Breaking
Mon. Nov 25th, 2024

வடக்கு – கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் 21 முஸ்லிம் எம்.பிக்களும் இதற்கு கூட்டு எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என சமாதானத்துக்கான தேசிய இளைஞர் முன்னணி பகிரங்க அழைப்பைவிடுத்துள்ளது.

சமாதானத்துக்கான தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர் மொஹமட் நிப்றாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது:

இலங்கையில் முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்திலேயே செரிந்து வாழ்கின்றனர். இந்த மாகாணத்திலே முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுக்கு நிகரான உரிமைகளைப் பெற்றும் வாழ்கின்றனர். இருந்த போதிலும் கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தற்போதும் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

இளைஞர் – யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் இங்கு குறைவாக காணப்படுகின்றது. ஆதலால் தலைநகரை நோக்கியே அதிகமானவரது கவனம் திரும்பியுள்ளது. இவ்வாறான நிலையில் கிழக்கு மண்ணில் மேலும் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அந்தவகையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கால்தில் வடக்கு – கிழக்கு பிரிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அதனை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வடக்கிழக்கு இணைப்பதன் மூலமே சாத்தியமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கொள்கையில் உறுதியாக உள்ளது. தமது நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக சர்வதேசத்தின் உதவியுடன் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகித்தும் வருகின்றது.

இவ்வாறு பாரிய அரசியல் நெருக்கடி நிலையில் நாம் உள்ளோம். எனினும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இது தொடர்பில் தமது நிலைப்பாட்டினை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புழ்;ழா மாத்திரம் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.

ஆனால், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் அடையாளம் என கூறிக் கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமோ அல்லது தேசியத் தலைவர் என பேரடித்துக் கொள்ளும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ இந்த விடயம் தொடர்பில் தெளிவான பதில்களை வழங்காமை கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு பெரும் ஏமாற்றமாகும்.

சிலர் ஊடக பிரசாரத்துக்காக மாத்திரம் வடக்கு – கிழக்கு இணைய விடமாட்டோம் என அறிக்கை விடுகின்றனர். ஆனால், நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அதற்கு எதிர்ப்பினை இன்னும் தெரிவிக்கவில்லை.

கிழக்கு முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தாது அரசியல் ரீதியாகவே தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வழிகாட்டியவர் தலைவர் அஷ்ரப் அவர்கள். அதன் அடிப்படையிலேயே சமாதானத்துக்கான தேசிய இளைஞர் முன்னணியும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் எம்.பிக்கள் 21 பேரும் இணைந்து வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைப்பதற்கு எதிர்ப்பினை வெளியிட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு பாதிப்பான இந்த விடயத்தில் நாங்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து ஒற்றுமையுடன் எதிர்ப்பினை காட்டுவோமாயின் அதில் நிச்சயம் வெற்றிகிட்டும்.- என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *