தொழில்துறை திணைக்களம் மற்றும் கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண கைத்தொழில் கண்காட்சி வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் 08.09.2016 அன்று அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது இக்கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
மேற்படி ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் இணைப்பு செயலாளர், மாகாணசபை உறுப்பினர்களான அ.ஜெயதிலக, செ.மயூரன், ரா.இந்திரராஜா, தொழிற்திணைக்கள பணிப்பாளர் திருமதி உசா சுபலிங்கம், முதலமைச்சரின் செயலாளர் திருமதி கேதீஸ்வரன், வவுனியா மாவட்ட செயலாளர் ரோகன புஸ்பகுமார, நெடுங்கேணி உதவி பிரதேச செயலாளர், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், அலுவலர்கள் மற்றும் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த கிராமப்புற, நகர்புற உற்பத்தியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஒவ்வொரு பிரிவிலும் மாகாண ரீதியில் சிறந்த உற்பத்தியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அங்கு உரையாற்றிய அமைச்சர் டெனிஸ்வரன் கைத்தொழில் திணைக்களம் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களை ஊக்குவித்து கொண்டிருப்பதாகவும் மற்றும் தமது அமைச்சின் கீழ் வரும் கிராம அபிவிருத்தி திணைக்களம் கிராம மட்டத்தில் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார், பல கஷ்டத்தின் மத்தியில் உற்பத்தியினை மேற்கொண்டுவரும் இவர்களை ஊக்கப்படுத்துவது மற்றும் இவர்களுக்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை எனவும், சந்தை வாய்ப்பு இல்லையெனில் எமது முயற்சிகள் அனைத்தும் வீண் எனவும் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சரினால் விழாவிற்காக அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையினையும் அங்கு அமைச்சர் வாசித்தார் அதில் முதலமைச்சர் பல்வேறு விடயங்களை தெரிவித்திருந்தார் அவை எதிர்காலத்தில் உற்பத்தியாளர்களுக்கான சிறந்த கருத்துக்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
குறிப்பாக முதலமைச்சர் தனது அறிக்கையில் எமது மக்கள் பல பெறுமதி வாய்ந்த உற்பத்திகளை எமது வீட்டுத்தேவைக்காகவே உற்பத்தி செய்து பயன்படுத்துவதாகவும் அவற்றுக்கு வெளிநாடுகளில் நல்ல சந்தைவாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் மேலும் உற்பத்தியாளர்கள் வெளிநாட்டவர்களை கவரும் விதத்தில் தமது உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும்மெனவும் உதாரணமாக அழகுபடுத்தும் வேலைப்பாடுகள், நறுமணங்கள் போன்றவற்றை உற்பத்திப்பொருளில் சேர்க்கமுடியும் எனவும், இவ்வாறான உற்பத்தி பொருட்களை வெளிநாட்டவர்களை கவரும் விதமாகவும் சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விற்பனை நிலையமொன்றை அமைப்பதற்கு திணைக்களத்தினர் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய அமைச்சர் வெளிநாட்டில் இருந்து பலர் இங்குவந்து எமது உற்பத்திப்பொருட்களை கொள்வனவுசெய்ய தயாராக இருபதாகவும் குறிப்பாக கனடா நாட்டிலிருந்து வந்து தம்மை சந்தித்த சிலர் இவ்வாறான உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்ததோடு உற்பத்தி மாதிரிகளையும் பெற்றுசென்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இவ்வாறானவர்களை இனம்கண்டு திணைக்கள அதிகாரிகள் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென அமைச்சர் கேட்டுக்கொண்டார்.