Breaking
Sun. Nov 24th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சிகளின் வளர்ச்சியில் அம்பாறை மாவட்டத்தின் பங்கு அபரிதமானது.அம்பாறையில் மு.காவிற்கு எதிர்ப்புகள் பல கிளம்பினாலும் அதனை இற்றை வரை அலட்சியப் போக்கில் திறம்பட சமாளித்து வந்த அமைச்சர் ஹக்கீம் தற்போது அம்பாறை நோக்கி தனது படை எடுப்பை முன்னொரு போதும் இல்லாத வகையில் தீவிரப்படுத்தியுள்ளார்.இதற்கு அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிஷாத்தின் வருகையே பிரதான காராணமாக பலராலும் கூறப்படுகிறது.அமைச்சர் றிஷாத்தை பொறுத்த மட்டில் தனது வளர்ச்சிப் படியில் மிக முக்கியமான கால கட்டத்திலுள்ளார்.இத்தனை காலமும் வடக்கில் மாத்திரம் தனது கவனத்தை செலுத்திய அமைச்சர் றிஷாத் கிழக்கு மாகாணத்திற்கு எதுவுமே செய்யாமல் அம் மாவட்ட மக்கள் 33000 வாக்களித்திருந்தனர்.முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக இந்த வாக்கெண்ணிகையை பெறுவது அவ்வளவு இலகுவானதல்ல.தற்போது அவர் குறைந்தது ஒரு மாததத்திற்கு ஒரு தடவையாவது அம்பாறைக்கு வருவதோடு பலவாறான அபிவிருத்தி பணிகளையும்  முன்னெடுக்கின்றார்.இதனை வழமை போன்று மு.கா கால் மேல் கால் போட்டு கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் அமைச்சர் றிஷாத் அதன் அடி வேரை அசைத்துப் பார்த்துவிடுவார்.அமைச்சர் றிஷாதின் மயிலாட்டத்திற்கு எதிராக மு.கா தனது எதிர் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.இதன் விளைவுதான் இன்று அம்பாறையில் அரங்கேறும் முஸ்லிம் கட்சிகளின் குத்தாட்டமாகும்.

01-09-2016ம் திகதி வியாழக் கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு சமூகமளித்த அமைச்சர் றிஷாத் ஒரு நாள் மாத்திரமே அங்கு முகாமிட்டு தங்கியிருந்தாலும் பல நாள் திட்டங்களை மிகக் குறுகிய நேரத்தினுள் செய்துவிட்டு திரும்பினார் என்பதே உண்மை.அன்று காலையில் அம்பாறை கச்சேரி சென்று சம்மாந்துறையில் எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ள இன்கொம் வர்த்தக கண்காட்சி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை அமைத்திருந்தார்.அமைச்சர் றிஷாத்திற்கு கிடைத்த முதல் வர்த்தக கண்காட்சியை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கி அழகு பார்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இங்கு இதனை அமைச்சர் றிஷாத் தனது மாவட்டமான வன்னியில் செய்யலாமே என்ற வினா எழலாம்.அம் மாவட்டங்களும் இன்னும் பல அபிவிருத்திகளை காண வேண்டியுள்ளமையையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.அமைச்சர் றிஷாத் ஒரு கட்சியின் தலைவராக இருப்பதால் தனது சிந்தனைகளை தனது மாவட்டத்திற்குள் மாத்திரம் முடக்குவது பொருத்தமானதல்ல என்ற நியாயமும் அதில் பொதிந்துள்ளது.அமைச்சர் றிஷாத் அம்பாறை மாவட்ட மக்களுக்கு எதுவுமே செய்யாமல் பல்லாயிரம் வாக்குகளை அள்ளி குவித்திருந்ததால் அம் மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய கடமை அமைச்சர் றிஷாத்திற்குள்ளது.இதன் மூலம் 1800ற்கும் மேட்பட்டவர்கள் சுய தொழில் ஊக்கிவிப்பு மூலம் பயன்பெற முடியும்.இதில் மருதமுனை தையல் அலங்காரமென ஒரு தையல் வடிமைப்புக்கு பெயர் சூட்டும் நிகழ்வுகளும் ஏற்பாடாகியுள்ளமை இதன் சிறப்பம்சங்களாகும்.

அன்வர் இஸ்மாயிலின் மறைவிற்கு பிறகு உருப்படியான எந்த சேவைகளும் இடம்பெறாத சம்மாந்துறை மண்ணில் அமைச்சர் றிஷாத் இவ் வர்த்தக கண் காட்சியை நடாத்த திட்டமிட்டுள்ளமை இதன் இன்னுமொரு சிறப்பம்சமாகும்.இது சம்மாந்துறை மக்களின் உள்ளங்களிலும் பாரிய தாக்கத்தை செலுத்தும்.அன்வர் இஸ்மாயிலின் காலத்தில் சம்மாந்துறையை அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் மஹாபொல கண்காட்சியை நடாத்தியிருந்தார்.இந்த நிகழ்வு மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலை சம்மாந்துறை மக்களிடையே நினைவூட்டிச் செல்லும் என்பதில் ஐயமில்லை.கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.இ.ம.காவை அதிகம் ஆதரித்த ஊர் சம்மாந்துறையாகும்.இந்த ஊரில் அ.இ.ம.கா இவ்வாறான கண் காட்சிகளையும் நடாத்தினால் மு.காவின் நிலை பரிதாபகரமாகிவிடும்.பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரும் மயிலாட்டத்திற்கு எதிராக பல திட்டங்களை வகுத்துள்ளதாக அறிய முடிகிறது.எனினும்,இவர் இவ் வேலைத் திட்டங்களை முழுமைப்படுத்த மிக நீண்ட காலம் எடுக்கும் என்பதால் மிகக் குறுகிய காலத்தினுள் நடைபெறவுள்ள மாகாண,பிரதேச சபைத் தேர்தர்களில் சம்மாந்துறையில் மு.கா மிகக் கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடலாம்.

இதன் பிற்பாடு சம்மாந்துறை பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு வருகை தந்த அமைச்சர் றிஷாத் பதியூர்தீன் சம்மாந்துறை பல நோக்கு கூட்டுறவுச் சங்க எரி பொருள் நிலையத்தின் புணரமைப்புக்காக மூன்று மில்லியன் ரூபாய்களை ஒதுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மாகாண சபைகளின் ஆளுகைகளின் கீழ் உள்ளன.இதனை கிழக்கில் நிர்வகிக்கும் அமைச்சும் முஸ்லிம் காங்கிரசிடம் தானுள்ளது.இந்த பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சிக்கு கிழக்கு மாகாண சபை என்ன செய்துள்ளது எனக் கேட்டால் எந்த பதிலுமில்லை.சம்மாந்துறையின் அரசியலில் சம்மாந்துறை கூட்டுறவுச் சங்கங்களின் பங்கு அபரிதாமனது.அன்வர் இஸ்மாயிலின் காலப்பகுதியில் சம்மாந்துறை  கூட்டுறவுச் சங்கங்களின் பக்கம் யாரையும் செல்ல விடவில்லை.அவரின் மரணத்தின் பிற்பாடு மாகாண கூட்டுறவுத் துறை அமைச்சராக மன்சூர் இருந்த போதும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நௌசாதின் கைக்குச் சென்றிருந்தது.தற்போது அது நௌசாதின் கையை விட்டும் நழுவி அ.இ.ம.காவினுள் விழுந்துள்ளது.இதன் தலைவராகவுள்ள வைத்தியர் றஷீத் அ.இ.ம.காவின் ஆலோசனை சபையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.இது சம்மாந்துறை அரசியலில் அ.இ.ம.காவின் செல்வாக்கை எடுத்துரைக்கின்றது.அமைச்சர் றிஷாதினால் சம்மாந்துறையிலும் தையல் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதனைக் திறக்காமல் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்பு அமைச்சர் றிஷாதின் நிகழ்ச்சி நிரலில் மாவடிப்பள்ளி நூலகத்தை திறக்கும் நிகழ்வு இருந்தது.திவிநெகும திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மாவடிப்பள்ளி புதிய நூலகமானது கடந்த ஒரு வருட காலமாக சில அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் திறக்க முடியாத நிலையில் இருந்தது.இதன்  அடிப்படைத் தேவைகளை கிழக்கு முதலமைச்சர் உட்பட மு.காவைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று பார்வையிட்டும் எதுவுமே செய்யவில்லை.இதற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதியை ஒதுக்கிவிட்டு அதனை மீள எடுத்துள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது.ஒரு தடவை இந் நூலகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு முதலமைச்சர் இதற்கு தேவையான ஐந்து இலட்சம் ரூபாயை தான் பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தார்.கிழக்கு முதலமைச்சருக்கு இந்தப் பணம் ஒரு பொருட்டேயல்ல.இவர் ஒரு மாதத்திற்கு இதனை விட கூடியதலான தொகையை தனது வாகங்களுக்கான எரிபொருளுக்கு செலவு செய்வார்.அம்பாறை மாவட்டத்தில் மு.காவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் (இதில் இருவர் பிரதி அமைச்சர்) ஐந்து மாகாண சபை உறுப்பினர்களும் (இதில் ஒருவர் மாகாண அமைச்சர்) உள்ள நிலையில் ஐந்து இலட்சம் என்பது ஒரு சிறிய பணம்.இருந்த போதிலும் யாருமே உதவவில்லை.மாவடிப்பள்ளி ஊரானது எக் காலமும் மு.காவை ஆதரிக்கும் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான நிலையில் இவ் விடயம் அரச வர்த்தக கூட்டுத் தாபனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் அஸாம் ஹாபிஸ் மூலம் அமைச்சர் றிஷாத்தின் காதுகளை எட்டியது.இதனை அமைச்சர் றிஷாதின் பார்வைக்கு கொண்டு சென்ற மறு கனம் அமைச்சர் றிஷாத் அதற்குரிய நிதியை வழங்கியிருந்ததோடு நெல்சிப் திட்டத்தின் கீழ் இந் நூலகத்தை மேலும் அபிவிருத்தி செய்யவும் திட்டமிட்டிருந்தார்.இது அ.இ.ம.கா போராளிகளுக்கு ஒரு உத்வேகத்தை வழங்கியிருந்தது.குறித்த நூலகத்தில் வேலை செய்த ஊழியரிடம் அதற்குத் தேவையான பொருட்களை அறிந்து கொண்டு அனைத்துப் பொருட்களையும் அ.இ.ம.கா ஆதரவாளர்கள் வாங்கியுமிருந்தனர்.இந் நிலையில் காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் நாகராஜா அவர்களை அரச வர்த்தக கூட்டுத் தாபனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் அஸாம் ஹாபிஸ் தொடர்பு கொண்டு இந் நிகழ்விற்கு அனுமதி தருமாறு கோரியுள்ளார்.அப்போது புதிய நூலகம் இன்னும் உத்தியோக பூர்வமாக திறக்கப்படவில்லை என்ற விடயத்தை கூறிய அவர் இதன் காரணமாக இதனை திறக்க அனுமதி தர முடியாதென உடனடியாக மறுத்திருந்தார்.இவ்வாறான விடயங்களுக்கு முதலமைச்சரின் அனுமதியின்றி அனுமதியளிக்க வேண்டாம் என தங்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் தனது கருத்திற்கான நியாயத்தையும் எடுத்துரைத்தார்.இதற்கு அஸாம் ஹாபிஸ் அந் நூலகத்தை தாங்கள் திறக்கவில்லை எனவும் தாங்கள் வாங்கிய பொருட்களை கையளித்துவிட்டு செல்கிறோம் எனக் கூறினார்.அதற்கு காரைதீவு பிரதேச சபை செயலாளர் பொருட்களை கையளிப்பதென்றால் பிரச்சினையில்லை எனக் கூறிவிட்டு எதற்கும் தனது உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்கு பதில் சொல்கிறேன் எனக் கூறுகிறார்.

இதன் பிறகு அமைச்சர் றிஷாத் அணியினர் காரைதீவு பிரதேச சபை செயலாளர் நாகராஜா அவர்களை  தொடர்பு கொண்ட போது புதிய நூலகக் கட்டிடத்திற்குள் எதுவும் செய்ய வேண்டாம்.தேவையென்றால் பழைய கட்டடத்திற்குள் பொருட்களை கையளித்துவிட்டு செல்லுங்கள் என கூறினார்.இது உங்கள் அரசியல் பிரச்சினை இதற்கு நாங்கள் என்ன செய்வது? நாங்கள் அவர்களின் கீழ் உள்ளதால் அவர்கள் சொல்வதையே கேட்க வேண்டும் எனவும் கூறுகிறார்.இருவரும் பழைய நூலகத்தினுள் பொருட்களை கையளிக்க உடன்பாட்டுக்கு வந்து தொடர்ந்து வேறு சில விடயங்கள் பற்றி கதைத்திருந்தனர்.அமைச்சர் றிஷாத் அணியினர் பழைய நூலகத்தினுள் பொருட்களை  கையளிக்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டு காலையில் சென்ற போது அவ் நூலகத்திற்கு பூட்டுப் போட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.இது தனது கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்து பொருட்களை கையளிக்கும் குறித்த விநாடிகளை எண்ணிக் கொண்டிருந்த அ.இ.ம.காவின் போராளிகளுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.இதனைக் கண்டித்து மாவடிப்பள்ளி இளைஞர்கள் பதாதைகள் தாங்கி ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர்.

காரைதீவு பிரதேச சபை செயலாளர் குறித்த சம்பவ நாளன்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்றிருந்த நடமாடும் சேவையில் பிரதேச சபையின் ஊழியர்கள் கலந்து கொள்ள ஏற்பாடாகிருந்தமையால் இந் நூலகம் குறித்த தினம் மூடப்பட்டிருக்கும் என தான் அமைச்சர் றிஷாத் அணியினருக்கு அறிவித்திருந்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.அரச வர்த்தக கூட்டுத் தாபனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் அஸாம் ஹாபிஸ் பொருட்களை கையளிக்க அனுமதி கேட்ட போது அவர்  இவ்வாறு எங்கும் குறிப்பிடவில்லை.இது தொடர்பில் நான் அவரிடம் வினவிய போது குறித்த அமைச்சர் றிஷாதின் இணைப்பாளர் தன்னை அச்சுறுத்தியதால் அங்கு பிரச்சினை தோன்றும் என்பதனாலேயே அதனை மூடியதாக கூறினார்.இப்படி அவரது முன்னுக்கு பின் முரணான கதைகள் அவரது பேச்சில் மலிந்து கிடக்கின்றன.அட்டளைச்சேனையில் இடம்பெற்ற நடமாடும் சேவைக்கு காரைதீவு பிரதேச சபையின் அனைத்து ஊழியர்களும் செல்லவில்லை.இப்படியான நிலையில் இச் சிறிய ஊரில் இந் நூலகத்தில் வேலை செய்த ஒரே ஒரு ஊழியரை இவர்கள் அழைத்துக் கொண்டு செல்லத் தான் வேண்டுமா? அந் நடமாடும் சேவையும் மு.காவினரால் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இங்குள்ள கருத்துக்கள் அனைத்தையும் முடிச்சு போட்டுப் பார்க்கும் போது இதில் அரசியல் சித்து விளையாட்டுக்கள் மலிந்து கிடப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.இந்த முஸ்லிம் கட்சிகளின் அரசியல் விளையாட்டில் மாற்று மத சகோதரர் ஒருவர் அகப்பட்டு தவித்துக் கொண்டிருக்கின்றார்.தாங்கள் செய்வதுமில்லை செய்பவரை விடுவதுமில்லை என்ற போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

எது எவ்வாறு இருப்பினும் குறித்த நூலகத்தை உடைத்தமை மிகத் தவறாகும்.அமைச்சர் றிஷாத் பதியூர்தீன் குறித்த நூலகத்திற்கு என்ன நடந்துள்ளது என்பதை அறியவும் அங்கு மனம் உடைந்திருந்த போராளிகளை திருப்தி செய்யவுமே சென்றிருந்தார்.அங்கு குழுமியிருந்த அ.இ.ம.காவின் போராளிகள் அமைச்சர் றிஷாத்தை தூக்கி தோழில் சுமந்தி தங்கள் அவாவை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.அதன் போது உணர்ச்சி வசப்பட்ட போராளிகள் அந் நூலகத்திற்கு சேதத்தை ஏற்படுத்தி இருந்தனர்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் உணர்ச்சி வசப்படுவது தவிர்க்க முடியாதவொன்று.இதனை அவ்விடத்திலேயே கண்டித்த அமைச்சர் றிஷாத் உடனடியாக அவ்விடத்தை விட்டும் விலகிச் சென்றார்.அரசியல் விளையாட்டுக்களால் மக்கள் தவாறன பாதைக்கு உந்தப்பட்டதற்கு இதுவும் ஒரு ஆதாரமாகும்.அமைச்சர் றிஷாத்தை  பழைய நூலகத்தில் பொருட்களை கையளித்துவிட்டுச் செல்ல அனுமதியளித்திருக்கலாம்.பின்னர் புதிய நூலகத்தை முதலமைச்சர் திறந்திருக்கலாம்.இதில் என்ன தவறுள்ளது? இனி என்ன மிக விரைவாக செயற்பட்டு மு.கா இதனை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.இதனை எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு பிறகு திறக்க ஏற்பாடு நடப்பதாகவும் அறிய முடிகிறது.

இதன் பிறகு கல்முனை,மருதமுனை,நற்பட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் பல தையல் பயிற்சி நிலையங்களை திறந்து வைத்த அமைச்சர் றிஷாத் கல்முனை தரவைப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.அ.இ.ம.கா முன்னர் ஏற்பாடு செய்த இடத்திற்கு அண்மையில் இருந்த பள்ளிவாயலில் ராத்திப் மஜ்லிஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையை காரணம் அவ்விடத்தில் பொதுக் கூட்டம் நடாத்த இயலாது அமைச்சர் றிஷாத் அணியினர் தடுக்கப்பட்டிருந்தனர்.பள்ளிவாயலில் ராத்திப் மஜ்லிஸ் நடந்ததை நாம் விமர்சிக்க முடியாது.இருந்தாலும் இத் தடையே அமைச்சர் றிஷாத்தின் பொதுக் கூட்டத்திற்கு மக்களிடையே அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததோடு பெருமளவான சனத்திரளை கூட்டியிருந்தது.கல்முனையில் ஒரு பொதுக் கூட்டத்தை எந்த வித பிரச்சினையுமின்றி நடாத்துவது அவ்வளவு இலகுவானதல்ல.அங்கு சனத்திரளின் பிரதிபலிப்பு இதன் பிறகு மு.காவினரை அம்பாறையில் தூங்க விடாது என்பதில் ஐயமில்லை.யார் எப்படி எங்கு குற்றினாலும் அரிசானால் சரி.

குறித்த நாள் மு.கா அட்டளைச்சேனையில் நடமாடும் சேவை நடாத்தியது.இது பதினைந்து மத்திய மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களினதும்,திணைக்களங்களினதும் ஒத்துழைப்புடன் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் அம்பாறை மாவட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.இதில் பல இடங்களையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஒரு இடத்தில் இருந்தமையால் பல நாள் பொது மக்கள் அலைந்து செய்யக்கூடிய பிரச்சனைகளை மிக இலகுவாக தீர்த்துக்கொண்டுள்ளனர்.மக்களுக்கான வாழ்வாதார உதவி,இலவச நீர் வழங்கல்,இலவச மின் இணைப்பு,வைத்திய முகாம்,பொது மக்களுக்கு தேவையான விசேட உதவிகளும் வழங்கப்பட்டிருந்தன.குறித்த நாள் அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான விடுதி மற்றும் பாலமுனை வைத்தியசாலையின் கிளினிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டதுடன் பாலமுனை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை மு.காவின் தலைவர் திறந்தும் வைத்திருந்தார்.இவ்வாறு மு.கா ஒரு நாளில் பல இடங்களுக்கு விஜயம் செய்து சேவை மழையை பொழிவது அண்மைக்காலமாகவே நடந்தேறி வருகிறது.

இந் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் பாலமுனைக்கு சென்றிருந்த மு.கா குழுவினரிடம் (குறிப்பாக தலைவரிடம்) பாலமுனை மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீமினால் வழங்கப்பட்ட தொழில்களில் பாலமுனை மக்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் மிகவும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.இதன் போது அமைச்சர் ஹக்கீம் அம் ,மக்களின் சொல் அம்புகளால் மிக அதிகமாக காயப்படுத்தப்பட்டிருந்தார்.அந்த மக்கள் அங்கு நடந்து கொண்ட முறைமை விரக்தியின் உச்சமெனலாம்.பாலமுனை மு.காவின் அசைக்க முடியாத கோட்டையாகும்.இந்த கோட்டையினுள் இவ்வாறான சலசலப்புக்கள் எழுவது மு.காவின் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல.இந் நிகழ்வில் உரையாற்றிய கலைக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அன்சில் கூட மிகவும் காரசாரமாக தனதுரையை அமைத்திருந்தார்.ஒரு இடத்தில் அமைச்சர் ஹக்கீமின் பெயரை சுட்டிக் காட்டி நேரடியாக தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதன் பிற்பாடு அமைச்சர் ஹக்கீம் மு.காவின் முக்கியஸ்தர்களுக்கு மிகக் கடுமையான தொனியில் ஏசியதாகவும் அறியக்கிடைத்தது.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 12-09-2016ம் திகதி திங்கள் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 61வது கட்டுரையாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *