Breaking
Sun. Nov 24th, 2024

(எம்.ரீ. ஹைதர் அலி)

வட மாகாண முதலமைச்சர் சிவி. விக்னேஸ்வரன் அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் முஸ்லிம்கள் தமிழ் பேசுவதினால் அவர்கள் தமிழர்கள் என்றும் இஸ்லாம் மதத்தினை தாங்கள் பின்பற்றுவதாக அவர்கள் வித்தியாசப்படுத்தி காட்டுவதானது அரசியல் இலாபங்களுக்காகவே என்ற கருத்துப்பட்ட கூறியுள்ளமையானதை தான் வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த பொறியியலாளர் ஷிப்லி பாரூக்.. முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்பவர் சாதாரன பாமர மகன் அல்ல என்பதனை முதல் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவர் ஒரு நாட்டிலே இருக்கின்ற நீதித்துறையிலே அதியுயர் பதவியினை வகித்த ஒருவர் என்ற அடிப்படையில் இவ்வாறான மோசமான கருத்தினை வெளியிட்டிருப்பது என்பது முஸ்லிம்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பினை தோற்றுவித்துள்ளது. முஸ்லிம்களும், தமிழர்களும் இரண்டு இனம் என்பதனை விக்னேஸ்வரன் முதலில் விளங்கிகொள்ள வேண்டும். தேசியத்தில் இருக்கின்ற சிங்கள இனம், தமிழ் இனம், முஸ்லிம் இனம் என மூன்று இனங்கள் இருக்கின்றது என்பதனை விளங்கிகொள்ளாத விக்னேஸ்வரன் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டிருப்பது என்பது ஒரு அப்பாவித்தனமான விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

அரசியலுக்கு என்று பேசுகின்ற அதே முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதே அரசியலைதான் செய்வதற்காக பாவித்திருப்பதனை பார்க்கின்ற பொழுது வேடிக்கையாக இருக்கின்றது. அரசியல் செய்வதற்காகவும் வட கிழக்கினை இணைக்க வேண்டும் என்ற தங்களது கோசத்திற்கும் பலம் சேர்க்கின்ற விடயமாகவுமே நாங்கள் இதனை பார்க்கின்றோம். வட கிழக்கினை இணைப்பதனூடாக தனியான சுயாட்சியினை அல்லது சமஷ்ட்டியினை ஏற்படுத்த நினைக்கின்ற விக்னேஸ்வரன் அதற்கு முஸ்லிம்கள் இடையூறாக இருப்பார்கள் என்பதனை சர்வதேசத்திற்கு தெரியாமல் மறைப்பதற்காகவே தமிழர்களும், முஸ்லிம்களும் தமிழ் பேசுவதினால் தமிழர்கள் என்று ஒரு இனத்தினுடைய சின்னத்தினை ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்வதென்பது உண்மையில் அபாண்டமான விடயமாகும்.

கடந்த காலங்களை மறந்து விட்ட விக்னேஸ்வரன் இன்று நாங்கள் தமிழர்கள் என்று பேசுகின்ற விடயமானது உண்மையில் கடந்த காலங்களை மறந்து விட்டாராரா? அல்லது மறந்து விட்டதனை போன்று நடிக்கின்றாரா? என நாங்கள் அவரினை கேட்க ஆசைப்படுகின்றோம். அவர் தற்பொழுது ஆட்சி செய்து கொண்டிருக்கும் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டதற்கு பிறகு மீண்டும் முஸ்லிம்கள் அங்கே மீள்குடியேற்றப்படும் விடயத்தில் விரட்டியடிக்கப்பட்ட மக்களை முஸ்லிம்கள் என்ற பார்வையிலே அவர் பார்க்கின்றார்.

ஆனால் முஸ்லிம்களும் தமிழர்கள்தான் என்று கூறுகின்ற விடயத்தினை வைத்து பார்க்கின்ற பொழுது வட மாகாணத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்று இரண்டு அல்லது மூன்று குடும்பங்களாக வாழுகின்றார்கள். அவர்களை மீண்டும் வட மாகாணத்திற்கு சென்று வாழுவதற்கான காணிபங்கீடுகளை கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை தனது உள்ளத்தில் ஏற்படாத ஒருவர் எவ்வாறு தமிழ் பேசுகின்ற முஸ்லிம்களும் தமிழர்கள் என்று கூற முடியும்?. உண்மையில் சர்வதேசத்திற்கு தமிழ் பேசுகின்ற இரண்டு இனங்களும் தமிழர்களே என சூட்சகமாக காட்டி தன்னுடைய விடயத்தினை சாதிக்க முற்படுகின்ற விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

அது மாத்திரமல்லாமல் வடக்கிலே இடம் பெற்ற கொடூரங்களை நேரடியாக பார்த்திருந்தும் அதற்கு எதிராக இதுவரையில் ஏதேனும் ஒரு கண்டனத்தையாவது தெரிவிப்பதற்கு நாதியில்லாமல் இருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இரண்டு சமூகங்களும் தமிழ் பேசுவதினால் தமிழர்கள் என்று கூறுவதை நாங்கள் தூரநோக்குடன் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். விக்னேஸ்வரனுக்கு தேவையான அரசியல் தேவைப்பாடுகள் இருக்கலாம். அரசியலினை தன்னுடைய இனம் சார்ந்த விடயமாக மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் இன்னுமொரு இனத்தினுடைய கெளரவத்தினையும், அதனுடைய தனித்துவத்தினையும் பாதுக்காக வேண்டிய விடயமாக சிந்திக்கும் தேவைப்பாடு விக்னேஸ்வரனுக்கு இருக்கின்றது.

