கடந்த ஞாயிறு 02-10-2016 காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் முச்சக்கர வண்டி போக்குவரத்தில் உரிமையாளர்களும் சங்கங்களும் சிறப்பாக தமது சேவையை எமது மக்களுக்கு வழங்கியதை தாம் பாராட்டுவதாகவும், அதேவேளை சங்கங்களில் சில குறைபாடுகள் இருப்பது சம்மந்தமாக பொதுமக்கள் மற்றும் உரிமையாளர்களிடம் இருந்தும் தமக்கு பல முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளதாகவும், அந்த வகையிலே வடமாகாண போக்குவரத்து அதிகாரசபையை உருவாக்கியவுடன் அனைத்து மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்களை ஒன்று திரட்டி அதிகார சபையின் கீழ் இயங்க வைக்கும் நோக்கோடு இவ்வாறான கலந்துரையாடலை அனைத்து மாவட்டங்களிலும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதன் முதல்கட்டமாகவே மன்னார் மாவட்டத்தில் இவ் விசேட கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, குறிப்பாக சங்கங்களின் நிருவாக சீரின்மை, பழைய புதிய நிருவாகங்களுக்கிடையேயான முரண்பாடுகள் மற்றும் ஒத்துழைக்காமை போன்ற பிரச்சனைகள் காணப்படுவதால் விரைவில் சங்கங்களை புனரமைக்கும் நடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.
குறித்த விசேட கலந்துரையாடலை வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஏ.நிக்கோலாஸ்ப்பிள்ளை தலைமையேற்று நடாத்தினார், அத்தோடு நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர், முசலி பிரதேச சபையின் செயலாளரின் பிரதிநிதி, மன்னார் பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். இக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தமது கருத்துக்களையும் தேவைகளையும் அதிகாரசபையின் தலைவருக்கும் அமைச்சருக்கும் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.