Breaking
Fri. Nov 22nd, 2024

(அபூ செய்னப்) 

புதிதாக எதையும் நாம் கேட்கவில்லை எமது பூர்வீக பூமியை தாருங்கள், இந்த பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் யாழ் மாவட்ட முஸ்லிம்கள்  இங்குள்ள தமிழர்களோடு ஒற்றுமையாகவும்,விட்டுக்கொடுப்புடனும் நடந்து கொண்டவர்கள் எனவே இந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் தலைமைகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக  கிளிநொச்சி -யாழ் மாவட்ட சம்மேளனத்தினால் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.4b89e16b-f6a0-40c2-a078-22b3bce291ee
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்

கடந்த காலத்தில் விடுதலையின் பேரில் வடபுலத்து முஸ்லிம்கள் மிகவும் குறுகிய நேரத்தில் துடைத்தெரியப்பட்டது அனைவரும் அறிந்த நீண்ட காலமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற உண்மையாகும். இன்றைய சமாதான சூழலிலே தமது பூர்வீகம் இழந்து இடம்பெயர்ந்து நாட்டில் பல்வேறுபட்ட பிரதேசங்களிலும் அகதி வாழ்க்கை வாழுகின்ற பாதிக்கப்பட்ட ஒரு சமூகம் பற்றி எல்லோரும் பேசுகின்றார்களா என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கிறது, ஆனால் எமது கட்சியினுடைய தேசியத்தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் இது பற்றி தேசியத்திலும்,அதற்கப்பாலும் மிகவும் காத்திரமான பேசிவருவதும், இந்த வடபுலத்து மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மிகுந்த கரிசனையோடு செயற்படுவதும் கடந்த கால வரலாற்றை ஆராயும் போது தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.6bd79796-b337-4d3f-85cd-7125494b3d4d

அந்த வகையில் இந்த யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய இன்றை இந்த கலந்துரையாடலும் ஒரு ஆரோக்கியமான அடுத்த கட்ட நகர்வுக்குள் பாதிக்கப்பட்ட மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்ற முஸ்லிம்களை கொண்டு செல்லும் என நான் நம்பிக்கையுடன் பதிய விரும்புகிறேன்.

இந்த நாட்டிலே ஒரு போராட்டம் பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு பூச்சியத்திலே முடிவுக்கு வந்திருக்கிறது,அந்தப்போராட்டம் யாருக்கும் எதையுமே பெற்றுக்கொடுக்கவில்லை வெறுமனே அழிவுகளையும்,இழப்புக்களையும்,இடம்பெயர்வுகளையும்,நம்பிக்கையீனத்தையும் மட்டுமே எமக்கு அறுவடையாக தந்துவிட்டு சென்றுவிட்டது.
முஸ்லிம்களைப்பொருத்த மட்டில் இந்த நாட்டில் தனிநாடு கேட்டோ அல்லது வேறுவகையிலோ இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடாத்திய வரலாறு கிடையாது,எதிர்காலத்திலும் ஆயுதம் ஏந்தி போராடுகின்றன ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்காது. தமது உரிமைகளையும் தேவைகளையும் ஜனநாயக ரீதியில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற பூரண நம்பிக்கை முஸ்லிம் சமூகத்தில் பலமாக வேறூண்டி உள்ளது,ஆனால் தமது உரிமைக்காக போராடுகின்றோம் எனும் கோதாவில் ஆயுதம் ஏந்திய ஒரு சிறுபான்மைச்சமூகம் இன்னொரு சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை பரித்தெடுக்கும் ஒரு ஜனநாயக முரண் செயற்பாட்டினை செய்துள்ளதை இன்று யாரும் மறுப்பதற்கில்லை.அந்த உரிமை மறுக்கப்பட்ட,கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட இந்த முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றம் பற்றி இன்றைய தமிழ் தலைமைகளும் பேசா மடந்தைகளாக அல்லது வெறுமனே சாக்குப்போக்குச் சொல்லி காலங்கடத்துவது முஸ்லிம் மக்கள் இடத்தில் தமிழ் தலைமைகள் மீதான வலுவான சந்தேகத்தை விதைத்துவிடும் என்றே நான் கருதுகிறேன்.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றி தமிழ் தலைமைகள் ஒரு ஆரோக்கியமான முடிவுக்கு வரவேண்டும்,இந்த இரண்டு சிறுபான்மை சமூகங்களும் பரஸ்பர நம்பிக்கையுடனும்,ஒற்றுமையுடனும் இனியும் செயற்பட தவருவோமாயின் பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து தமிழ்-முஸ்லிம் சமூகங்கள் எந்த சாதகமான பாத்தியத்தையும் பெற்றுக்கொள்ள முடியாது, நமது ஒற்றுமையும், பலமான குரலும் மட்டுமே தமிழர்களின் ஜனநாயக உரிமையையும்,முஸ்லிம்களின் ஜனநாயக உரிமையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற உண்மையை தமிழ் தலைமைகள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் உரிமையும்,அவர்களுக்கு மறுக்கப்பட்ட இன்னோரன்ன விடயங்களும் கட்டாயம் கிடைக்கவேண்டும் அதற்கான சாத்வீகப்போராட்டத்தின் பின்புலத்தில் நாங்கள் கட்டாயம் ஒத்துழைப்பு வழங்குவோம்.அவ்வாரே முஸ்லிம்களின் இந்த நியாயமான கோரிக்கைகளில் தழிழ் தலைமைகள் தங்களது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும், என அவர் கூறினார்.

இந்த மக்கள் சந்திப்பில் அவர்களின் மீள்குடியேற்றம் பற்றிய பல்வேறுபட்ட விடயங்கள் ஆலோசிக்கப்பட்டது.இந்தக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அ.இ.ம.கா இன் அமைப்பாளர் அமீன் ஹாஜியார்,கிளி மாவட்ட சம்மேளனத்தலைவர் ஜமால்தீன் ஹாஜியார், யாழ் பணிமனை தலைவரும், யாழ் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான சுபியான் மெளலவி,  யாழ் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அஸீஸ் மெளலவி,யாழ் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம்,சகோதரர் ரொக்கீஸ்,சுனீஸ்,தையூப்,நிலாம், ஊடகவியலாளர் லாபீர் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய பிரதி அமைச்சர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *