வங்காளதேசத்தில் வயதுக்கு மீறிய வகையில் மூப்படைந்து தளர்ந்து, தொங்கும் தோலுடன் தாத்தாவைப் போல் காட்சியளிக்கும் 4 வயது சிறுவனின் முதுமை தோற்றத்தை மாற்ற டாக்காவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி இலவச பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை செய்ய முன்வந்துள்ளது.
‘புரோகேரியா’ எனப்படும் விரைவில் மூப்படையும் விசித்திர வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் தங்கள் மகனுக்கு உரிய உயர்சிகிச்சை அளிக்க நிலங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளை விற்று, மருத்துவ செலவு செய்தும் பலனில்லாததால் வேதனையில் தவிக்கும் லாப்லு லட்கர் – காத்தூன் தம்பதியரின் துயரநிலை ஊடகங்களின் வாயிலாக வெளியுலகுக்கு தெரியவந்தது.
நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்து கொள்வது மற்றும் மரபுசார்ந்த குறைபாடுகளால் உண்டாகும் இந்த அரியநோய்க்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகள் தொடர்பாக ஆய்வு செய்யவும், பைசித் ஷிக்தருக்கு தேவையான சிகிச்சைகளை இலவசமாக அளிக்கவும் டாக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை தற்போது முன்வந்துள்ளது.
தனக்கு பிடித்தமான மீன்சோறு சாப்பிட்டு, உறவினர்கள் வீட்டு பிள்ளைகளுடன் கண்ணாமூச்சு மற்றும் கால்பந்து ஆட்டத்தில் கவலை இல்லாமல் பொழுதை கழித்துவரும் பைசித் ஷிக்தருக்கு வெறும் அபரிமிதமான தோல் வளர்ச்சி மட்டுமின்றி, இதயம், கண், காது, பிறப்புறுப்பு போன்ற பகுதிகளிலும் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இதுதொடர்பாக முதல்கட்ட ஆய்வுகள் செய்யப்பட்டு வருவதாக இந்த தனியார் மருத்துவமனையின் தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவின் தலைமை டாக்டரான அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
உடல் முழுவதும் முடிச்சுகள் போன்ற மருக்களுடன் ‘மர மனிதன்’ என்றழைக்கப்பட்ட 26 வயது வாலிபருக்கு இதே மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் முன்னர் சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.