை அணைக்குழுவின் உத்தரவின் பிரகாரம் மத்திய கல்வி அமைச்சு 2014இல் அனுமதித்ததை 2016இல் மறுக்கலாமா?

எனவே, உடனடியாக இந்நியமனக்கடிதத்தின் 10ஆவது பந்தியைத் திருத்தி, சகல ஆசிரியர்களும் சரியான 11ஆவது படிநிலைக்குரிய 31,060 ரூபா சம்பளத்தை ஆரம்பச் சம்பளமாகப் பெறும்வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு உரிய பணிப்புரையை வழங்க வேண்டும் என்பது சங்கத்தின் கோரிக்கையாகும்.

மேலும், கடந்த வருடத்தில் வழங்கப்பட்ட நியமனத்திலும் இத்தவறு இடம்பெற்று, சுட்டிக்காடப்பட்டதையடுத்து ED/2/29/2/2/5(iii) ஆம் இலக்க கடிதம் மூலம் திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது எனவும் இச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *