அண்மையில் யாழ் பல்கலைகழக தொழுகையறை தாக்கப்பட்டமைக்காக அகில இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்ற அனைத்து முஸ்லிம் மாணவர்கள் சார்பாகவும் தலைவர் என்ற வகையில் நான் எனது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நல்லாட்சி அரசிலே இப்படியான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கடந்த ஆட்சிகளைப் போன்று இந்த ஆட்சியிலும் இப்படியான நிலைமைகள் ஏற்படுவதென்பது மிகவும் வருத்தத்துக்குரியது.
வட மாகாணத்தில் மட்டுமன்றி இந்த இலங்கை நாட்டிலே மீண்டும் துளிர்விட்டு வரும் இன நல்லுறவை, சீர்குலைக்கும் நோக்குடன் இனந்தெரியாதோரால் மேற்கொண்டுள்ள தாக்குதல் பல்கலைக்கழகங்களில் கற்கின்ற அனைத்து முஸ்லிம் மாணவர்களையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் முஸ்லிம் மாணவர்கள் இன நல்லுறவோடும், ஐக்கியத்தொடும் ஏனைய இனங்களோடு செயற்படுகிறார்கள். இந்நிலையில் மாணவகளிடையே கசப்புணர்வை ஏற்படுத்தி, இன விரிசலை ஏற்படுத்த இனவாத சக்திகள் முயற்சிக்குகிறார்கள்.
விசேடமாக பல்கலைக்கழகம் என்பது புத்திஜீவிகளை உருவாக்கும் இடமென்பதால், பல்கலைக்கழகங்களில் இனவாத செயற்பாடுகள் உருவெடுப்பது எமது நாட்டுக்கே ஒரு அவப்பெயரை ஏற்படுத்திவிடும். ஆதலால் பல்கலைக்கழகங்களில் இனவாத சிந்தனைகள் உருவாவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
குறிப்பாக உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து இதற்கு உரிய நடவடிக்கையை அவசரமாக எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சுமார் 6௦௦ இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற இப்பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் இவர்கள் இவர்களது பணியை இன ஒற்றுமையுடனும், ஐக்கியமாகவும் செய்துள்ளார்கள். இந்நிலையில் இது இவர்களுக்கு செய்யப்பட்ட மிகப் பெரிய அநியாயமாகும். நாம் இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இப்படியான சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் உருவாகாது இதற்கு ஒரு தகுதியான தீர்வைப் பெற்றுத் தருமாறு அகில இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறேன். குறிப்பாக முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சமய தலைமைகள் இவ்விடயத்தில் தலையிட்டு முறையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
அண்மையில் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவில் உயர்கல்வி அமைச்சர் கெளரவ லக்ஷ்மன் கிரியல்ல, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் கெளரவ ரிஷாத் பதியுதீன், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பல்கலைக்கழக உபவேந்தர்களுடனான ஒரு சந்திப்பு நடைபெற்ற வேளையில், மிகவும் கருணையோடு மாணவர்களுடன் கதைத்த யாழ் பல்கலைகழக உபவேந்தர், அங்கு முஸ்லிம்களுக்கு எந்த தேவை இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினை இருந்தாலும் தன்னுடன் கதைக்கும் படியும், தான் அதற்கு தகுந்த தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் கூறினார். அந்த வகையில் இப்பிரச்சினைக்கும் உரிய தீர்வை யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பெற்றுக்கொடுப்பர் என நாம் உறுதியாக நம்புகிறோம்.