(மொஹமட் பாதுஷா)
பல மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் இடம்பெற்ற அமளி துமளியும் சொல்லாடல்களுமே முஸ்லிம் அரசியலின் இவ்வார ஸ்பெஷசலாக ஆகியிருக்கின்றன. இக்கூட்டத்தில் மு.காவின் தவிசாளர்.
பஷீர் சேகுதாவூத் அவமானப்படுத்தப்பட்டார்;அவரைப் பேச விடாமல் கூச்சலிட்டார்கள்மூக்குடைந்து வெளியேறினார் என்று ஒரு தரப்பினர் சொல்லிக் கொள்கின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் உட்கட்சி முரண்பாடுகள் வலுவடைந்தமைக்கு கூட்டு ஆலோசனை முறைமை இல்லாமல் போனமையும் கட்சிக்குள் ஜனநாயக விழுமியங்கள் கட்டிவளர்க்கப்படாமையுமே அடிப்படைக் காரணங்கள் என்று அந்தக் கட்சியின் செயலாளாராகவும் தவிசாளராகவும் பதவி வகித்துக் கொண்டிருக்கும் எம்.ரி.ஹசன்அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோர், தலைவருடன் முரண்படத் தொடங்கியதில் இருந்தே கூறி வருகின்றனர். பனிப்போர் தொடங்கிய பிறகு செயலாளர் ஹசன்அலி பொது வெளியில் அவ்வப்போது தமது நிலைப்பாடுகளைக் கூறி வருகின்றார்.
சமகாலத்தில், பஷீர் மிகக் காட்டமான கடிதங்களை எழுதியது மட்டுமன்றி அதை மக்கள் மன்றத்திலும் முன்வைத்தார். தான் எதற்காக ஹசன்அலியின் பக்கம் நிற்கின்றேன் என்று விளக்கமளித்து ஆரம்பத்தில் எழுதிய கடிதம் உயர்பீட உறுப்பினர்களிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அதற்குப் பிறகு, ‘தாருஸ்ஸலாம் காணி, கட்டடம் மற்றும் கட்சிச் சொத்துக்களின் உரித்துடமை’ என்ற தலைப்பில்; 03.06.2016 ஆம் திகதியிடப்பட்டு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் விபரங்களை உயர்பீட உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக தவிசாளர் 11.07.2016ஆம் திகதியன்று உயர்பீட உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இக்கடிதத்தில், தாருஸ்ஸலாம் கட்டடத் தொகுதியின் உரிமை யாருக்கு உள்ளது? அதிலிருந்து வருமானங்கள் கிடைக்கின்றதா? தனியார் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தாருஸ்ஸலாமுக்கு அருகிலுள்ள காணித் துண்டின் பழைய, புதிய உறுதிகளை உயர்பீடத்திற்கு காண்பிக்க முடியுமா? கட்சியின் மரச் சின்னத்திற்கு எதிராகப் போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில்; வழக்கு தொடுத்தவரிடம் இருந்து மானநஷ்டஈடு பெறப்பட்டதா? என்பது உள்ளடங்கலாக 12 கேள்விகளை தவிசாளர் இதில் கேட்டிருந்தார். இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரியாத ஓர் அப்பாவியாக பஷீர் இதனைக் கேட்கவில்லை. மாறாக, அவருக்கே பதில்கள் தெரியும். ஆனால் தலைவரை இக்கட்டுக்குள் சிக்கவைத்தது அவரது வாயாலேயே உண்மைகளை வெளியில் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலேயே இதை எழுதினாhர் என்று சொல்லலாம்.
இந்தக் கேள்விகளை முதலில் எழுப்பியவர் பஷீர் என்றாலும், அது கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், போராளிகள் மற்றும் மக்களது கேள்விகளாக அவை உருமாற்றம் பெற்றன. முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் நிதிக்காக உண்டியலில் காசு போட்டது, வாக்குச்சீட்டில் புள்ளடியிட்டது வரை எல்லா விதத்திலும் கட்சி விடயத்தில் மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அந்த அடிப்படையில், இந்தக் கட்சியின் சொத்துக்கள் யாருக்கு இருக்கின்றன? அதன் கணக்கு வழக்குகள் என்ன? என்ற கேள்விக்கான பதிலை சொல்லுமாறு கேள்வி கேட்க ஒரு சாதாரண போராளிக்கும் பொதுமகனுக்கும் தார்மீக உரிமை இருக்கின்றது. ஆனால், தலைவர் பதிலளிக்கவும் இல்லைƒ பஷீர் தனக்குத் தெரிந்த (?) மர்மங்களை அவிழ்த்து விடவும் இல்லை.
கட்சியின் தலைவர் ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். அதாவது, ‘கட்சிக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை கட்சிக்குள்ளேயே பேசுவதற்கான எல்லா வாய்ப்புக்களும் இருக்கத்தக்கதாக அங்கெல்லாம் இதைப் பற்றி ஒரு முறையேனும் பேசாது, இப்போது வெளியில் அறிக்கை விடுவது ஆரோக்கியமானதல்ல’ என்று கூறிவந்தார். ‘எதுவாக இருந்தாலும் கட்சிக்குள்ளேயே பேசி அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும்’ என்பது அவரது நிலைப்பாடாக தெரிந்தது. இது உண்மையில் பலரதும் அவதானிப்பை பெற்ற ஒரு கருத்தாகும்.’ ‘அதுதானே கட்சிக்குள் பேசி இருக்கலாம் தானே, இவர்கள் என்ன வெளியில் வந்து பகிரங்கமாக விமர்சிக்கின்றார்கள், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறுகின்றார்கள். இதில் ஏதோ இருக்கின்றது’ என்று பொது மக்களும் பேசிக் கொண்டனர். இந்தக் கோணத்தில் பஷீரின் நடவடிக்கை விமர்சிக்கப்பட்டதும் உண்டு.
இவ்வாறான நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. பாரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சர்ச்சைக்குரியவர்களான செயலாளரும் தவிசாளரும் பிரசன்னமாகி இருந்தனர். இதன்போது ‘யுனிட்டி பில்டர்ஸ்’ தொடர்பான சில கணக்கு விபரங்கள் சபைக்கு அறிவிக்கப்பட்டன.
பிரதேச குழுக்களை மறுசீரமைத்தல், தேர்தல்முறைச் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அத்துடன் கட்சியின் யாப்பை சீர்திருத்துவதற்கான யோசனைகளை ஒன்றுதிரட்டும் குழு நியமிக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் பல்வேறு விடயங்களை தொட்டுப் பேசியதாகவும் தாருஸ்ஸலாம், ‘லோட்டஸ் நம்பிக்கை நிதியம்’ மற்றுமொரு கம்பனி என்பவற்றின் கட்டமைப்பு சார்ந்த விடயங்களை முன்வைத்ததாகவும் அங்கிருந்த உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
உண்மையில், இந்த உயர்பீடக் கூட்டத்தை ஹக்கீம் நடத்தியது பாராட்டுக்குரிய விடயமாகும். தவிசாளரும் செயலாளரும் முரண்டுபிடித்துக் கொண்டு நிற்காமல் கூட்டத்திற்கு வந்ததும் நல்ல முன்மாதிரியாகும். மிக முக்கியமாக, பஷீரின் கேள்விகளுக்கு பதிலளிக்கின்ற தோரணையில் அவற்றுடன் தொடர்புபட்ட விடயங்களை இங்கு தொட்டுப்பேச தலைவர் முன்வந்தமையும் சந்தோசமான செய்தியே‚ இவ்வாறு பலதையும் பேசி முடிக்கும் தறுவாயில், ‘..இதுதான் நடந்தது. இவற்றையெல்லாம் கட்சிக்குள் வைத்து ஜனநாயகமான முறையில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து வெளியில் என்று அறிக்கைவிடக் கூடாது. அந்த வகையில், இங்கே குறிப்பிட்ட விடயங்களில் ஏதாவது கேள்விகள், சந்தேகங்கள் இருப்பின் இப்போது கேட்கலாம்’ என்ற கருத்துப்பட ஹக்கீம் கூறினார்.
அப்போது, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எழுந்தார். ‘நீங்கள் அளித்த விளக்கங்கள் நான் கடிதத்தில் கேட்ட கேள்விகளுக்கான விளக்கங்களாக அமையவில்லை. நீங்கள் புறக்காரணிகள் பற்றிப் பேசினீர்கள். அகக்காரணிகளைக் குறிப்பிடவில்லை. எனவே அதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்;’ என்று பேசத் தொடங்கும் போதே, சபையில் இருந்த சிலர் பஷீரை பேசவிடாது இடையூறு செய்தனர். ‘பேசக் கூடாது’ என்றும் ‘சபையில் இருந்து வெளியேற வேண்டும்’ என்றும் சிலர் சத்தமிட்டதாக உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இன்னும் சிலர் ‘பசீரை பேச விடுங்கள்’ என்றனர். ஓரிருவர் தலைவரை நோக்கி ‘சபையை கட்டுப்படுத்துமாறு’ கூறினர். வேறு சிலர் புதினம் பார்த்துக் கொண்டிருந்;தனர் என்கின்றார் அந்த உயர்பீட உறுப்பினர்.
நிலைமைகளை அவதானித்த தலைவர் ‘அமைதி காக்குமாறு’ சொல்லி இரண்டு மூன்று தடவைகள் சைகை செய்தார். ஆனால், உயர்பீடம் கிட்டத்தட்ட மீன்சந்தை போல மாறிவிட்டிருந்தது. தனக்கு இதற்கு மேல் பேச முடியாது என்பதை உணர்ந்து கொண்ட பஷீர் சேகுதாவூத் ஏதோ கூறிவிட்டு, பேச்சை நிறுத்தியதாகவும் உடனே தலைவர் ஹக்கீம் கூட்டத்தை நிறைவுசெய்து விட்டு வெளியேறி விட்டார் என்றும் அறியமுடிகின்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சொல்கின்ற தகவல்கள் ஊர்ஜிதமானவை என்றால், சில விடயங்கள் இவ்விடத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன.
அதாவது, கட்சியின் பிரச்சினைகளை கட்சிக்குள்ளேயே ஜனநாயகமாக பேசித் தீர்க்க வேண்டும் என்று மு.கா தலைவர் பல மாதங்களாக கூறிவருகின்றார். அத்துடன் உயர்பீடக் கூட்டத்தில் உரையாற்றி முடியும் தறுவாயில், இதுபற்றிய சந்தேகங்கள் இருந்தால் கேட்க முடியும் என்றும் சொல்லியுள்ளார். அந்த தருணத்திலேயே கட்சியின் தவிசாளர் பேசத் தொடங்கியுள்ளார் என்றால்.. அவரது கருத்து வெளியிடும் உரிமை அவ்விடத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுதான் உயரிய பீடத்திற்கு அழகு. 90 பேர் கொண்ட உயர்பீட உறுப்பினர்களுள் அதிகம்பேர் அன்று சமூகமளித்திருந்தனர். இவர்களுள் ஹசன் அலி, பஷீர் ஆதரவு உறுப்பினர்களும் இருந்தனர். ஆனால் அவர்கள் தலைவர் பேசும்போதோ அல்லது வேறு யாரும் கருத்துக் கூறும்போதோ கூச்சலிட்டுக் கூட்டத்தை குழப்பியதாக தகவல்கள் வரவில்லை. இங்கு நான்கைந்து பேரே தடங்கல்களை ஏற்படுத்தினர். இன்னும் சிலர் அவர்களுக்குச் சார்பாக குரல்கொடுத்தனர். சபையில் அமளிதுமளி ஏற்பட்ட பிறகு ஒருசிலர் பஷீருக்குப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கும்படி கூறியுள்ளனர். பெரும்பாலானவர்கள் நடுநிலைப் போக்கை கடைப்பிடித்தனர் என்பது இங்கு முக்கியமானது.
இச்சந்தர்ப்பத்தில் தலைவர் அமைதி காக்குமாறு சொல்லியும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றால், ஒன்று தலைமைத்துவக் கட்டுப்பாடு மீறப்பட்டுள்ளது. அல்லது தலைவர் இவ்வாறான நிலை ஏற்படுவதை மறைமுகமாக ஆசீர்வதித்திருக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இங்கு பிரஸ்தாபிக்கப்பட்ட தாருஸ்ஸலாம் விவகாரத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம் மிகக் குறைந்த வகிபாகத்தையே கொண்டிருக்கின்றார் என்று மு.காவின் மூத்த உறுப்பினர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட யாராவது இருப்பின் அவர்களே பஷீர் பேசுவதை தடுப்பதற்கான ஏற்பாட்டை செய்திருக்கலாம் என்று இவர்கள் அனுமானிக்கின்றனர். தலைவருக்கு தெரிந்தோ தெரியாமலோ தற்செயலாகவோ இது நடந்தும் இருக்கலாம்.
கட்சிக் கூட்டங்களில் சொற்போர்கள் நடப்பது சர்வசாதாரணமானது. ஆனால், ‘பிரச்சினைகளை கட்சிக்கு வெளியில் பேசித்திரிய வேண்டாம், கட்சிக்குள்ளேயே ஜனநாயகம் உள்ளது. இங்கு வந்து பேசலாம்’ என்று சொல்லிவிட்டு, இப்போது பேசுவதற்கு தடை விதிப்பது என்பது தவிசாளர் பஷீரின் ‘உட்கட்சி ஜனநாயகம் இல்லை’ என்ற நிலைப்பாட்டுக்கு வலுச் சேர்ப்பதாகவே அமையும். இது, அவர் பொது வெளியில் தகவல்களைக் கசிய விடுவதற்கும் அதனூடாக அரசியல் அனுகூலம் தேடுவதற்கும் ஏதுவான சூழலை தோற்றுவிக்கும். எனவே, இதனை முன்னரே உணர்ந்து கொண்ட பஷீர், அங்கு வாதம்புரியாமல் தனது பேச்சை நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளார் என்றும் ஊகிக்க முடிகின்றது. தவிசாளர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் என்னதான் சொல்ல வருகின்றார் என்பதைக் சபை கேட்டிருக்க வேண்டும்; கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொண்டிருக்க வேண்டும். அதன்மூலம் கட்சிக்குள் ஜனநாயகம் இருக்கின்றது என்பதை நிரூபணம் செய்ய முனைந்திருக்க வேண்டும். தேவை என்றால் கூட்டத்தை சில நிமிடங்களுக்கு இடைநிறுத்தி மீண்டும்.
பஷீரைப் பேச வைத்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. பஷீரை பேசவிடாது தடுத்தல் என்ற கோதாவில் அரங்கேறிய காட்சிகள், அவர் வெளியில் பேசுவதற்கான தூண்டுதல்களாகும். இது, கட்சியின் உயர்பீடம் என்ற சபையின் உயரிய சபையின் விழுமியங்களையும் கட்சிக்குள் இருக்கின்றது என்று சொல்லப்பட்ட ஜனநாயகத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. ஆக, தவிசாளர் தனது நிலைப்பாட்டை நியாயமுள்ளதாகக் காண்பிப்பதற்கு சாதகமான களத்தை உயர்பீடமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதாவது, சண்டைக்காரனின் கையில் பொல்லைக் கொடுத்து அனுப்பி இருக்கின்றார்கள்.