அந்தவகையில் பார்க்கின்றபொழுது கிழக்கிலே மிகக் கொடூரமான முறையில் முஸ்லிம்களினுடைய உயிர்கள் பறிக்கப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ இடம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக விடுதலை புலிகளினால் அரங்கேற்றப்பட்ட மிகக்கொடூரமான செயற்பாடுகளை இன்று வரைக்கும் கண்டும் காணாமலும் இருக்கின்ற விக்னேஸ்வரன் முன்னின்று பாதிகப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு வீதமேனும் அக்கறை செலுத்த தவறியுள்ளார். ஆகவே இன்று முஸ்லிம்கள் தமிழ் பேசுவதினால் தமிழர்கள் என தான் சார்ந்திருக்கின்ற இனத்திற்காக பகிரங்மாக கூறுவதனை இட்டு அவர் வெட்கப்படவில்லையா என்று நாங்கள் அவரினை கேட்க விரும்புகின்றோம்.

ஒரு இனத்தினுடைய தலைவராக இருக்கலாம் அல்லது இனத்தினுடைய அரசியல் தலைவராக இருக்கலாம் தான் சார்ந்திருக்கின்ற சமூகத்தினை பாதுகாப்பதற்காக இன்னுமொரு சமூகத்தினை முற்று முழுதாக இல்லா தொழிக்கின்ற வகையில் பேசுகின்ற பேச்சென்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஜனநாயகத்தினை மீறுகின்ற செயலாகவே நாங்கள் கருதுகின்றோம். முஸ்லிம்கள் கடுமையாக யுத்தத்தினால் பாதிகப்பட்டிருப்பது ஒரு புறமிருக்க, கடந்த காலங்களிலும் இவ்வாறுதான் தமிழர்கள் முஸ்லிம்கள் என்று இரண்டு பிரிவினர் இல்லை என அவ்வப்போது பேசுவது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை தனித்தரபாக ஏற்றுக்கொள்ள முடியாது என பேசிய அதே கட்சியில் இருக்கின்ற இன்றைய விக்னேஸ்வரன் இன்று தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமிழ் பேசுவதினால் தமிழர்கள் என்று பேசுகின்றார்.

அவ்வாறென்றால் முஸ்லிம்களினுடைய இனச்சுத்திகரிப்பு என்ற ஒரு விடயம் நடை பெற்ற காலத்தில் இவர் எங்கிருந்தார் என்பது எங்களுக்கு ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது. அல்லது இவர் உலகத்தில் இருந்தாரா அல்லது செவ்வாய் கிரகத்தில் இருந்தாரா என்பது அடுத்த கேள்வியாக இருக்கின்றது. ஆகவே இவ்வாறான விடயங்களை கையாளுகின்ற வேலையில் இன ரீதியான சொற்பிரயோகங்களை பிரயோகிக்குமிடத்து மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆட்சி மாற்றத்தின்பொழுது முஸ்லிம்கள் தமிழர்கள் என்ற இரண்டு சமூகங்களும் ஒன்றாக நின்று ஆட்சியினை மாற்றியமைத்துள்ளோம்.

ஏன் என்றால் கடந்த ஆட்சி என்பது சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான ஆட்சி என்பதனை உணர்ந்த தமிழ் முஸ்லிம் சமூகமானது ஒன்றுபட்டு தங்களினுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கு வேறு எந்த வழியும் இல்லாமல் அதியுத்தம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தன் பலனாக ஏற்கனவே இருந்த கொடுங்கோள் ஆட்சி மாற்றியமைக்கப்பட்டது. அந்த வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த நல்லாட்சியில் முஸ்லிம்கள், சிங்களவர்கள், தமிழர்கள் என சரிசமமாக தனித்தனி இனமாகவும் தனித்துவத்தினை பாதுகாத்த இனமாகவுமே நாங்கள் எங்களினுடைய செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல் இலங்கையர்கள் என்ற பதத்திற்குள் உள்வாங்கப்படுகின்ற பொழுது அந்த இலங்கையர்களுக்குள் தனித்துவமாக வாழுகின்ற ஒவ்வொரு இனத்தினை சேர்ந்தவர்களும் அவர்களினுடைய மதத்தினை பிற்பற்றுவதற்குறிய பூரண சுதந்திரத்தினை கொடுத்து இன ஒற்றுமையினை ஏற்படுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

தமிழ் பேசுவதினால் தமிழர்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்லுகின்ற விடயம் கோவில்களுக்கு முஸ்லிம்களும் முஸ்லிம்களின் பள்ளிவாயல்களில் தமிழ் மக்களும் வழி பாட்டில் ஈடுபடுகின்ற நிலைமை உறுவாகும் என்ற நிலைப்பாட்டில் கூறியிறுக்கின்றாரா? என்று என்ன தோன்றுக்கின்றது. ஆகவே இதுவெல்லாம் சிந்தனைக்கு எட்டாத சிந்திக்க தெரியாத ஒருவர் பேசுகின்ற விடயமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே இவ்வாறான கருத்துக்களை உடனடியாக அவர் வாபஸ் பெற வேண்டும். தன்னுடைய அரசியல் சுய இலாபத்திற்காக இன்னுமொரு இனத்தினுடைய தேசிய அடையாளத்தினை ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்கின்ற இந்த முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கூற்றானது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்று நாங்கள் கூறுவது மாத்திரமல்லாமல் அவர் பேசிய விடயத்தினை நாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் தனது மறுப்பறிகையில் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *