(எம்.எஸ்.எம். சாஹிர்)
யதார்த்தபூர்வமாக அரசியல் செய்தாலும் தமிழ் மக்களை மீண்டும் ஒரு பேரழிவுக்குத் தள்ளுவதற்குத்தான் விக்னேஷ்வரன் ஐயா முயற்சிக்கின்றார் என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
“எழுக தமிழ்” எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் அழுகைக்குரலாக பரிணமிக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம். விக்கினேஷ்வரன் ஐயா அரசியல் விசயங்களை அறியாதவர் போல் நடக்கின்றார். அவர் நீதித் தொட்டினிலே ஆடியவர். யதார்த்தபூர்வமாக அரசியல் செய்தாலும் தமிழ் மக்களை மீண்டும் ஒரு பேரழிவுக்குத் தள்ளுவதற்குத்தான் முயற்சிக்கின்றார்.
வட்டுக்கோட்டை மாநாட்டுக்குப் பிறகு தெற்கில் அதற்கு விரோதமாக விரோத சக்திகள் தலை தூக்க ஆரம்பித்தன. மாநாட்டின் மூலம் தமிழ் நாட்டுக்கு அத்திவாரமிட்டதன் காரணமாக தமிழ் தலைவர்களோடு ஒன்றாக இணைந்து செயல்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் மாபெரும் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அதிலிருந்து விலகிக் கொண்டார். அவர் அரசியல் சாணக்கியம் படைத்தவர். ஏனென்றால் தோட்டத் தொழிலாளர்கள் சிங்களவர்கள் மத்தியில் வாழ்கின்றார்கள்.
அதேபோன்று கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் சிங்கள மக்களுக்கு மத்தியில் தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் இப்போது வாழ்கின்றார்கள்.
இதற்கெல்லாம் காரணம் மஹிந்த ராஜபக்ஷ 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த காரணத்தினாலாகும். தமிழ் தேசிய இனத்தின் தலைவர் ஆர். சம்பந்தன் கூட நினைக்காத ஒன்றை அவரால் நியமிக்கப்பட்டு அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு கொழும்பிலிருந்து வடக்குக்கு அனுப்பப்பட்டு, கொழும்பு மண்ணிலிருந்து வடக்குக்கு அனுப்பிய விக்னேஷ்வரன் இப்படி நடப்பதையிட்டு அனைத்து மக்களும் ஆச்சரியப்படுகிறார்கள். சமரசம் மூலமாகவும் இணக்கப்பாட்டுடனும் தமிழ் மக்ககளுடைய பிரச்சினைகளை நாங்கள் நிச்சயம் தீர்ப்போம் என்ற விவேகமான அரசியல் சிந்தனையுடன் எங்களுடைய சம்பந்தன் ஐயா சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்களத்தில் பேசிக் கொண்டு போகின்ற நேரத்திலே அதற்கு ஊறு விளைவிப்பதற்கு திட்டமிட்டே விக்னேஷ்வரன் ஐயா தன்னுடைய நடவடிக்கையை முடுக்கிவிட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. கண்டிக்கக்கூடியது. ஆனால் இதன் பின்னணியில் வல்லரசு நாடுகளிடைய சக்தி இருப்பதை அனைவரும் உணர வேண்டும்.
பொதுபல சேனாவை உருவாக்குவதில் பின்னணிலே செயல்பட்டவர்கள் அமெரிக்கா வல்லரசு மொஸாத் குழுப்படைக் கூட்டம். முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பிரிப்பதற்கு செய்த பெரும் சூழ்ச்சிதான் அளுத்கமையைத் தாக்கியது. இந்த உண்மை இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. எனவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதாவது பொய்ப்பிரசாரத்தின் மூலம் முஸ்லிம்கள் மீதிருந்த கசப்புணர்வு இப்பொழுது நீங்கியுள்ளதை நாங்கள் அறியக் கூடிய ஒன்றாகவுள்ளது.
அவர்கள் எங்களுக்கு சமாதானத்தைக் கொண்டு வந்தார்கள். இப்போது நிம்மதியாக வாழுகின்றோம். விவசாயம் செய்கின்றோம். வியாபாரம் செய்கின்றோம். நல்ல காபட் பாதையிலே பிரயாணம் செய்கின்றோம். என்றமாதிரி இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் இருந்தும் நினைவு கூறவும் நினைக்கவும் ஆரம்பித்திருக்கின்றார்கள்.
