(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்பட்ட காத்தான்குடி கடற்கரை மெரின் டிரைவ் வீதியை செப்பனிடும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 19-08-2016 நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரை கலிமா சதுக்கத்தில் இடம்பெற்றது.
இவ் வீதி செப்பனிடுவதற்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் சுமார் 2 கோடி 96 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற காத்தான்குடி கடற்கரை மெரின் டிரைவ் வீதியை செப்பனிடும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல கலந்து கொண்டதாடு கௌரவ அதிதியாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் மேற்படி மெரின் டிரைவ் வீதிக்கான செப்பனிடும் வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்,முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான றஊப் அப்துல் மஜீட்,சல்மா அமீர் ஹம்ஸா உட்பட உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தனது உரையில் குறித்த காத்தான்குடி கடற்கரை மெரின் டிரைவ் வீதியை முழுமையாக காபட் இடுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
குறித்த காத்தான்குடி கடற்கரை மெரின் டிரைவ் வீதியை கொங்றீட் இட்டு நிர்மாணிப்பதற்கு கடந்த 11-07-2016 திகதி கிழக்கு மாகாண சபையின் 86,002,40.00 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.