‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் தேவையானளவுக்கு சொத்துக்களும் செல்வங்களும் இருக்கின்றன. தாருல்ஸலாம் போன்று 10 கட்டடங்கள் நிர்மாணித்துக் கொள்ளுமளவுக்கு அவரிடம் செல்வம் இருக்கிறது’ என முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எம்.ஹரிஸ் பகிரங்க கூட்டமொன்றில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் ஏ.ஆர்.எம்.பாயிஸ் என்பவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிததத்தில் பிரதியமைச்சரின் மேற்படி கூற்றை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் சொத்து விபரங்கள் தொடர்பில் தெ ளிவுபடுத்தக் கோரி 12 கேள்விகள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இம்மாதம் 20 ஆம் திகதியிடப்பட்ட அக்கடித்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2005 முதல் 2015 வரையிலான காலப்பகுதியின் கணக்கறிக்கை தொடர்பாக வினவப்பட்டுள்ளது.
பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட கணக்கறிக்கை முஸ்லிம் காங்கிரஸினால் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா எனவும் வினவப்பட்டுள்ளது.
பிரதியமைச்சரின் குறிப்பிட்ட உரை கல்முனையில் இடம்பெற்றதாகவும் அவ்வுரையில் ” தேர்தல்களில் போட்டியிடும் போதும் கட்சியின் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் சந்தர்ப்பங்களிலும் செலவுகளுக்கு உண்டியல் மூலம் நிதி சேகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. இவ்வாறான பாரிய செலவுகளை கட்சியின் தலைவரே ஏற்றுக் கொண்டுள்ளார்” என பிரதியமைச்சர் குறிப்பிட்டிருந்ததாகவும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவரின் சொத்துக்கள் கடன்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புவதாகவும் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பங்களில் போட்டியிடுவதற்கு முன்பும் அதற்குப் பின்பும் தனது சொத்துக்களையும் கடன்களையும் ஆணைக்குழுவுக்கு வெளிப்படுத்தியுள்ளாரா எனவும் வினவப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ளது போன்று பெரும் சொத்துக்களையும் செல்வங்களையும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பிரகடனப்படுத்தியிராதுவிடின் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் அக் கடிதத்தில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ள படியான சொத்துக்களையும் செல்வங்களையும் வெளிப்படுத்தியிருக்காதுவிடின் இது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஏற்பாடு செய்யப்படுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன் விரைவான பதிலை எதிர்பார்ப்பதாகவும் அக் கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.