(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)
இலங்கை நாடு இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய பாதையில் இறுதிக் கட்டத்திலுள்ளது.கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மைத்திரி அணியினரிடமிருந்து அரசியலமைப்பு தொடர்பான சில விடயங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கூறப்பட்டாலும் முற்று முழுதாக அரசியலமைப்பையே மாற்ற வேண்டும் என்ற கருத்து ஒரு போதும் கூறப்படவில்லை.அந் நேரத்தில் தேர்தல் முறை மாற்றம்,ஜனாதிபதியின் எல்லையற்ற அதிகாரம் ஆகியவையே மாற்றப்பட வேண்டுமென்றே கூறப்பட்டது.தற்போது முற்று முழுதாக அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் இடம்பெறுகின்றன.இதில் ஒரு மறைமுகமான விடயம் பொதிந்துள்ளது.மைத்திரி அணியினருக்கு முற்று முழுதாக அரசியலமைப்பையே மாற்ற வேண்டுமென்ற ஞானம் திடீரென பிறந்ததன் மர்மம் தான் என்ன என்ற வகையில் சிந்திக்கும் போது அதற்கான விடையையும் பெறலாம்.மைத்திரி அணியினர் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றியதன் பிற்பாடு சர்வதேச அழுத்தங்களால் மூடப்பட்டுக்கிடந்த இலங்கையை மீட்க புதியதொரு அரசியலமைப்பை நோக்கி உந்தப்பட்டிருக்கலாம்.இது தமிழ் மக்களின் தீர்வை நோக்கிய பாதையில் ஒரு மயில் கல்லாக திகழும் என்றே நம்பப்படுகிறது.
அண்மையில் யாழ் அரச செயலகத்திற்கான கட்டடம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றுகையில் பிரதமர் ரணில் விக்கிரசிங்க 13ம் அரசியலமைப்பு சீர் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் தீர்விற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.இன்று இனவாதிகளிடையே 13ம் அரசியலமைப்பு சீர் திருத்தம் தவறான கோணத்தில் நோக்கப்படுகையில் இலங்கை நாட்டை ஆளும் பிரதமர் இவ்வாறு கூறுவது சாதாரணமானதல்ல.அதிலும் குறிப்பாக இன வாத முரண்பாடுகள் தோன்றும் விடயங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வளவு இலகுவில் எதனையும் கதைப்பவருமல்ல.இலங்கையின் அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் இடம்பெறும் இத் தருவாயில் இக் கருத்தின் கனதி இன்னும் அதிகமாகும்.1987ம் இடம்பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் பிறந்த குழந்தைகளில் ஒன்று தான் 13ம் அரசியலமைப்பு சீர் திருத்தத்தமாகும்.இதன் மூலமே மாகாண சபைகள் பிரசவிக்கப்பட்டுமிருந்தன.இக் கூற்றின் மூலம் மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு,கிழக்கு இணைக்கப்படும் என்ற விடயத்தையும்,மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரம் வழங்கப்படும் விடயத்தையும் மறைமுகமாக கூறினாரா என்ற வினாவும் அதில் மறைந்துள்ளது.இதனை நான் இங்கு குறிப்பிடக் காரணம் தமிழ் மக்கள் தங்கள் தீர்வை சுவைக்கும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காகும்.இலங்கை அரசை பதவி,பட்டம் எதற்கும் அடிபணியாது தமிழ் தேசியக் கூட்டமைப்பே இந்த இடம் வரை அழைத்துக்கொண்டு வந்துள்ளதென்றால் மிகையாகாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒவ்வொரு விடயங்களையும் உணர்சிக் கோசங்களுக்கு அடிமைப்படாது மிக நுணுக்கமான திட்டங்களோடு காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றது.இதனை அண்மையில் தோற்றம் பெற்ற விச ஊசிச் சம்பவத்திலிருந்தும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.ஒரு சிலர் இந்த சம்பவத்தை தூக்கிப் பிடித்து சர்வதேசம் கொண்டு செல்ல முயன்றனர்.வடக்கு முதலமைச்சர் கூட ஆரம்பத்தில் அது இது என இது விடயத்தில் செயற்பட்டாலும் ஓரிரு நாட்களிலேயே இவ்விடயத்தில் நழுவல் போக்கை கடைப்பிடித்திருந்தார்.இவரின் நழுவல் போக்கானது த.தே.கூவின் போக்கை அவ் விடயத்தில் நியாயப்படுத்தியுமிருந்தது.தற்போது இவ்விடயம் பற்றி சீ.வி விக்னேஸ்வரன் வாய் திறந்ததாகவே அறிய முடியவில்லை.குறிப்பாக இவ் விடயத்தில் வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் உணர்ச்சிவச அரசியலுக்குள் அகப்பட்டுக் கொண்டார் என்பதே உண்மை.இன்று வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அது த.தே.கூ இத்தனை நாள் முன்னெடுத்த போராட்டங்களையும் பாழாக்கிவிடும்.
கடந்த 24.09.2016ம் ஆண்டு சனிக்கிழமை எழுக தமிழ் எனும் தலைமைப்பில் மிகப் பிரமாண்டமான மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை தமிழ் மக்கள் பேரவை அமைப்பு நடாத்தியிருந்தது.இச் சந்தர்ப்பத்தில் இந் நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ் மக்கள் பேரவை அமைப்பை பற்றியும் அறிவது பொருத்தாமானதாகும்.அண்மைக்காலமாக தமிழ் மக்கள் பேரவையைப் பொறுத்தமட்டில் தமிழர்கள் சம்பந்தமான அனைத்து விடயங்களிலும் தனது மூக்கை நுழைத்து வருகின்றது.இந்த அமைப்பு வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்ற சந்தர்ப்பத்தில் உதயமாகியிருந்தது.இது சீ.வி விக்னேஸ்வரனால் தான் உருவாக்கப்பட்டது என்ற கதையுமிருந்தது.இதன் இணைத்தலைவர்களில் ஒருவராக வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த அமைப்பு அரசியலுக்கு அப்பால் இயங்கும் ஒரு அமைப்பாக தன்னை இணங் காட்டிக்கொண்டாலும் வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை பார்க்கும் போது எதிர்காலத்தில் அரசியல் நீரோட்டத்திற்கு வரவும் உந்தப்படலாம்.
பொதுவாக கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்பார்கள்.இலங்கை தமிழர்களிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிழைகளை,அதனை சரியான வழிக்கு கொண்டு செல்ல அழுத்தம் வழங்கக் கூடிய வகையில் எந்த சக்திகளுமில்லை.இந்தக் குறையை தமிழ் மக்கள் பேரவை அமைப்பு நிவர்த்திக்கலாம் என்று நம்பப்படுகிறது.குறிப்பாக கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று கூட்ட முடிந்தமை தமிழ் மக்களிடையே இன்னுமொரு பலமிக்க சக்தி முளைத்து வருவதை அறிய முடிகிறது.இந்த மாநாட்டில் கடவுள் தங்களுக்கு இன்னுமொரு தலைவரை இனங்காட்டியதாகவும் மக்கள் கோசமெழுப்பியதாகவும் சில ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.இதில் கலந்து கொண்டவர்கள் வெறும் எட்டாயிரம் அளவிலானோர் என்றாலும் அந்த மக்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை மூடி இதற்கு மானசீக வரவேற்பளித்தமை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும்.வடக்கு முதலமைச்சர் பதவியிலிருந்து சி.வி விக்னேஸ்வரனை நீக்க வேண்டும் என்ற கருத்து த.தே.கூவினரிடையே நிலவி வருகிறது.இந்த வகையில் கடந்த 31.08.2016ம் திகதி புதன் கிழமை ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வந்திருந்தார்.இதன் போது விக்னேஸ்வரனை பான் கீ மூன் சந்திக்காது புறக்கணிக்கும் சில விடயங்களும் நடைபெற்றிருந்தன.தனது பதவியை பாதுகாக்க,எதிர்காலத்தில் அரசியல் பாதையில் பயணிக்க தனது மக்கள் பலத்தை வெளிக்காட்ட வேண்டிய தேவை ஒன்று வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்குண்டு.அது போன்று வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தனது எதிர்கால அரசியலுக்கு த.தே.கூவுடன் தற்போது முரண்பட்டு நிற்பதால் சுயமாக அடித்தளமிட வேண்டும் அவசியமுமுள்ளது.இவைகளினடிப்படையில் இச் செயற்பாடு நிகழ்கிறதா என்ற சந்தேகமும் எழாமலில்லை.இன்று தமிழ் அரசியலின் மிகப் பெரும் பலமே பல கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்ற அதன் ஒற்றுமை தான்.இன்று தமிழர்கள் இரு அணியினராக பிரியும் பட்சத்தில் அதற்குள் காணப்படும் அரசியல் துவாரங்களுக்குள் நுழைந்து தமிழ் மக்களின் கோரிக்கைகள் மழுங்கடிக்கப்பட வாய்ப்புள்ளது.தமிழ் மக்கள் பலமிக்க கோரிக்கைகளை நோக்கி காய் நகர்த்துவதன் காரணமாக இது ஆபத்தொன்றின் முன் சமிஞ்சையாகும்.
இந்த நிகழ்வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் தனது பூரண எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.இந் நிகழ்வு நடப்பதற்கு முன்னர் இதன் ஆபத்துக்களை கூறியிருந்தார்.இந் நிகழ்வு இடம்பெற்றதன் பிற்பாடு இந் நிகழ்விற்கும் த.தே.கூவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்ற விடயத்தை பகிரங்கமாகவே கூறியுமுள்ளார்.இங்கு நாம் சில விடயங்களை ஆராய வேண்டிய தேவை உள்ளது.இந் நிகழ்விற்கு தமிழ் மக்களின் மிகைத்த ஆதரவு இருந்ததன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்தேதும் கூறாமல் இருந்திருந்தால் மக்கள் வெறுப்புக்களை சம்பாதிக்கலாவது இருக்கலாம்.குறிப்பாக இது விடயத்தில் சுமந்திரன் மீதும்,தமிழரசுக் கட்சியின் மீது பகிரங்கமான குற்றச் சாட்டுகள் உள்ள நிலையில் சுமந்திரனின் இச் செயற்பாடு அவரது மக்கள் செல்வாக்கில் பாரிய எதிர் தாக்கத்தை செலுத்தலாம்.தமிழர்களின் தீர்வை நோக்கிய பாதையில் இது பாரிய தாக்கத்தை செலுத்தலாம் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உணர்ந்திருக்கலாம்.இதன் போது இதற்கும் த.தே.கூவிற்கும் சம்பந்தமில்லை என நிரூபிக்கும் தேவையும் அவருக்கு எழுந்திருக்கலாம் என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.எது எவ்வாறு இருப்பினும் இப் பேரணி த.தே.கூவின் பலத்தை சற்று கேள்விக்குட்படுத்துவதால் எதிர்காலத்தில் இதன் போராட்டங்களின் கனதி சற்று குறைவடைய வாய்ப்புள்ளது.அரசியல் பிரதிநிதிகளே தமிழர்களின் கோரிக்கைகளை வென்று வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப் பேரணியானது சில கோரிக்கைளை முன் வைத்து நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் பேரின மக்களின் அத்து மீறலான குடியேற்றம்,தமிழர் பகுதிகளில் விகாரைகளை அமைத்தல் உட்பட சிலவை ஒரு நாட்டை ஆளும் ஜனாதிபதி நினைத்தால் செய்யவல்லது.இவற்றை காதோடு காது வைத்தாப் போல் செய்வது சிறந்த பயனை தரலாம்.சமஷ்டி தீர்வு,வடக்கு கிழக்கு இணைப்பு கோரிக்கை அரசியலமைப்புடன் சம்பந்தப்பட்டது.இந்தப் பேரணியை தொடர்ந்து இந்தக் கோரிக்கைகளில் எதனையாவது அரசு செய்யுமாக இருந்தால் அதற்கு இப் பேரணியின் பின்புலமெனவே தெற்கில் பெயரிடப்படும்.இதன் காரணமாக இலங்கை அரசு கடும் சவாலுக்குட்படும்.எதிர்காலத்தில் இவ்வாறான செயல்களை முன் நின்று செய்வதற்கு அரசு பின் வாங்கும்.வடக்கு கிழக்கு இணைப்பிற்கு பிரதமர் ரணில் விக்கிரசிங்க ஆதரவு அளிக்கின்றார் என்றே நம்பப்படுகிறது.சந்திரிக்கா போன்றவர்கள் சமஷ்டிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.ஜே.வி.பி இவ் விடயத்தில் மௌனப் போக்கை கடைப்பிடிக்கவுள்ளதாக அறிய முடிகிறது.இதுவெல்லாம் தமிழர்கள் அரச தலைவர்களை தங்கள் பக்கம் ஈர்த்து தங்கள் இலக்கை சுவைப்பதை முன் சமிஞ்சைகளாகும்.பேரினத்தைச் சேர்ந்த அரச தலைர்கள் இவ்வாறான நிலையில் காணப்படும் போது அக் கோரிக்கைகள் இலங்கையின் தேசிய தேவைகளில் ஒன்றாக பரிணமிக்கவும் வாய்ப்புள்ளது.
சர்வதேச அழுத்தங்கள் இதன் பின்புலத்தில் நின்று விளையாடினாலும் இலங்கை பேரின மக்கள் ஓரிடத்தில் நின்று போராடினால் அந்த தீர்வு திட்டங்கள் அனைத்தும் செல்லாக் காசாகிவிடும்.இது பண்டா-செல்வா ,டட்லி-செல்வா ஒப்பந்தங்களின் போது அனைவரும் கண்ட வரலாறும் கூட.கிழக்கு முஸ்லிம்கள் தங்களது தனித்துவத்தை பாதுகாக்க கல்முனை கரையோர நிர்வாக மாவட்டம் என்ற ஒன்றை கோருகின்றனர்.இக் கல்முனை கரையோர நிர்வாக மாவட்டம் மொறகொட ஆணைக்குழுவினால் இலங்கை அரசுக்கு முன் வைக்கப்பட்ட ஒரு பரிந்துரையாகும்.இதனை எப்போது மு.கா ஒரு விடயமாக தூக்கிப் பிடித்ததோ அன்று தொடக்கம் இன்று வரை அது பேரின மக்களிடத்தில் ஒரு இனவாத கோரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.இதனை முஸ்லிம்களுக்கானதொரு தேவையாக மு.கா தூக்கிப் பிடிக்காது விட்டிருந்தால் அந்தக் கோரிக்கையில் பேரின எதிர்ப்புக்கள் கிளம்பாது அதனை முஸ்லிம்கள் ருசி பார்த்திருக்கலாம்.இதற்கு பல தடவைகள் இலங்கையின் ஆட்சியாளர்கள் இணங்கிய போதும் பேரினவாத சிந்தனைகள் தான் தடையாகவுள்ளன.இது சத்தமின்றி சாதித்திருக்க வேண்டிய ஒன்றாகும் என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.இதில் பொதிந்துள்ள விடயம் பேரின மக்களை சீன்றாது இராஜ தந்திர நகர்வுகள் மூலம் இவ்வாறான விடயங்களை சாதிக்க புறப்படுவது பொருத்தமான வழிமுறையாகும்.
இலங்கை அரசு குறிப்பாக தமிழர்களின் தீர்வை மையப்படுத்தி அரசியலமைப்பு மாற்றத்தை கொண்டுவரும் போது,அதில் பேரின மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடலாம்.இவ் அச்சத்தில் இலங்கை அரசு முழு அரசியலமைப்பு மாற்றம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இலங்கை மக்கள் பார்வையை மாற்றி இவ்விடயத்தை கையாள்கிறதா என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.இந்த வகையில் இலங்கை அரசியல் வாதிகளின் செயற்பாடுகளும் அமையப்பெற்றுள்ளன.தற்போது நாட்டின் தேசிய நலன்கள் சம்பந்தமான அரசியலமைப்பு விடயங்களில் இவ்வரசு கொள்ளும் அக்கறையை விட நாளாந்தம் அரசின் முக்கிய புள்ளிகளின் வாய்களிலிருந்து தமிழ் மக்களின் தீர்வை பற்றிய கருத்தாடல்களே வந்த வண்ணமுள்ளது.இதிலிருந்து இவர்கள் தமிழ் மக்களின் தீர்வை நோக்கி அதிகம் சிந்திப்பதை அறிந்து கொள்ளலாம்.இலங்கையின் ஆட்சியாளர்கள் சமஷ்டித் தீர்வை வழங்க நினைத்தாலும் அதற்கு இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டி இருப்பதால் பேரின மக்களின் ஆதரவு தேவை.தற்போது ஜனாதிபதி மைத்திரி பால குறித்த சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமென கூறும் சரத்தை நீக்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்தது.இங்கு ஒரு விடயத்தை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும்.சர்வஜன வாக்கெடுப்பென்பது பெரும் பான்மையினருக்கான பலமிக்க கவசம்.இதனை இல்லாதொழிக்க முயற்சிப்பதை பேரின மக்கள் தூக்கிப் பிடிக்காது விட்டால் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் சமஷ்டி நோக்கி பயணிப்பதற்குள்ள மிகப் பெரும் தடையை இல்லாதொழிக்கும்.தற்போது கிடைக்கவில்லையே என தமிழ் மக்கள் இதனை நிராகரித்தால் அவர்களுக்கு அரசனுமில்லை புரிசனுமில்லை என்ற நிலை தான் ஏற்படும்.இதனை இங்கு நான் குறிப்பிடக் காரணம் இவ்வாறான இராஜ தந்திர நகர்வுகளை இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளோடு கட்டிப் புரண்டு விளையாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே நன்கு அறியும்.ஒரு விடயத்தை சாதிக்க அதற்கான திட்டமிடல்களை ஒரு கட்சியிடம் அல்லது ஒரு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.அல்லாது போனால் ஒருவர் இன்னுமொருவரின் விடயங்களில் தலையிட்டு அனைத்தையும் பாழ்படுத்தி விடுவார்கள்.
