Breaking
Sun. Nov 24th, 2024
கடந்த 21ம் திகதி மூன்று ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள வடக்கு மக்களின் பிரதிநிதிகள் சபை, அந்த மூன்றாண்டு காலத்தினை பயனுள்ள விதத்தில் கடந்துள்ளதா? என்ற கேள்வி தமிழ் மக்கள் அனைவரினதும் மனங்களில் எழுந்து நிற்கிறது.

யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, இன்றும் வறுமைநிலையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைக் கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மாகாண சபையின் செயற்பாடுகளை பயனுள்ள விதத்தில் உணர்ந்துகொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களும் மாகாணசபையினால் முன்னெடுக்கப்படவில்லை என்பது வேதனையான விடயமாகும். கல்வி, சுகாதாரம், போக்குவரத்துப் பாதைகள் மற்றும் பயணிகள் வசதிகள், மீன்பிடித்துறை, வனவளம், வாழ்வாதாரத் திட்டங்கள் என்று பெரும்பாலான துறைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் எதனையும் உணர்ந்துகொள்ள முடியவில்லை. மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின்கீழ் முன்னெடுக்கப்படுகின்ற சிறிய அளவிலான செயற்திட்டங்கள் மாவட்ட அபிவிருத்தியில் மாற்றங்களைக் கொண்டுவர போதுமானவை அல்ல என்பதும் யாவரும் அறிந்த விடயம்.

மாவட்டத்தின் அபிவிருத்தியை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. மாகாண, மாவட்ட மட்ட அதிகாரிகளின் அக்கறையும், உழைப்பும் இன்னும் அதிகளவில் தேவைப்படுவதாக உள்ளது. அர்ப்பணிப்புடனும், தூரநோக்குடனும், சமூக அக்கறையுடனும் பணிபுரிகின்ற ஒரு பகுதி அதிகாரிகளின் செயற்பாடுகளை மதிப்பிறக்கம் செய்யும் வகையில் செயற்படுகின்ற பாரபட்சம், ஊழல், அசமந்தப் போக்கு போன்ற பண்புகள் நிறைந்த இன்னொரு தொகுதி அதிகாரிகளும்கூட இன்னமும் மாகாணசபையின் அதிகார மட்டங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவ்வாறான நிலைமைகளை சீர்படுத்த மாகாண முதலமைச்சர் தகுந்த அதிகாரிகளின் உதவியுடனும் சம்பந்தப்பட்ட பகுதி மாகாணசபை உறுப்பினர்களின் ஆலோசனையுடனும் நடவடிக்கை குழுக்களை உருவாக்கி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி விடயங்கள் மட்டுமன்றி, சுன்னாகம் குடிநீர்ப்பிரச்சினை, இரணைமடுகுள நீர்விநியோகத் திட்டம், மருதங்கேணி கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம், வடக்கின் பொருளாதார மத்திய நிலையம், திருக்கேதீஸ்வர ஆலய நில அபகரிப்பு பிரச்சினை போன்ற பல விடயங்கள் தீர்வை நோக்கி முன்னகராமல் இருப்பதற்கு ஒருவகையில் மேற்கூறப்பட்ட நிலைமைகளே காரணங்களாகும்.

மாங்குளத்தில் வட மாகாணசபையின் தலைமை பணிமனை வளாகம் என்ற பழமையான மாகாண சபைத் தீர்மானம் கூட கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவே நாம் உணர்கின்றோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விக்கான வளங்களின் ஒதுக்கீடு, வன இலாகாவின் அடாவடித்தனமான நில அபகரிப்புகள், வெளி மீனவர்களின் படையினரின் உதவியுடனான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் மீனவர் குடியிருப்புகள், மாகாவலி அதிகாரசபையின் கபடத்தனமான காணி அபகரிப்புகள், ஓட்டுத் தொழிற்சாலை போன்ற தொழிற்துறை மூலங்களில் வலிந்து மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் தலையீடுகள் என பலதரப்பட்ட நெருக்குவாரங்கள் தமிழ்மக்களை மேலும், மேலும் வறுமைக்குள்ளும், விரக்திக்குள்ளும் தள்ளுவதோடு நிலங்களை, வளங்களை, தொழில்களை இழந்து, திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்ற இனரீதியான குடிப்பரம்பல் மாற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்களாகவும் உள்ளனர்.

வட மாகாணசபையையும் அதன் அரசியல் தலைமையையும் தமிழ்மக்கள் மிகவும் பலவீனமானதாக கருதுவதற்கு மிகவும் முக்கியமான காரணம் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் காணப்படுகின்ற மிகவும் தாழ்வு மட்டத்திலான நிலையாகும். மாகாண அரசுக்குட்பட்ட துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இழுபறியான நிலை காணப்படும் அதேவேளை, வடக்கில் குறிப்பாக வன்னியின் மாவட்டங்களில் உள்ள மத்திய அரசுக்குரிய வெற்றிடங்கள் கூட மாகாணத்திற்கு வெளியே உள்ளவர்களால் நியாயமற்ற முறையில் மாகாண, மாவட்ட விகிதாசாரத்திற்கு புறம்பான வகையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

வேலைவாய்ப்பு என்பதும் எமது மக்களின் குறிப்பாக இளைஞர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அவ்வுரிமை, மத்தியில் உள்ள நல்லாட்சி அரசாலும், அதன் அமைச்சர்களாலும் மாவட்ட முகவர்களாலும் சமூக நீதிக்கெதிரான முறையிலும் தமிழினத்தை அழிக்கும் நோக்கிலும் மீறப்பட்டுவருகின்றது. சாதாரணமான சாரதி, அலுவலக உதவியாளர், காவலாளி பதவிகளுக்குகூட வடக்கிற்கு வெளியே இருந்து ஆளணிகளை நிரப்பும் கைங்கரியம் தான் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. தெற்கில் அளவுக்கதிகமானவர்களை அரசியல் சிபார்சுகளுடன் வேலைகளில் இணைக்கும் நல்லாட்சி அரசு அவர்களைக் கொண்டு வடக்கின் வெற்றிடங்களை நிரப்பி வருகின்றது.

வடக்கு மாகாணத்தில் மத்திய அரசுக்குட்பட்ட திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களைப் பற்றிய எந்தவிதமான தகவல்களும் வடக்கில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளிடம் கிடையாது. அவற்றை பெறுவதற்கான முயற்சிகளும் கிடையாது. அதனால்தான் இவை பற்றி, நல்லாட்சி பற்றி பேசும் சிங்கள அரசுத் தலைவர்களிடம் இடித்துரைத்து கதைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிக்க வழங்கும் ஒத்துழைப்பிற்காக பிரதமருக்கும், முதலமைச்சர் நிதியத்திற்காக ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவிக்கின்ற எமது முதலமைச்சர் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் தொடர்புகொண்டு நேரடியாக தலையிட்டு எமது இளைஞர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற, பேரினவாத, அடிப்படைவாத நோக்கிலான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறோம்.

மீதமுள்ள இரண்டு வருடங்களில் நாம் முன்னெடுக்கக்கூடிய காத்திரமான சில நடவடிக்கைகள் தற்போது இல்லாவிடினும் இரண்டு வருடங்களின் பின்புகூட நல்ல பயன்களை எமது மக்களுக்கு பெற்றுத்தரும் என நாம் நம்புகிறோம்.

வருடாந்தம் மாகாணசபையின் செயற்பாடுகளிற்கென மத்திய அரசினாலும் அரசின் மூலமும் வழங்கப்படுகின்ற நிதி முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தக்கூடிய பொறிமுறையை, செயற்பாட்டை புதிதாக முன்னெடுக்க வேண்டும்.

மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகள் முதல் அதிகாரிகள் வரையிலும் அவர்கள் மீது ஆதாரத்துடன் முன்nவைக்கப்படக்கூடிய ஊழல் மற்றும் பாரபட்சமான நிர்வாகம் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மாவட்ட மட்டத்தில், இயலுமாயின் பிரதேச செயலக மட்டத்தில் மாகாணசபை பிரதிநிதிகள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரிகள் ஆகியோரை இணைத்து ஒரு ஆலோசனைக்குழுவினை அமைத்து அதன் வழிகாட்டலில் அந்தப்பகுதியின் எதிர்காலத்திற்கான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக வணிகர் வளாகங்கள் உருவாக்கப்பட்டு உள்ளுர் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், நடமாடும் வியாபாரிகளின் பங்களிப்புடன் அப்பகுதி மக்களிற்கு பயனுள்ள சேவைகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் சமூக மேம்பாட்டிற்கான செயற்திட்டங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புகளை இயலுமானவரையிலும் ஒரு குடையின்கீழ் இணைத்து கலந்துரையாடல்கள் மூலம் தீர்மானங்களை மேற்கொண்டு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் மாகாணத்தின் பரந்துபட்ட, சீரான அபிவிருத்தியை உறுதிப்படுத்த முனைய வேண்டும்.

ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் ஏற்படுத்தக்கூடிய இணக்கப்பாடு ஒன்றின்மூலம் வடக்கில் உள்ள மத்திய அரசின் துறைசார் வெற்றிடங்களை, மாகாண மற்றும் மவாட்ட விகிதாசாரம் மாறாத வகையில் அந்தந்த மாவட்ட இளைஞர்கள் மூலம் நிரப்புவதற்குரிய வழிவகைகளை கண்டுகொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான காத்திரமான நடவடிக்கைகள் எமது முதலமைச்சர் தலைமையில் தீவிரமாகவும், தெளிவான செயன்முறைகளுடாகவும் முன்னெடுக்கப்படுமானால் எதிர்வரும் இரண்டு வருட காலத்திலேனும் வட மாகாணசபை என்பது பயனுள்ளது, அது எமது, எமக்குரியதான ஒன்று என தமிழர்கள் நம்பிக்கை வைப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும். அதற்காக, நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம்.

க.சிவநேசன்
வட மாகாண சபை உறுப்பினர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *