Breaking
Mon. Nov 25th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் ஆசிரியர்களின் தேவை உணரப்படுகிறது.கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தினுள் உள் வாங்குவதன் மூலம் இப் பிரச்சினைகளுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.அது மாத்திரமல்லாது தூர இடங்களுக்கு நியமனம் பெறுபவர்கள் பொருளாதார ரீதியான சிக்கலுக்கும் ஆளாவர்.இவ்வாறான சிந்தனைகளின் அடிப்படையில் மு.கா நேற்று 4ம் திகதி நியமனம் பெற்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைத்து ஆசிரியர்களையும் கிழக்கு மாகாணத்தில் உள் வாங்கும் முயற்சியை செய்துள்ளதாகவும் யாரும் சிறிதேனும் சலனப்பட வேண்டாம் என்ற அறிவிப்பையும் விடுத்திருந்தது.

தற்போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அப்படியானால் மு.காவின் இம் முயற்சி தோல்வியை தழுவியுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.இவ்விடயத்தில் மு.கா உள ரீதியாக முயற்சி செய்திருப்பின் அம் முயற்சி பாராட்டப்பட வேண்டியதென்பதை மறுப்பதற்கில்லை.இவ்விடயத்தை மு.கா சரியான விதத்தில் சாதிக்க முயன்றுள்ளதா என்பது தான் இங்கு ஆராயத்தக்க விடயமாகும்.இந் நியமன விடயத்தில் மு.கா கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் பேச்சு வார்த்தை நடாத்தியிருக்க வேண்டும்.

அதன் பிறகு அவர் இவ்விடயத்தில் உறுதிமொழி அளித்த பிறகே “நீங்கள் யாரும் சலனப்பட வேண்டாம்” என்ற அறிவிப்பை மு.காவினர் விட்டிருக்க வேண்டும்.கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதில் முரண்பட்டிருப்பின் அதனை அரசின் உயர் மட்டங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் தீர்த்துக்கொள்ள முயற்சித்திருக்க வேண்டும்.தற்போது மு.காவினர் பிரதமரிடம் இது தொடர்பில் பேசவுள்ளதாக கூறியுள்ளமை இவர்கள் அரசின் உயர் மட்டத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்லாமையை அறிந்துகொள்ளச் செய்கிறது.

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பின் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வேறு எங்கும் நியமிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.இவர்கள் இது தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர் போன்ற அரசின் உயர் மட்டங்களுக்கு கொண்டு சென்றிருப்பின் நிச்சயம் கல்வியமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருப்பார்.இங்கு ஒரு விடயத்தை அறிந்து கொள்ளலாம்.இவர்கள் சரியான முறையில் முயலாது சிறு முயற்சி ஒன்றை செய்துவிட்டு பேஸ்புக்கில் பதிவிட்டு தங்கள் மதிப்பெண்களை அதிகரிக்க முயன்றுள்ளனர்.அல்லாது போனால் அகில விராஜ் காரியவசம் இவர்களை நம்ப வைத்து கழுத்தருத்திருக்க வேண்டும்.இப்படித் தான் கல்முனை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கொரள தங்களிடம் இது நடைபெறாதென உறுதி மொழி அளித்துள்ளதாக கூறிய மறு கணம் அப் பணியகம் அம்பாறைக்கு சென்ற சிறு பிள்ளைத் தனமான அரசியலைலைத் தான் மு.கா மேற்கொண்டு வருகிறது.

ஒரு அமைச்சரிடம் சென்று ஒரு குழுவினர் ஏதாவதொன்றை கோரும் போது அதனை குறித்த அமைச்சர் செய்து தருவதாக கூறுவது வழமை.இவ்வாறான சமாளிப்புக் கதைகளை நம்பிக்கொண்டு மு.கா இவ்வாறான வாக்குறுதிகளை வழங்குகிறதென நினைக்கின்றேன்.கிழக்கு மாகாணத்திற்கு மொத்தம் 192 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 123பேர் (64வீதம்) தமிழ் மொழி மூல ஆசிரியர்களும்  69 (36வீதம்)சிங்கள மொழி மூல ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கை போத்துவிலிலுள்ள ஆசிரியர் எண்ணிக்கையை கூட நிவர்த்திக்காது.கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் விகிதத்தையும் சிங்கள மொழி மொழி பேசும் மக்களின் விகிதத்ததையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இதில் பேரின அழுத்தம் எந்தளவுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.எமது அரசியல் வாதிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்?

தற்போது மு.கா குறித்த நியமனம் பெற்ற ஆசிரியர்களை குறித்த பாடசாலைகளுக்கு சற்று நிதானித்துச் செல்லுமாறு கூறியுள்ளது.பாடசாலைகளில் இணைந்த பின்பு அதனை இன்னுமொரு இடத்திக்கு மாற்றுவதில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளமை இதற்கான காரணமாக இருக்கலாம்.இந்த நேரத்தில் என் நினைவுக்கு வந்த ஒரு விடயம் தான் அண்மையில் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு மேல் மாகாணத்தில் நியமனம் வழங்கப்பட்ட விடயமாகும்.இதன் போதும் மு.காவினர் இவ்வாறான வாக்குறுதிகளை வழங்கி அவர்களது தகவல்களை சேகரித்திருந்தனர்.இந்த விடயத்தில் மு.கா எந்த வித முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டதாக அறிய முடியவில்லை.இவ்வாறு மு.கா இந்த விடயத்தை கையாள்கிறதா என்ற சிந்தனையும் வராமலில்லை.எது எவ்வாறு இருப்பினும் இந்த விடயத்தை அனைத்து முஸ்லிம் தரப்புகளும் இணைந்து கையாள வேண்டும்.இவ்விடயத்தை கூட்டாக இணைந்து கையாளாது தனித்தனியாக கையாள நினைப்பதும் இவ்வாறான விடயங்களின் தோல்விக்கு பிரதான காரணமாகும்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *