(சுஐப் எம்.காசிம்)
அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிராஸ் நேற்று மாலை (29/08/2016) கொழும்பில் கூடி, தீர்க்கமாக ஆராய்ந்து இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது.
மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இறுதிக்கட்டக் கலந்துரையாடலில் சட்டத்துறை, அரசியல்துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு, அது தொடர்பில், மிக முக்கியமான தலைப்புக்களில் ஆராய்ந்து காத்திரமான முடிவுகளை மேற்கொண்டனர். கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் இருந்து பெற்ற தகவல்கள், ஆலோசனைகள் கருத்துக்களை இவர்கள் பரிசீலித்ததுடன் சமூகம் சார்ந்த புத்திஜீவிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளையும் தமது கருத்துக்கு எடுத்தனர்.
இத்தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கட்சியால் உருவாக்கப்படும் இறுதி வரைபை மிக விரைவில் பல்வேறு அமைப்புக்களிடம் வழங்கி வைப்பதற்கும், அரசியலமைப்பு சபையிடம் அதனை கையளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த இறுதிக்கட்டக் கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் சுபைர்தீன் ஹாஜியார், கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அணீஸ், சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம்.சஹீத், ருஸ்தி ஹபீப், பிரபல ஆய்வாளர் எம்.ஐ.எம்.மொஹிடீன், தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஜீத் (எஸ்.எஸ்.பி), மனிதஉரிமை ஆர்வலர் கலாநிதி யூஸுப் கே. மரைக்கார் ஆகியோர் பங்கேற்றனர்.