புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில், வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் பரீட்சையில் சித்தியடையாத பெரும்பாலான மாணவர்கள் பாரிய மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் படங்களை காட்சிப்படுத்த பெற்றோர், பாடசாலை மட்டத்திலோ பணஅறவீடு செய்து காட்சிப்படுத்துவதை இந்த வருடத்திலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு கல்வியமைச்சு அவசரமாக சுற்று நிரூபமொன்றை நேற்று சகல கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
ஏதேனும் பாராட்டினை மேற்கொள்ள வேண்டுமாயின் அது ஏனைய மாணவர்களை பாதிக்காத வகையில் பாடசாலையினுள் அடங்கும் நிகழ்ச்சித் திட்டத்தினுள் மாத்திரம் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை தேர்ச்சியடைந்தவர்கள் எனக்கருதி அவர்களது படங்களை பெரிதாக காட்சிப்படுத்துவதனால் அடுத்த கட்ட மாணவர்களின் மனநிலை வெகுவாக பாதிக்கப்படுவது உணரப்பட்டுள்ளது.
காலப்போக்கில் புலமைப்பரிசில் என்னென்ன காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது எதிர்பார்க்கப்பட்ட இலக்கை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அடைந்ததாகவே கருதமுடிகிறது.
தேர்வு வகைக்குட்பட்ட புலமைப் பரீட்சையினுள் தேர்ச்சி பெறுபவர்கள் என்றில்லை. ஒருவருடத்திற்கு உதவிப்பணம் பெறுவதற்கும் உயர்பாடசாலை அனுமதி பெறுவதற்கும் தகுதியானவர் என்ற தகுதியை மட்டுமே பெறுகின்றார்கள்.
சிலவேளை இவர்களைக்காட்டிலும் ஏனையவர்கள் க.பொ.த சா.த மற்றும் உ.த பரீட்சைகளில் கூடுதலான சித்திகளை காட்டுகின்றனர்.
இவ்வாறான கல்வியமைச்சின் சுற்றுநிரூபத்தை கல்வியமைச்சின் செய்லாளர் டபிள்யு.எம்.பந்துசேன அனுப்பியுள்ளார்.