வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனும் வடமாகாண சபையும் அரசாங்கதின் செயற்பாடுகளுக்கு இடையூறாக செயற்படுகின்றது. அரசாங்கதின் ஜனநாயக செயற்பாடுகளை தடுக்கின்றனர். இதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் ஊடகப்பேச்சாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் இலங்கை வருகை என்ன அடிப்படியில் அமைந்துள்ளது. இவர் வருவதன் பின்னணி என்ன என்பதை ஆராய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
வடமாகாண சபையும் வடக்கு முதலமைச்சரும் நல்லாட்சி அரசாங்கதின் பயணத்தை தவறாக விளங்கிக்கொண்டோ அல்லது இந்த ஆட்சியில் தமக்கு சாதகமான அரசியல் சூழலை உருவாக்கிக்கொள்ள செயற்பட்டு வருகின்றனர். இன்று வடக்கின் சூழல் முன்னைய காலங்களை விட வேறுபட்ட ஒன்றாகவும், ஜனநாயகம் பலமடையும் வகையிலும் அமைந்துள்ள நிலையில் அந்த சூழலை சரியான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று அரசாங்கம் வடக்கில் அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது.
வடக்கில் உள்ள இராணுவம் குறைக்கப்பட்டுள்ளது, இதுவரை காலமும் இல்லாத வகையில் வேலைவாய்ப்புகள் , சர்வதேச முதலீடுகள் வடக்கை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்றது. இந்த விடயங்களில் முன்னைய நிலைமைகளை போல அரசாங்கம் தடுக்கவோ அல்லது மட்டுப்படுதவோ இல்லை. எனினும் அமைந்துள்ள இந்த சூழலை வடக்கு முதல்வரும் வடமாகாண சபையும் தவறான வகையில் பயன்படுத்த முயட்சிக்கின்றது. அரசங்கம் வடக்கு மக்களுடன் நேரடியாக தொடர்புகொள்ள முயட்சித்தாளும் வடக்கு முதல்வரும், வடமாகாண சபையும் அதற்கு இடையூறாக உள்ளனர். இந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.