“சார்க்’ அமைப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இஸ்லாமாபாதுக்கு வந்தால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவரும்,ஜமாத்-உத்-தாவா (JUD) அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் சயீது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் நேற்று திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு ராஜ்நாத் சிங்தான் பொறுப்பு. அவருக்கு வரவேற்பு அளித்தால், அது, ஏற்கெனவே காயமடைந்துள்ள காஷ்மீர் மக்களை அவமதிக்கும் வகையில் இருக்காதா? என பாகிஸ்தான் அரசைக் கேட்கிறேன்.
ஒருபுறம், காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்கள் மீதான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த பாகிஸ்தான் தேசமே போராட்டம் நடத்துகிறது. மற்றொரு புறம், ராஜ்நாத் சிங்குக்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வரவேற்பு அளிக்க இருக்கிறார்கள். இது என்ன முரண்பாடு?
ராஜ்நாத் சிங், வரும் 3-ஆம் தேதி இஸ்லாமாபாதுக்கு வந்தால், அதைக் கண்டிக்கும் விதமாக, ஜமாத்-உத்-தாவா சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும்.
காஷ்மீர் மக்களைக் கொன்றவர்களை வரவேற்கும் கட்டாயத்தில் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களின் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் மக்கள் உள்ளனர். இதை உலகுக்கு உணர்த்தவே நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
இந்தியாவுடனான தூதரக உறவையும் பாகிஸ்தான் அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஹஃபீஸ் சயீது குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்டபடி பயணம்
“சார்க்’ நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ராஜ்நாத் சிங், திட்டமிட்டபடி பாகிஸ்தான் செல்வார் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாடு, பல தலைவர்கள் சந்திக்கும் கூட்டமாகும். அதில், பங்கேற்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. அந்த மாநாட்டின்போது, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரை ராஜ்நாத் சிங் தனியாக சந்தித்துப் பேசப்போவதில்லை என்றார்.