இனவாதத்திற்கு எதிர்ப்பினை வெளிக்காட்டியும் நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடுகளை ஆத ரித்தும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தலைமையில் நேற்று கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் கூடிய எக்கம லே (ஒரே ரத்தம்) என்ற அமைப்புக்கும் சிங்க லே (சிங்கத்தின் ரத்தம்) என்ற அமைப்புக்குமிடையில் கடுமையான வாய்த்தர்க்கமும் மோதலும் மூண்டது.
எக்கம லே அமைப்பினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்த வாசகத்துக்கு சிங்க லே அமைப்பு உரிமை கொண்டாடியும் அதேவேளை கடுமையான எதிர்ப்பினை வெ ளியிட்டதாலும் அங்கு பெரும் கலவர நிலை உருவாகனது
சிங்கள அமைப்பினர் பொலிஸாருடன் கடுமையான வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்த பிரதேசத்தில் பதற்ற நிலை உருவாகியிருந்தது.
அரச ஆதரவு அமைப்பான எக்கம லே என்ற அமைப்பினர் அசாத் சாலி தலைமையில் நேற்று திங்கட்கிழமை கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் கூடினர்.
இதன்போது சிங்களவர், தமிழர், முஸ்லிம், கிறிஸ்தவர் ஆகிய சகலரதும் ரத்தங்கள் ஒன்றாகவே இருக்கும். அதனால் இன,ரத்த பேதங்கள் என்று எதுவும் இல்லை. அனைவரும் இலங்கையர் என்ற கோணத்திலே பார்க்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தும் விதத்திலான பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தது.
இந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்கு திடீரென பிரவேசித்த சிங்க லே அமைப்பினர் எந்த காராணத்திற்காக சிங்கள ரத்தம் (சிங்க லே) என்ற வாசகம் ஏன் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
இந்த வாசகம் எமது அமைப்பின் பெயரையும் குறிக்கின்றது. தற்போது இனக்குழுக்களுக்கிடையில் மோதல்கள் எதுவும் இல்லை . அவ்வாறாயின் ஏன் நீங்கள் மேற்கண்டவாறு சிங்க லே என்ற வாசகத்தை வேறுபடுத்தி உங்கள் பதாகைகளில் ஏந்திக்கொண்டுள்ளீர்கள் என கேள்விகளை தொடர்ச்சியாக அடுக்கிய வண்ணம் சிங்க லே அமைப்பினர் கடுமையான தொனியில் கோசங்களை எழுப்பினர். அத்துடன் கலவரத்தையும் ஏற்படுத்தினர்.
இதன்போது அசாத்சாலி தலைமையிலான எக்கம லே அமைப்பினர் சிங்கலே அமைப்பினரிடத்தில் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டபோதும் அதனை சிங்க லே அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. அதே சமயத்தில் எக்கம லே அமைப்பினை சேர்ந்த ஒருவர் கையில் இருந்த சிங்க லே என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகையையும் சிங்க லே அமைப்பினர் கிழித்தெறிந்தனர் .
இந்நிலையில் இரு அமைப்பினருக்கும் எதிரான போராட்டமும் வாய்த்தர்க்கமும் முறுகல் நிலையை எட்டவே அவ்விடத்திற்கு பொலிஸார் வந்து குவிந்தனர். இதன்போது பொலிஸாருக்கும் சிங்க லே அமைப்பினருக்கும் இடையிலான வாக்குவாதம் கடுமையாக முறுகல் நிலை ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நீடித்தது.
இந்நிலையில் கறுவாத்தோட்டம் பொலிஸாரின் நீண்ட நேர முயற்சியின் பின்னர் முறுகல் நிலைக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் அதன்பின்னரும் எக்கம லே அமைப்பினர் நல்லிணக்கம்,சகவாழ்வு ஆகிய விடயங்களை வலியுறுத்தி பாடல்களை பாடினர். மறுபுறத்தில் சிங்க லே அமைப்பினர் எக்கம லே அமைப்பினரின் பாடல்களுக்கு எதிராக ஊ சத்தம் இட்டவாறு திரிபு படுத்தப்பட்ட தேசிய கொடியினையும் அசைத்து கொண்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து ஒரு சில மணி நேரங்களுக்கு பின்னர் அவ்விடத்ததை விட்டு இரு தரப்பினரும் நீங்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.