(எம்.ரீ. ஹைதர் அலி)
மட்டு மாவட்டத்தின் மண்முணைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட மண்முணை பிரதேசத்தில் முஸ்லிம்கள் மிக நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர். 1990ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரங்களின்போது இப்பிரதேசத்தில் வசித்து வந்த மக்கள் குடிபெயர்ந்து காத்தான்குடி, திஹாரி மற்றும் வேறு வெளி இடங்களிலும் குடிபெயர்ந்து வாழ்ந்து வந்திருந்தனர். அத்தோடு யுத்தகாலம் முடிவடைவதற்கு முன்பாக அங்கு மீண்டும் வந்து குறியேறியபோதும் அம்மக்களுக்குரிய அடிப்படைத்தேவைப்பாடுகளைக்கூட நிவர்த்தி செய்து கொடுக்காத நிலையில் பல சிரமங்களுக்கு மத்தியில் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்திய வீட்டுத்திட்டத்திற்குள் அவர்கள் உள்வாங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, குடிநீர் தேவைப்பாடு மலசலகூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும் காணி மற்றும் வீதி புனரமைப்பு போன்ற விடயங்கள் சரியான முறையில் கையாளப்படாமலும் மிகவும் கஸ்டத்திற்கும், இன்னல்களுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், எதிர்வரும் 2016.08.22ஆந்திகதி (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இவ்விடயங்களை தெரியப்படுத்துவதோடு, இவ்விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடி தங்களுக்குரிய அடிப்படைத்தேவைப்பாடுகளை பெற்றுத்தருவதற்குரிய முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.