மட்டு மாவட்டத்தின், காத்தான்குடி பிரதான வீதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற வீதி விபத்துக்களை தவிர்க்கும் முகமாக கடந்த 2016.04.19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்று பொறியயலாளர், காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொலிஸார், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர், நகர சபை செயலாளர் சர்வேஸ்வரன், காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.எஸ்.எம். ஜாபிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் காத்தான்குடியில் இருக்கின்ற பிரதான வீதி குறுக்குகளுக்கு வேகக்கட்டுப்பாட்டை ஏற்படுத்தல், வீதியின் இருமருங்கிலும் காணப்படும் காண்களுக்கு மூடி இடுதல், மஞ்சள் கடவையை அன்மிக்கும் முன்பாக மஞ்சள் கடவை குறியீட்டு பலகையை இடுதல் எதிர்காலத்தில் வீதி சமிக்சை விளக்குகள் நடுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளல் என பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடராக பிரதானமாக இனங்காணப்பட்ட நான்கு இடங்களான மீரா பாலிகா முன்பாகவுள்ள நான்கு மூலை சந்தியும், குட்வின் சந்தியிலுள்ள, மெத்தைப்பள்ளி சந்தி மற்றும் டெலிகொம் சந்தி ஆகிய சந்திகளிலும் வேகத்தைக்குறைக்கக்கூடிய வேகத்தடுப்புக்களையும் அமுல்ப்படுத்துவதோடு, ஊருக்குல் இருந்து பிரதான வீதிக்கு வருகின்ற வீதிகளில் நிறுத்தல் கோடுகளை அமைப்பது சம்மந்தமாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் 2016.08.10ஆந்திகதி பிரதான வீதிக்கு விஜயத்தினை மேற்கொண்டு எந்தெந்த இடங்களில் வேகத்தைக்குறைக்கக்கூடிய வேகத்தடுப்பு கடவை கோடுகள் அமைக்கப்பட வேண்டுமோ அவ்விடங்கள் இணங்காணப்பட்டதோடு, எதிர்வரும் 2016.08.12ஆந்திகதி (நாளை) இவ்வேலைகளை ஆரம்பிப்பதாக மாகாண பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாக வீதி விபத்துக்களை தடுக்கின்ற விடயத்தில் பொலிசாரையும் குறிப்பாக குட்வின் சந்தியில் கமிக்சை விளக்குகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு இது தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அப்பிரதேசத்தில் இருக்கின்ற கடை உரிமையாளர்கள் கொடுக்கின்ற ஆதரவை வைத்து இவ்விடயத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார். இவ்விடயம் பெரும் தெருக்கள் அமைச்சுக்கு எடுத்துச்செல்லப்பட்டு எதிர்காலத்தில் இத்திட்டத்தினை அமுல்ப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம் எனவும், வேகத்தின் அளவினை காட்டக்கூடிய பதாதைகளும் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.