(அஷ்ரப் ஏ சமத்)
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரேபிய அரசாங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டு கையளிக்கப்படாதுள்ள வீட்டுத் திட்டத்தை இந்த வருட இறுதிக்குள் மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் வாழும் மக்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப இவ் வீடுகளை பகிர்ந்தளிக்க தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அம்பாறை மாவட்ட செயலாளர் துசித்த பீ. வணிகசிங்க நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ் வீடமைப்புத்திட்டம் பகிர்ந்தளிக்கப்படாதுள்ளமை பற்றி கடந்த காலங்களில் பல்வேறு ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன் பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. சர்வதேச ஊடகங்களும் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தன.
அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ் வீடமைப்புத் திட்டத்தினை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி பகிர்ந்தளிக்கும் படி எனக்கு அறிவித்துள்ளார்.
அதற்கமைவாக அம்பாறை மாவட்டத்தில் வாழும் மூன்று சமூகங்களுக்கும் இவ் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும். அத்துடன் இவ் வீடமைப்புத்திட்டம் சம்பந்தமாக கடந்த வாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நான் கலந்துரையாடினேன். எதிர்வரும் டிசம்பா் 31ஆம் திகதிக்கு முன்னர் இதிலுள்ள 500 வீடுகளும், பாடசாலை, வைத்தியசாலை, பள்ளிவாசல் என்பவும் மக்களிடம் கையளிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
சவூதி அரசினால் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் வழங்கப்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சவூதி வீடமைப்புத் திட்டம் கடந்த 8 வருடங்களாக எவருக்கும் பகிர்ந்தளிக்கப்படாது காடு வளர்ந்து அழிவடைந்து காணப்படுகிறது.
கடந்த 2004 சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அப்போது வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த பேரியல் அஸ்ரபின் முயற்சியினால் 1000 மில்லியன் ரூபா பெறுமதியான ”கிங் ஹூசைன் வீடமைப்புத் திட்டம்” நிர்மாணிக்கப்பட்டது.
இவ் வீடமைப்புத் திட்டம் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி சகலருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனக் கோரி அச்சமயம் சிஹல உறுமய கட்சியினால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா இத் திட்டத்தினை மூன்று இனத்திற்கும் அவரவர்களது இன விகிதாசாரத்திற்கேற்ப சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் படி தீர்ப்பு வழங்கினார்.
இத் தீர்ப்பு வழங்கப்பட்டு 8 வருடங்களாகின்ற போதிலும் இதுவரை வீடுகள் பகிர்ந்தளிப்பதில் இழுபறி நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.