இவ்வாறான பேரணிகளை நடாத்துவதை ஒரு போதும் இலங்கை பிரஜைக்கு இலங்கை அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் கேள்விக்குட்படுத்த முடியாது போனாலும் இராஜ தந்திர நகர்வுகளில் பாரிய தாக்கத்தை செலுத்தலாம்.இதனை த.தே.கூ நன்கு அறிந்ததால் இதற்கு ஆதரவளிக்காது மறுக்கலாம் (இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைவரும் எதிர்க்கவில்லை).இது மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளதால் இதனை பிழையென உணர்ந்தாலும் யாருமே வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.அரசியல் பிழைப்புக்கு மக்கள் தான் தேவை.இந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பாராட்டுக்குரியவர்.தமிழர்களின் நலனின் அவர் உளச் சுத்தியுடன் செயற்படுவதாகவே நான் உணர்கிறேன்.இன்று இந்த விழாவை இனவாதமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த,பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில ஆகியோர் தூக்கிப் பிடித்துள்ளனர்.நாளை பொது பல சேனா,விமல் வீரவன்ச நிச்சயம் தூக்கிப் பிடிப்பார்கள்.இவர்கள் இது போன்ற விடயங்கள் எப்போது நடக்குமென எதிர்பார்த்துக்கொண்டிருப்பதே இன்றைய அரசியல் போக்கு.மக்கள் விடுதலை முன்னணி இதனை எதிர்த்துள்ளது.அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை இலங்கை தமிழர்களின் தீர்வை நோக்கிய பாதைக்கான தடையாக வர்ணித்துள்ளார்.
தமிழ் மக்களின் உள்ளங்களில் இப் பேரணி மூலம் முன் வைக்கப்பட்ட அனைத்துக் கோசங்களும் நன்கு பதிந்தே உள்ளன.தமிழர்கள் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்ற வாதங்கள் உண்மையாக இருந்தாலும் தற்போது இலங்கை தமிழர்கள் தீர்வை நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டி இருப்பதால் அவைகள் அவசியமற்றவை.இப் பேரணி மூலம் தமிழ் மக்கள் சாதித்தது என்ன என்ற வினாவை எழுப்பி சிந்தித்தால் இப் பேரணி அவசியமற்றது என்ற விடயத்தை புரிந்துகொள்ளலாம்.தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இலங்கை தமிழ் மக்கள் தேர்தல்கள் வாயிலாக பூரண ஆதரவளித்துள்ளதன் காரணமாக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு விடயத்தை கூறுவதைப் பார்க்கிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்று ஒரு விடயத்தை முன் வைப்பது பலமானது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயலாத ஒன்றைக் கூறி மக்களை ஏமாற்றுகின்றதா என்ற சந்தேகம் நிலவினாலும் அதனடிப்படையில் சிந்திக்கும் போது அதனை விட இரட்டை மடங்கு இப் பேரணியினர் ஏமாற்றுவதாக கூறலாம்.அன்று அநாகரிக தர்மபால போன்றவர்கள் சிங்களவர்களை நோக்கிய அழைப்பை விடுத்திருந்தார்.இந்த அழைப்பை இன்றைய ஆட்சியாளர்கள் இலங்கையர்களை நோக்கிய அழைப்பாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.இதன் போது இவ்வாறான கோசங்கள் அவசியம் தானா? இன்று எழுக தமிழ் கோசம் சரியாக இருந்தால் அன்றைய அநாகரிக தர்மபாலாவின் கோசமும் நியாயமானதே!
குறிப்பு: இக் கட்டுரை இன்று 29-09-2016ம் திகதி வியாழ கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 64 கட்டுரையாகும்.