(அஸ்லம் எஸ்.மௌலானா)
வடக்கு- கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழருக்கு சமஷ்டித் தீர்வு வழங்கப்படுமானால் அப்பகுதி முஸ்லிம்கள் தமது சொந்த வீட்டில் அகதிகளாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் முன்னாள் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.
வடக்கு- கிழக்கு தமிழர்கள் போன்று முஸ்லிம்களும் தம்மை ஒரு தேசியமாக பிரகடனம் செய்யாதவரை தமிழ் சமூகத்திற்கு சமாந்தரமான தீர்வை அடைந்து கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அறிஞர் சித்திலெப்பை ஆய்வமயத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் நடைபெற்ற அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் இவற்றைக் குறிப்பிட்டார்.
ஆய்வமையத்தின் தலைவர் சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லீம் தேசியம், சுய நிர்ணயம், வடக்கு- கிழக்கு இணைப்பு, தென்கிழக்கு அலகு, இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் பகிபாகம் போன்ற அம்சங்களை விளக்கி சேகு இஸ்ஸதீன் ஆற்றிய நீண்ட உரையில் மேலும் கூறியதாவது;
“அரசியல் யாப்பு மாற்றம் என்பது தமிழருக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் முஸ்லீம் சமூகத்தின் பகிபாகம் கேள்விக்குறியாகவே உள்ளது.
வடக்கு மாகாண சபை, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன தமிழருக்கு எவ்வாறான தீர்வு தரப்பட வேண்டும் என தெட்டத்தெளிவாக சொல்லி விட்டன. முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்மொழிந்துள்ள தீர்வுத் திட்ட வரைவு தமிழருக்கான தீர்வுகளை உறுதியாக பறைசாற்றியுள்ளது.
அவர்கள் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் செயற்படுகின்றனர். வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதில் தமிழ் பேசும் இனக்குழுமம் என்று முஸ்லிம்கள் கணிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் எந்தவொரு முஸ்லீம் கட்சியும் இதுவரை முஸ்லிம்களுக்கான தீர்வு இவ்வாறுதான் அமைய வேண்டும் என்று கோரி ஒரு காகிதத் துண்டையேனும் எங்கும் சமர்ப்பிக்கவில்லை. தமிழ் சமூகத்தின் சுய நிர்ணயத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அதன் தலைமைகள் மிகவும் விடாப்பிடியுடன் நின்று உத்வேகத்துடன் காய்களை நகர்த்தி வருகின்றன. ஆனால் முஸ்லீம் தலைமைகள் என்று சொல்வோர் இன்னும் ஒரு துரும்பைக் கூட நகர்த்தவில்லை.
தமது சுயநிர்ணயத்திற்காக தமிழர்கள் முழுமூச்சாக நிற்கிறார்கள். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழசுக் கட்சி மாநாட்டிலேயே அவர்கள் தமது தேசியத்தை பிரகடனம் செய்து விட்டார்கள். தேசியம் என்பதற்குப் பின்னால் தேசம் இருக்கிறது. சர்வதேச சட்டங்கள் கூட அதனை அங்கீகரித்துள்ளது. கட்சியின் பெயரிலேயே தமிழ் அரசு என்று பறைசாற்றி விட்டார்கள். அனைத்து தமிழ் கட்சிகளும் தமது கட்சியின் பெயரில் தமிழீழம் என்று சூடிக் கொண்டிருக்கின்றன.
நமது சகோதர சமூகம் ஒன்று இவ்வளவு செய்தும் கூட முஸ்லிம்கள் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றோம். நாம் பேசுவதற்க்கே தயார் இல்லை என்கின்றபோது எவ்வாறு போராட்டத்தில் குதிக்கப் போகின்றோம். முஸ்லிம்கள் முதலில் தாமும் ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் தேசியத்தையும் சுய நிர்ணயத்தையும் வலியுறுத்த வேண்டும் விக்கினேஸ்வரன் சொல்வது போன்று நாம் ஒரு இனக்குழுமம் இல்லை. நாம் தமிழருக்கு நிகரான ஒரு தேசிய இனம். எமக்கும் சமத்துவமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என நாம் உரத்துச் சொல்ல வேண்டும்.
வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு உடுத்த உடையுடன் புலிகளினால் துரத்தியடிக்கப்பட்ட 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி அன்றே முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை நிரூபித்து விட்டார்கள். கிழக்கில் முஸ்லிம்களை கடத்திக் கொலை செய்தார்கள். பள்ளிவாசல்களுக்குள் புகுந்து சுட்டுக் கொன்று குவித்தார்கள். கிழக்கில் சுமார் 1500 முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக் குழுக்களினால் கொலை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 60 ஆயிரம் முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
அன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஆயுத குழுவினரால் முஸ்லிம்கள் நசுக்கி அடிமைப்படுத்தப்பட்டிருந்தனர். வடக்கு- கிழக்கு மீண்டும் இணைக்கப்பட்டு அவர்களுக்கு சமஷ்டி கொடுக்கப்பட்டால் முஸ்லிம்கள் தமது சொந்த வீடுகளில் அகதிகளாக்கப்பட்டு, அவர்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படும் என எச்சரிக்கின்றேன்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன்வின் ஆட்சிக்கு காலத்தில் தமிழருக்கு தீர்வு வழங்கும் பொருட்டு மாகாண மட்டத்தில் அதிகார பகிர்வை வழங்குவதற்காக வடக்கு- கிழக்கு இணைக்கப்படுகின்ற சூழல் ஏற்பட்டபோது கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசங்களையும் வடக்கிலுள்ள முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசங்களையும் ஒன்றிணைத்து நிலத்தொடர்பற்ற ஆட்சி அதிகாரம் கொண்ட தென்கிழக்கு அலகுக் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஊடாக முன்வைத்திருந்தோம்.
அன்று வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் போட்டியிட்டது. நீங்கள் அத்தேர்தலில் போட்டியிட்டிருக்கா விட்டால் தாற்காலிகமாகக் கூட வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டிருக்க மாட்டாது என அண்மையில் என்னை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் சொன்னார். முஸ்லிம்கள் தமிழரின் அபிலாஷைகளுக்கு குறுக்கே ஒருபோதும் நின்றதில்லை.
ஆனால் முஸ்லிம்களை ஒரு தனித்துவமான இனமாக அங்கீகரித்து தமக்கு கிடைக்கின்ற சமத்துவமான தீர்வை முஸ்லிம்களும் பெறுவதற்கு தமிழர் தரப்பு இன்னும் இணங்கி வருவதாக தெரியவில்லை. ஆகையினால் முதலில் நாம் முஸ்லீம் தேசியத்தை முன்னிறுத்த புறப்பட வேண்டும். முஸ்லீம் சுயநிர்ணயத்திற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு தயாராக வேண்டும்” என்றார்.
அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் காத்தான்குடியை சேர்ந்த டொக்டர் அமீர் அலியும் இந்நிகழ்வில் உரையாற்றியதுடன் கேள்வி பதில்களும் இடம்பெற்றன.