எனவே பின்விளைவுகளை அறியவேண்டும். அரசியல் என்று சொல்வது வரலாற்றிலே பாடம் படிப்பது. வட்டுக்கோட்டை மாநாட்டின் பிறகு, நடந்த விடயங்கள் மற்றும் அரசியல் பின்னணியை நன்கு அலசி ஆராய்ந்து சிந்தனைத் தெளிவு பெறுமாறு நான் விக்னேஷ்வரன் ஐயாவிடமும் அவரது அடிவருடிகளிடமும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். கொழும்பிலே அதாவது குடும்ப வாழ்க்கையிலே சிங்களவர்களோடு கூடிக் குழாவும் இவர், யாழ்ப்பாணத்திலே இப்படி நடப்பதையிட்டு தமிழ் மக்கள் தம்மைத் தாமே எச்சரித்துக் கொள்ள வேண்டும்.
வடக்கிலிருந்து இணைப்பு. முன்பு தமிழகத்திலே பொங்கு தமிழ் ஆரம்பித்தது. பொங்கு தமிழ் வற்றிய பிறகு இப்பொழுது எழுக தமிழ் குரலை அவர்கள் மீட்டி தமிழ் மக்களோடு சிந்து விளையாடப்பார்க்கிறார்கள். கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் வடக்கிலும் கூட இன்று தமிழ் மக்கள் மிகவும் சுதந்திரமாக அமைதியாக வாழுகின்றார்கள். காரணம் இந்தப் போரை முடிவுக்கச் கொண்டு வந்ததுதான். அது மட்டுமல்ல, மஹிந்த ராஜபக்ஷ செய்த பெருங்கைங்கரியம்தான் அவர் பகுதியிலே இருக்கின்றது. தான் கட்சி தன் கட்சி தோற்கும் என்று உறுதியாக நம்பியும், உறுதியாகத் தெரிந்தும் கூட வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்க வேண்டும் என்றுதான் மாகாண சபைத் தேர்தலை நடத்தினார். அதன் காரணமாகத்தான் முதலமைச்சர் ஆசனத்தில் விக்கினேஷ்வரன் ஐயா அமர முடிந்தது. கம்பன் விழாக்களில் எல்லாம் அழகாகத் தமிழைப் பத்தியும் உலக தமிழ் எழுச்சியைப் பற்றியும் பேசுகின்ற ஐயா மீண்டும் தானாக அந்த நிலையைக் குழப்புவதற்கு அவர் நடவடிக்கை எடுக்கக் கூடாது.
எனவே இது குறித்து அரசாங்கம் என்ன சொல்கின்றது என்று நாங்கள் எதிர் பார்க்கின்றோம். ஏனென்றால் கூட்டு எதிர்க்கட்சிகள் வன்மையாகக் இதனைக் கண்டிப்பது மாத்திரமல்ல, இதற்கு அரசாங்கம் இந்த எழுக தமிழ் கூட்டத்திற்கும் பிசாரத்திற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடைய நிலைப்பாடு என்ன என்பதை முஸ்லிம் சமூகம் கேட்கின்றது. வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் எதிர்த்தார். இதன் காரணமாக அவரைக் கொலை செய்ய விடுதலைப் புலிகள் அன்று நடவடிக்கை எடுத்தார்கள். தன்னுடைய தாயைக் கூட மருதமுனையிலே விட்டு விட்டு அவர் புகையிரத வண்டியிலே கொழும்புக்கு தப்பி வந்தார் என்பது வரலாறு. அது மாத்திரமல்ல, வடகிழக்கை இணைப்பதற்கு புத்திஜீவிகள் ஒன்று கூடி அண்மையில் மருதமுனையிலே 2 நாள் கருத்தரங்கினை வைத்து வடகிழக்கை இணைப்பதற்கு முஸ்லிம்கள் முற்று முழுதாக எதிர்க்கின்றார்கள். என்ற தீர்மானத்தை எடுத்திருப்பதையும் விக்னேஷ்வரன் ஐயாவும் தமிழ் உலகமும் நன்கு அறிய வேண்டும்.
மீண்டும் தமிழ் மக்களை இருண்ட யுகத்திற்கு இழுத்துச் செல்வதுக்கு விக்னேஷ்வரன் ஐயா எடுக்கின்ற முயற்சிகளை தமிழ் மக்களே கண்டிக்க வேண்டும். ஏதாவது தமிழ் மக்களுக்கு விபரீதம் நடந்தால் அவர் தன்னுடைய இணைந்த சிங்கள குடும்பத்தவர்களோடு கொழும்பிலே பாதுகாப்பாக இருப்பார். ஆகவே அநியாயமாக பாடசாலைக் கல்வி, தொழில் வசதி, போக்குவரத்து, அனைத்தையும் அனுபவிக்கும் தமிழ் மக்களுடைய எதிர்காலத்தை இருள் சூழ்ந்த எதிர்காலமாக மாற்றுவதற்கு அவர் முனையக் கூடாது. என்றும் தெரிவித்துள்ளார்.