2017 ஜனவரி மாதம் முதலாம் திகதி கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பொது அமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
2016ம் ஆண்டுக்குள் தீர்வு என வலியுறுத்தியே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வாக்கினைப் பெற்றுக் கொண்டது. அதற்காக நாம் உழைக்க வேண்டும்.
அவ்வாறு இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்காது விட்டால் 2017 ஜனவரி முதலாம் திகதி விடிகின்ற போது கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்.
தனியே சம்மந்தன் ஐயாவின் கருத்தாக அதனை கருத முடியாது. கூட்டமைப்பின் அனைவரும் அதற்கு பொறுப்பு கூற வேண்டும். யாராவது அப்படி இல்லை என எதிர்த்தார்களா?
பிரபாகரன், சிறி சபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன் இந்த நான்கு பேரும் தான் உண்மையாக செயற்பட்டார்கள். இவர்களைத் தவிர இங்கு இருக்கின்ற எவருமே உண்மையாக செயற்படவில்லை. இது தான் உண்மை.
நாங்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். ஆறாவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. நாங்கள் தனிநாடு கேட்க முடியாது. தனி நாடு கேட்க உதவி செய்ய முடியாது. மற்றும் நிதி உதவி வழங்க முடியாது.
அதனால் தான் அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த அண்ணன் அமிர்தலிங்கம் உட்பட்ட சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு போனார்கள்.
அதற்கு பிறகு 6 வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு எம்.பியாக இருந்து கொண்டு தான் மேடைகளில் பலதைக் கதைக்கின்றோம்.
மக்களாகிய நீங்களும் தனித்து வாக்களித்து விட்டு இருக்க முடியாது. நீங்கள் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் ஆகிய எம்முடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
அதைவிடுத்து ஒரு தடவை வாக்களித்து விட்டு ஐந்து வருடமாக எம்மை பேசக் கூடாது. எங்களிடம் கதைத்தால் தான் எமக்கு எதையும் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.