( ஜகார்த்தாவிலிருந்து ஆர்.ராம் )
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைப்பதற்கு அதிகளவிலான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்த, அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் உயர் மட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் அங்மாக பிராந்திய கூட்டுறவில் தனியார் துறையின் வகிபாகம் எனும் தலைப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதிநிதி ஒருவரால் எழுப்பப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அதன் அடிப்படையில் இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்கு பாலத்தை அமைப்பதன் மேலும் வர்த்தகத்துறையை மேலும் மேம்படுத்த முடியும். அதனடிப்படையில் இரு நாடுகளுக்கிடையிலும் பாலத்தை அமைப்பதற்கான சாத்தியப்பாடு அதிகமுள்ளது. பாலத்தை அமைப்பதற்கான உயர்மட்டக்கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை இந்த நூற்றாண்டில் அரசாங்கங்கள் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன. இந்த நிலைமகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டியது அவசியமாகின்றது.
குறிப்பாக தனியார் துறை முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போது அரசியல் சார்ந்ததாக பார்க்கப்படுகின்றது. தொழிலாளர் சங்கங்கள் போர்க்கொடி தூக்குகின்றன. பொதுமக்கள் பொருட்களின்,சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணத்தால் எதிரான குரல்கொடுக்க ஆரம்பிக்கின்றனர்.
அத்தகைய சூழல்கள் ஏற்படுகின்றபோது முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்படுத்தப்படுகின்றது. இவ்வாறான நிலைமைகளிலிருந்து விடுபடுவதற்காக காணி உரிமை, வர்த்தக பரிமாற்றம் தொடர்பாக எமது நாட்டில் காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டடாளர்கள் அச்சமின்றி முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.
பிராந்திய கூட்டுறவு ஒத்துழைப்பு, பன்முக கூட்டுறவு ஒத்துழைப்புக்களை விரிவு படுத்துவதன் ஊடாக தனியார் துறையை செயற்றிறன் மிக்கதாக மாற்றியமைக்க முடியும். தற்போதைய நிலையில் பிராந்திய மற்றும் பன்முக ரீதியாக பல்வேறு ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன. அவை வெறுமனே எழுத்தளவிலேயே உள்ளன. முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. காரணம் அவ்வாறான ஒப்பந்தங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படும் பட்சத்தில் வெற்றிகள், தோல்விகளை பெறுபவர்கள் யார் என்ற ஐயப்பாடான நிலைமைகள் காணப்படுவதேயாகும். இவ்வாறான நிலைமைகள் மாற்றியமைக்கப்படவேண்டும். வெற்றிகள் தோல்விகள் என்பவற்றுக்கு அப்பால் பிராந்திய மற்றும் பன்முக கூட்டுறவு ஒத்துழைப்புக்கள் அவசியமாகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் அண்மையில் உள்ள இந்தியாவுடன் வர்த்த உறவுகளை மேம்படுத்துவதற்கு அதிகளவில் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேநேரம் சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகளுடன் திறந்த வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தோனேசியாவுடன் முறையான ஒப்பந்தகள் காணப்படாதவிடத்திலும் இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் வர்த்தகத் தொடர்புகள் வலுவாக உள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரையில் தனியார் துறையின் ஊடாக 90சதவீதமான தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ன. தற்போது ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் உலமயமாதல் சூழல்களுக்கு அமைவாக தனியார் துறையை கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. இப்பணியில் தனியே அரசாங்கம் முழுமையாக ஈடுபடவேண்டும் என்பதற்கு அப்பால் வர்த்தக சம்மேளனங்கள், வர்த்தக சம்ளேனங்கள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டியுள்ளது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8சதவீதமான தற்போதுள்ளது. இதனை நிலையாக வைத்துக்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீடுகளை 28 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரிக்கரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதேநேரம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்துறை மொமத்த உள்நாட்டு உற்பத்தியில் 80சதவீதம் பங்களிப்புச் செய்கின்றது. ஆகவே அத்துறையையும் வினைத்திறன் மிக்க வகையில் மேலும் மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் 10சதவீதமான முஸ்லிம்கள் காணப்படுகின்ற போதும் அவர்களின் வர்த்தகத்துறையை மேம்படுத்துவதற்காக இஸ்லாமிய வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏனைய வங்கிகளில்இஸ்லாமிய வங்கி நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் தொழிலாளர் சந்தைப்படுத்தில் அதிகளவு கவனத்தைக் கொண்டுள்ளதோடு சட்ட ஏற்பாடுகள் தொடர்பான நடைமுறைகளை ஏற்படுத்துவற்கும் நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்றார்.