அவுஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கரீத் க்ளீயர் என்ற நபர், மேலாண்மை ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பின்பக்க பாக்கெட்டில் ஐபோன் 6 செல்போனை வைத்து, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கும் போது, தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்பக்க பாக்கெட்டில் இருந்த ஐபோன், திடீரென தீப்பிடித்துள்ளது. இதை உணர்ந்த கரீத், உடனடியாக அதனை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் ஐபோன் வெடித்துள்ளது. இதில் அவருடைய பின்பக்கத்தில் தோலின் இரண்டு பகுதியில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சிட்னியில் உள்ள ராயல் நார்த் ஷோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்போனின் மெட்டல் பகுதி முழுவதும் சேதமடைந்து விட்டது. மேலும் அதிலிருந்த லித்தியம் கீழ்ப்பகுதி வழியாக வெளியேறிவிட்டது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.