Breaking
Fri. Nov 22nd, 2024

(எம்.ரீ. ஹைதர் அலி)

கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட்  அவர்களின் பணிப்பின் பேரில் அவரின் பங்குபற்றுதலுடன், காத்தான்குடி நகரசபையின் எல்லைக்குள் செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கலந்துரையாடும் பொருட்டும் கல்விமான்கள், மதத்தலைவர்கள் உட்பட அனைத்து துறைசார்ந்தவர்களையும் உள்ளடக்கியதாக புதிய அபிவிருத்தித் திட்டமிடல் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டும் அபிவிருத்திக் குழு அங்குரார்ப்பண கூட்டமொன்று அன்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி நகரசபையின் செயலாளர் SMM. ஸாபி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபீஸ் நசீர் அஹமட், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் ஏனைய அதிதிகளாக நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் இணைப்பாளர் ULM. முபீன் (BA), காத்தான்குடி நகரசபைளின் முன்னால் முதல்வர் மர்சூக் அஹமட்லெப்பை, காத்தான்குடி பிரதேச செயலாளர் முசம்மில் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்…

முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி பணிகள் அனைத்தும் அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காகவோ அல்லாது மக்களின் நலனை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டும். நாங்கள் கிழக்கு மாகாண சபை மூலம் சுமார் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா செலவில் சின்னத்தோனாவினுடைய புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். நாங்கள் நினைத்திருந்தால் அந்த பணத்தை கொண்டு 10 இலட்சம் ரூபா செலவிலான 11 வீதிகளை அமைத்திருக்க முடியும். ஆனால் ஒவ்வொரு மழைக் காலங்களிலும் வெள்ள நீரினால் மூழ்கி போகும் அப்பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு அத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி சின்னத்தோனா புனரமைப்பினை நாங்கள் முன்னேடுத்திருக்கின்றோம். மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

காத்தான்குடி மெரைன் ரைவ் வீதி அபிவிருத்திக்காக மாகாண சபை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது ஒரு கோடி ரூபாய் செலவில் 5 மீற்றர் அகலமுடைய 520 மீற்றர் நீளமான கொங்ரீட் வீதி அமைக்கப்படுகின்றது. மீதமுள்ள 1.5 கிலோமீற்றர் நீளமான வீதியினை கிழக்கு மாகாண சபை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஐ ரோட் திட்டத்தினூடாக உள்வாங்கி அதற்குரிய அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே அதனை மிக விரைவில் காபெட் வீதியாக அபிவிருத்தி செய்யவுள்ளோம்.

மேலும் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளின் பேரில் உள்ளூராட்சி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் ஐ ரோட் திட்டத்தினூடாக காத்தான்குடிக்கு 7.5 கிலோ மீற்றர் காபெட் வீதி அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த வகையில் முஹைதீன் ஜும்மா பள்ளி வீதி 1.5 கிலோமீற்றர், விடுதி வீதி 400 மீற்றர், பெண்கள் சந்தை வீதி (மத்திய வீதி) 400 மீற்றர், டீன் வீதி 1.6 கிலோ மீற்றர், அப்றார் வீதி 700 மீற்றர் என்பன காபெட் வீதிகளாக புனரமைப்பு செய்வதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்று தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலம் அதற்கான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் அந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.

மேலும் வைத்தியசாலை மற்றும் பாடசாலை அபிவிருத்திக்காக இந்த வருடத்திற்கு மாத்திரம் சுமார் 73.36 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சினூடாக ஒரு கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி அதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன. பாடசாலை அபிவிருத்திக்காக தனிப்பட்ட ரீதியில் மாத்திரம் சுமார் 109.6 மில்லியன் ரூபாய்களை இந்த வருடம் மாகாண சபை மூலம் ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். இன்னும் 10 கோடி ரூபாய் அளவிலான நிதியினை கொண்டுவருவதற்கு கௌரவ முதலமைச்சர் அவர்கள் முயற்சியினையும் அதிகாரத்தினையும் எமக்கு பெற்றுத்தந்திருக்கின்றார்கள்.

இவற்றை நாங்கள் சுட்டிக்காட்டுவதன் நோக்கம் நடைபெறுகின்ற அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் வெளிப்படைத்தன்மையுடன் இடம்பெற வேண்டும். தமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் தொடர்பாக மக்கள் அறிந்து கொள்ளவேண்டும். தற்போது எமது நாட்டில் தகவலறியும் சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே எந்தவொரு அபிவிருத்தி பணிகள் பற்றியும் மக்கள் தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. மக்களினுடைய நிதியில் மக்களுக்காக செய்யப்படுகின்ற அபிவிருத்திகள் முழுக்க முழுக்க மக்களின் ஆலோசனைகளுடனும் அவர்களின் ஆதரவுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் போதே அந்த அபிவிருத்தி மக்களுக்கு பிரயோசனமுள்ளதாக அமையும் என்று தெரிவித்தார்.unnamed-2

இந்நிகழ்வினை தொடர்ந்து உள்ளூராட்சி மாதத்தை முன்னிட்டு  காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கான போசாக்கு உணவுப்பொதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ்உணவு பொதிகளை கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபையின் செயலாளர் SMM. ஸாபி, காத்தான்குடி பிரதேச செயலாளர் முசம்மில் ஆகியோர் வழங்கி வைத்தனர்.unnamed-1

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *