(சுஐப் எம்.காசிம்)
மன்னாருக்கு மணிமகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல் தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல் வளமும், நில வளமும், நீர்வளமும் கொண்டது இக்கிராமம்.
மன்னார் நகரிலிருந்து வட திசையில் செல்லும் பூநகரிப்பாதையில் 15 ஆவது மைலில் இந்தக்கிராமம் அமைந்துள்ளது. தேவையான அளவு வாழ்க்கை வளம் காணப்படுவதால் மக்கள் நலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர்.
சுமார் 1000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் இங்கு வாழ்ந்தன. இந்தக்கிராமம் பல கிராமங்களின் மத்தியிலே கேந்திர மையமாக அமைந்ததால் கற்கும் மாணவரும், வியாபாரிகளும் பயணம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டது.
பெரும்பான்மையினர் விவசாயிகள். கிராமத்தைச் சுற்றி வர வயல் நிலங்களும் தோட்டங்களும் அமைந்திருந்தன. இங்குள்ள முஸ்லிம்கள் இந்து, கிறிஸ்தவ மக்களுடன் ஒரு தாய் பிள்ளை போல ஒற்றுமையாய் வாழ்ந்தனர். இன நல்லிணக்கம் இங்கு சீரிய முறையில் அமைந்திருந்தது. கிராமத்தின் மேற்கு எல்லை கடலான படியால் மீன்பிடித்தொழில் சிறப்பாக இருந்தது.
இவ்வாறான ஆனந்தமயமான வாழ்விலே தான் பேரிடி விழுந்தது. 1990ஆம் ஆண்டில் புலிகளின் கோரச் செயல்களால் இங்குள்ள முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து புத்தளத்தின் பல்வேறு பிரதேசங்களில் குடியமர்ந்தனர். அகதிகளான இவர்கள் அனுபவித்த கஷ்டங்கள் ஏட்டிலடங்காதவை.
2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்ததும் வடபுல முஸ்லிம்கள் சொந்த இடங்களில் மீளக்குடியேறி வருகின்றனர். ஒப்பீட்டளவில் விடத்தல்தீவு மீள்குடியேற்றத்தில் அசமந்த நிலையே காணப்படுகின்றது. பொருள், பண்டம் இழந்த நிலையில் சொந்த மண் குடியேற்றத்தை பூச்சியத்திலிருந்து தொடங்க முடியாதென்பதும் மாணவர் கல்வியில் திடீர் மாற்றம் ஏற்படலாம் என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.
எனினும் சொந்த மண்ணுடன் தொடர்பில்லாவிடின் பூர்வீக நிலங்களை இழக்கவேண்டியேற்படும் என்பதை மனதில் கொண்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்த மக்களை எப்படியாவது குடியேற்ற வேண்டுமென துடியாய்த் துடிக்கிறார். ஏற்கனவே பரோபகாரிகளின் உதவியுடன் அமைச்சர் ரிஷாட் அவர்களால் 25 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பும் நீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தொண்டு நிறுவனமான “முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் மற்றும் தொண்டு நிறுவனம்” அமைச்சர் ரிஷாட்டின் வேண்டுகோளுக்கிணங்க, விடத்தல்தீவு கோதாவரிகட்டு என்ற பிரதேசத்தில் “மக்தூம் விலேஜ்” என்ற புதிய வீடமைப்புக் கிராமத்தை உருவாக்கியுள்ளது. சுமார் 50 அழகிய வீடுகளைக் கொண்டுள்ள வீடமைப்புத்திட்டத்தில் நீர், மின்சார வசதிகளும் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
“மக்தூம் விலேஜ்” இன் அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (21) இடம்பெற்றது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பத்தாஹ் காசிம் அல் முல்லா, மக்தூம் தொண்டு நிறுவனத்தின் பரோபகாரிகள் சாலேஹ் ஸாஹிர் சாலேஹ், அலி ஹசன் அலி முஹம்மத் அல் ஷனாஸி, முஹம்மத் அஹமத் முஹம்மத் அல் ஹமாதி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் அதிதிகளாகப் பங்கேற்று வீடுகளை பயனாளிகளுக்குக் கையளித்தனர். இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மாந்தை மேற்கு அரசாங்க அதிபர் ஸ்ரீஸ்கந்தராஜா (அண்டன்), மடு கல்வி வலயப்பணிப்பாளர், மாந்தை மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் வரப்பிரகாசம், தேசிய வடிவமைப்பு நிலையத்தலைவர் சட்டத்தரணி மில்ஹான், உப்புக்கூட்டுத்தாபனத்தலைவர் எம் எம் அமீன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
யுத்த காலத்தில் அழிந்து போன விடத்தல்தீவு அலிகார் மகா வித்தியாலயத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் முயற்சியிலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் அலிகார் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வகுப்புக்களை திறம்பட நடத்துவதற்காக அலிகார் மகா வித்தியாலயத்தின் வகுப்பறைகளை ஐக்கிய அரபு அமீரக அதிதிகள் திறந்து வைத்தனர், இந்தப் பாடசாலையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்திற்கும் தாங்கள் உதவுவதாக வாக்களித்தனர்.
விடத்தல் தீவு மக்களின் வளமான வாழ்வுக்காக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சன்னாரிலும் 50 வீடுகளை கட்டி வழங்கியுள்ளார்.
அந்த மக்களின் வாழ்வாதார உதவிகளுக்கும் அமைச்சர் ரிஷாட் இன்னோரன்ன உதவிகளையும் வழங்கி வருகிறார்.