(சுஐப் எம். காசிம்)
பிற சமூகத்தவருடன் முஸ்லிம் சமூகம் இணைந்து வாழவும் பிணைந்து வாழவும் எப்போதும் முயற்சித்து வருகின்ற போதும் எம்மைத் தீண்டாதவர்களாகவும் வேண்டாதவர்களாகவும் வேற்றுக்கண்ணோடு பார்க்கும் நிலையே இன்னும் இருக்கின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கலாபூசணம் எம். இஸட் அஹ்மத்; முனவ்வர் எழுதிய இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நூல் வெளியீட்டு விழாவும் முஸ்லிம் சேவைக்குப் பணியாற்றிய உலமாக்கள் கௌரவிப்பு விழாவும் கொழும்பு பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் மனோ கணேசன், பைசர் முஸ்தபா, முஜிபுர் ரஹ்மான் எம்.பி, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, மலேசிய அறிஞர் அஷ்ஷேக் மௌலானா மொஹமட் அப்துல் காதிர், சிங்கப்பூர் பத்திரிகையாளர் செய்யத் ஜஹாங்கிர், முன்னாள் அமைச்சர் பாக்கிர் மாக்கார், தேர்தல் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் எம்.எம். மொஹமட், நவமணி பத்திரிகை ஆசிரியர் என்.எம். அமீன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். நூலின் முதற் பிரதியை தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீன் பெற்றுக்கொண்டார்.
முஸ்லிம் கலாச்சார திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.எச்.ஷமீல் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் றிஷாட் கூறியதாவது: செய்யாத குற்றத்துக்காக முஸ்லிம் சமூகத்தின் மீது வீன் பழி போடுவதும் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை எமது சமூகத்தின் மீது சுமத்துவதும் இப்போது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. நன்கு திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்தை கருவறுக்க வேண்டும் என்ற தீய நோக்கத்திலேயே ஊடகங்கள் வாயிலாக இவ்வாறான அபாண்டங்களை பரப்பி வருகின்றனர். எங்கள் உண்மைத் தன்மையை வெளிக்காட்டுவதற்கு எமக்கென்று சொந்த ஊடகம் இல்லை. எம்மிடையே தரமான, திறமையான எழுத்தாளர்கள் இருக்கின்ற போதும் அவர்கள் சமூகத்துக்காக எழுதும் எழுத்துக்கள் உரிய முறையில் வெளிவராது இருட்டடிப்பே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்த நல்லாட்சியிலும் இன்னும் தொடர் கதையாகவே இருப்பது வேதனையானது.
முஸ்லிம் சமுதாயம் எதிர் நேக்குமம் பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொணரவும் பொதுப் பிரச்சினைக்குக்காக தமது எழுத்துக்களை பயன்படுத்தப் பாடுபட்டு வரும் சமூகம் சார்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் இஸ்லாமிய ஒழுக்க நெறிகளை கற்பிக்கும் உலமாக்கள் ஆகியோர் இன்னும் வறுமையின் கோரப்பிடிக்குள்ளேயே சிக்கி வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நமது சமூகத்திலே எந்தவிதமான கட்டமைப்புக்களும் கிடையாது. முஸ்லிம் தனவந்தர்கள் இந்த விடயத்தில் அக்கறை கொள்ள வேண்டும். அவர்களுக்கு நிறைய பொறுப்புக்கள் இருக்கின்றன. இஸ்லாம் கற்றுத்தந்த வழிமுறைகளைப் பின்பற்றி ஏழைகளின் வாழ்விலே நாம் மலர்ச்சியை ஏற்படுத்தாவிட்டால் மறுமை நாளிலே பதில் சொல்ல வேண்டி நேரிடும். திறமையான ஆற்றல் மிக்க நமது இளைஞர்கள் கல்வியை இடை நடுவில் கைவிட்டு இன்று முச்சக்கரவண்டி ஓட்டுநர்களாகவும், கூலிக்கு வேலை செய்பவர்களாகவும் இருப்பதையே காண்கின்றோம். ஏழைத்தாய்மார்கள் தெரு ஓரங்களிலும் பள்ளிவாசல் முன்றல்களிலும் பச்சிளம் குழந்தைகளைக் காவிக்கொண்டு யாசகம் செய்கின்றனர்.
ஒரே விடயத்துக்காக பல நிறுவனங்கள் தொண்டாற்றுவதும் அவர்களுக்கிடையே முரண்படுவதும் சர்வசாதாரணமாகி விட்டது. சகல துறையினரும் ஒருமித்து திட்டமிட்டு செயற்படுவதே சமூகத்துக்கு ஆரோக்கியமானது.
சமுதாயத்தின் மீதான கொடுமைகளை அரசியல்வாதிகள் தட்டிக் கேட்டால், அதற்கெதிராக குரல் கொடுத்தால் அவர்களை வீழ்த்தும் நிலையும் தொழுகைக்காக பள்ளிகளைக் கட்டினால் அவற்றை இனவாத நோக்கோடு பார்த்து அதைத் தடுக்கும் நிலையும் இன்று மேலோங்கி வருகின்றது.
மர்ஹ_ம் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் மீது கரிசனை கொண்டு உழைத்தனால் அவர் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தார். குறுகிய கால அரசியல் வாழ்வில் அவர் சாதித்த விடயங்கள் ஏராளம். எனவேதான் அவரை வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டி நின்றார்கள்.
எழுத்துப்பணி என்பது ஒரு புனிதமான பணி. நூல் ஒன்றை ஆக்குவதென்பது எத்தனை கடினமானது என்பதை ஊடகவியலாளர் முனவ்வர் இங்கு தொட்டுக்காட்டியுள்ளார். அஹ்மத்; முனவ்வர் பல்வேறு விமர்சனங்களின் மத்தியிலும் சமுதாயப் பணியைத் தொடர்ந்தவர். அவர் அரச ஊடகம் ஒன்றில் பணியாற்றியதனால் சில வரைமுறைக்குள் செயற்பட்டார். அவர் மீது சிலர் பல்வேறு விமர்சனங்களை மேற்கொண்ட போதும் அவரது பணியை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. முனவ்வரின் மீது அன்பும் பற்றும் கொண்டதனால்தான் மலேசியா, சிங்கப்பூர், ஹொங்கொங் போன்ற நாடுகளில் இருந்தும் மற்றும் இங்கிருந்தும் பலர் வந்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.