உலகம் முழுவதிலும் இருந்து மக்கா நகருக்கு மக்கள் செல்லும் புனித ஹஜ் பயணம் நேற்று தொடங்கியது. மக்காவில் இருந்து மினா நகரை நோக்கி 15 லட்சம் மக்கள் புறப்பட்டனர். இந்தமுறை பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்ட போதும் ஈரான் தங்கள் நாட்டு மக்களை ஹஜ் பயணத்திற்கு அனுப்ப அனுமதிக்காமல் புறக்கணித்துள்ளது. இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பயணிகள் முஹம்மது நபியின் பிறந்த ஊரான மக்கா, மற்றும் அவரது நினைவிடம் அமைந்துள்ள மதினா நகரங்களுக்கு புனித யாத்திரை செல்கின்றனர்.
இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்கு உலகம் முழுவதும் இருந்து புறப்பட்டுவந்த சுமார் 15 லட்சம் யாத்ரீகர்கள் இன்று மக்கா நகரில் இருந்து ஹஜ் பயணத்தை தொடங்கியுள்ளனர். இங்கிருந்து மினா நகருக்கு புறப்பட்டு செல்லும் இவர்கள் அங்கு சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிவிட்டு அரபா மலையில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் வரும் திங்கட்கிழமை பங்கேற்கவுள்ளனர்.
கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது மக்காவில் உள்ள பெரிய மசூதி வளாகத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்து மற்றும் சாத்தான் மீது கல்லெறியும் சம்பிரதாயத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி சுமார் 2 ஆயிரம் யாத்ரீகர்கள் பலியானதுபோல் இந்த ஆண்டு அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்கும் பொருட்டு சவுதி அரசு பல்வேறுகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எதிர்பாரா விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கில் புனிதப் பயணிகள் அனைவருக்கும் மின்னியல் கைப்பட்டை வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமுள்ள இடங்களை அறிந்து புனிதப் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ள அது உதவும். புனித மக்காவில் மட்டும் 800-க்கும் அதிகமான சுற்றுப்புறக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
புனிதப் பயணிகள் இங்கு வந்து சேர்ந்ததிலிருந்து, கடமைகளை முடித்துவிட்டுத் திரும்பும்வரை அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவிதச் சமரசமும் செய்யப்படமாட்டாது என்று மேஜர் ஜெனரல் முகம்மது அல் அஹ்மதி கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து மட்டும் இந்த ஆண்டு ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஹஜ் யாத்திரைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து ஏறக்குறைய 1.36 லட்சம் இந்தியர்கள் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு சவுதி அரேபியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நூற்றுக்கணக்கானவர்கள் நெரிசலில் சிக்கி பலியானார்கள். அவர்களில் பலர் ஈரானியர்கள். சவுதி அரேபிய அரசாங்கம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய ஈரான், இந்த ஆண்டு தன் நாட்டைச்சேர்ந்த யாரையும் மெக்காவுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.