Breaking
Sun. Nov 24th, 2024

நல்லாட்சி அரசாங்கம் இனவாத சக்திகளுக்கு இடமளிக்காமல் அனைத்தையும் இழந்து நிற்கும் சமூகத்திற்கு ஒரு நிரந்தர தீர்வினை இந்த வருடத்திற்குள் வழங்க முன்வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாங்கள் அழிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள், காணாமல் போகச் செய்யப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள். நாங்கள் கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகமாவோம். கல்வியால் வளர்ந்த சமூகமாவோம்.

மூன்று தசாப்த காலத்திற்கு முன்பு இலங்கையில் எந்த மாவட்டத்தை எடுத்தாலும் அங்கு அனைத்து உயர் பதவிகளிலும் இருந்தவர்கள் எமது தமிழர்கள் தான். நாங்கள் கல்வியால் எழுந்த சமூகமாவோம். இன்று நாங்கள் அதனை இழந்திருக்கின்றோம்.

நாம் உரிமைக்காக இழக்கக்கூடிய அனைத்தையும் இழந்திருக்கின்றோம். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இந்த சமூகம் இந்த தேசத்தில் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்கவேண்டுமானால் அது கல்வியால் மாத்திரமே சாத்தியமாக முடியும்.

கல்வியால் மாத்திரமே தனித மனித வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க முடியும். சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும். தற்போது ஒரு அரசியலமைப்பு மாற்றம் நடந்துகொண்டிருக்கின்றது.

இதில் நாங்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு, மூன்று தசாப்த காலமாக எமது மக்கள் இழந்த இழப்புகளுக்கான நிவாரணம் கிடைக்குமென்று நூறு சதவீதம் நாங்கள் கூறமுடியாதுள்ளது.

இந்த நாட்டின் சிறுபான்மையினமான நாங்கள் கூறுவதை இந்நாட்டின் பெரும்பான்மை சமூகமும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கேட்க வேண்டுமானால் நாம் கல்வியில் உயர் நிலைக்கு வரவேண்டும்.

கல்வியால் மாத்திரமே அதை சாதிக்க முடியும். ஆகவே எந்த சூழ்நிலையிலும் எமது பிள்ளைகளுக்கு நாம் கல்வியை வழங்குவதில் பின்நிற்கக்கூடாது.

இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியதில் இந்நாட்டின் சிறுபான்மையின மக்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கின்றது. இந்த அரசின் மூலமாக ஒரு சரியான தீர்வு கிடைக்குமென மக்கள் இன்றுவரை நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகையால் இந்த அரசோடு சில விடயங்களில் நாங்கள் ஒத்துப்போகின்றோம். எங்களால் உருவாக்கப்பட்ட இந்த கூட்டு அரசை, நல்லாட்சி அரசை குழப்பாமல் இந்த அரசிடமிருந்து எமது மக்களுக்கு தேவையான சிலவற்றை பெற்றேயாக வேண்டும் என்பதற்காக இராஜதந்திர நகர்வோடு செயற்பட்டுவருகின்றோம்.

கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் நாங்கள் மிக மோசமான அழிவுகளை சந்தித்திருக்கின்றோம். ஆனால் இன்று சுதந்திரமான சூழல் இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் மிகப்பெரிய மாவட்டமாகும். மயிலந்தனை, மாதவனை போன்ற பகுதிகளில் பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலக்காணிகள் வேறு சமூகத்தினரால் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள அரசியல்வாதிகளால் அபகரிக்கப்பட்டுள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தில் இன்னும் சில விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எல்லைக் காணிகளை அபகரிப்பது திட்டமிட்ட குடியேற்றங்களை செய்வது போன்ற விடயங்களை இந்த அரசோ அல்லது அரசோடு சேர்ந்த வேறு யாராவது செய்தால் நல்லாட்சி அரசு மக்களிடம் இருக்கின்ற நம்பிக்கையை இழந்துவிடும்.

சிங்கள மக்கள் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக எந்த இடத்தில் குடியிருந்தார்களோ இந்த இடத்தில் அவர்கள் குடியேறுவதற்கு நாங்கள் அனுமதிக்கின்றோம். இந்த நாட்டில் நாங்கள் இனவாதமோ மதவாதமோ பிரிவினைவாதமோ பேசவில்லை.

எமது தமிழ் மக்களை பொறுத்தவரை அவர்கள் எந்த இடத்திலுமே அத்து மீறி ஒரு இஞ்சி காணிகளை கூட பிடித்ததில்லை. எந்த வணக்க ஸ்தலத்தினையும் உடைக்கவில்லை.

ஆனால் ஒரு சில இனவாத தலைமைத்துவங்கள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தினை எற்படுத்துவதற்கு மீண்டும் இந்த நாட்டினை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆற்றை ஓடவைப்பதற்கு பொதுபலசேனா போன்ற பௌத்த அமைப்புகள் ஊடாக இந்த நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தி இனமுறுகளை ஏற்படுத்தி தான் ஆட்சிக்கு வர மகிந்த முற்படுகின்றார்.

பொதுபலசேனா பௌத்த பிக்கு ஒருவர் தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு செல்லவேண்டும் என்று கூறினார். தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு போகவேண்டுமானால் வட நாட்டில் இருந்து இந்த நாட்டுக்கு வந்த சிங்கள மக்கள் வடநாட்டுக்கு செல்லவேண்டும்.

தமிழ் மக்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகளாகும். இந்த நாட்டில் நாங்கள் மதவாத்தினையோ இனவாதத்தினையோ பிரதேச வாதத்தினையோ விரும்பவில்லை. எங்களது மக்களுக்கு தேவையான நியாயபூர்வமான நீதியை கேட்டுநிற்கின்றோம்.

ஆனால் அரசாங்கம் அதனை இன்னும் வழங்கவில்லை. அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கல்லடியூர் என்னும் பகுதியில் 300 வருடங்கள் பழமையான அம்மன் ஆலயம் ஒன்று உடைக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் அப்பகுதியில் அருகில் விகாரையும் உள்ளது. அந்த விகாரைக்கு எந்த தமிழ் மக்களும் ஒரு கல்லைக்கூட வீசியிருக்கமாட்டார்கள்.

இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்கள் எந்த வணக்கஸ் தலத்தினையும் உடைத்ததும் கிடையாது. யாரது காணியையும் அத்துமீற பிடித்ததும் கிடையாது. இதனை அனைவுரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

மற்றவர்களை மதிக்கும் தன்மையை ஏற்படுத்தவேண்டும். அது இல்லாத காரணத்தினாலேயே இந்த நாடு மிக மோசமான நிலைக்கு சென்றது. பல்கலைக்கழக தரப்படுத்தலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த நாட்டில் அகிம்சை ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாற்றம்பெற்றது.

இந்த நாட்டில் இனவாதம் பேசுகின்றவர்கள், மீண்டும் இந்த நாட்டில் இனவாதத்தினை உருவாக்கி இந்த நாட்டினை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கின்ற நிலைமையினை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இவ்வாறான இனவாத சக்திகளுக்கு இடமளிக்காமல் அனைத்தையும் இழந்து ஏக்கத்தோடு உள்ள சமூகத்திற்கு ஒரு நிரந்தர தீர்வினை இந்த வருடம் முடிவதற்குள் நிச்சயமாக வழங்கவேண்டும்.625-0-560-320-160-600-053-800-668-160-90-1

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *