இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமானது , புதிய இணையத்தள விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கான விசாக்களுக்கு வாடிக்கையாளர்கள் மிகவும் இலகுவாக விண்ணப்பிக்க முடியும் என அறிவித்தள்ளது.
‘அக்சஸ் யு.கே.’ என்றழைக்கப்படும் இந்த இணையத்தள விண்ணப்பப் படிவம் ஒழுங்குபடுத்தப்பட்ட தர்க்க ரீதியான கேள்விகளுடனான குறுகிய படிவம், எடுத்துச் செல்லக்கூடிய நட்புறவான முறைமை, அனுமதியின்றி பயணத்தை மேற்கொள்ளக் கூடிய ஐரோப்பிய ஷெங்கன் பிராந்திய நாடுகளுக்கான விசா படிவங்களின் பதிவிறக்கம் ஆகிய வசதிகள் உள்ளடங்கலாக ஒரு தொகை அனுகூலங்களை வழங்குவதாக உள்ளது.
பிரித்தானிய விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு விரைவானதும் இலகுவானதுமான விசா சேவையை வழங்க பிரித்தானியா அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரித்தானிய விசாக்கள் மற்றும் குடிவரவுக்கான தென் மற்றும் தென் கிழக்கு ஆசியப் பணிப்பாளர் நிக் குரோச் தெரிவித்தார்.
மேற்படி ‘அக்சஸ் யு.கே.’ விசா விண்ணப்பப் படிவம் 2014 ஆம் ஆண்டில் சீனாவில் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டபோது , அதற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்புக் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ள கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம், மேற்படி விசா விண்ணப்ப முறைமையானது இலங்கையிலிருந்து வாடிக்கையாளர்கள் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்வதை ஊக்குவிக்கும் என நம்புவதாக தெரிவித்தள்ளது.
வர்த்தக உறவுகள் மற்றும் கலாசார பரிமாற்றம் என்பவற்றினூடாக பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பலமான உறவு நிலவுவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்தார்.
மேற்படி விசா விண்ணப்ப முறைமையினூடாக வர்த்தக மற்றும் சுற்றுலா விசாக்களுக்கு இலகுவாக வண்ணப்பிக்க முடியும் என அவர் கூறினார்.
மேற்படி ‘அக்சஸ் யு.கே.’ விசா விண்ணப்பப்படிவத்தை http://www.gov.uk/apply-uk-visa என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அதேசமயம் ஏனைய வழிமுறைகளில் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்காக Visa4UK இணையத்தள முகவரி தொடர்ந்து பயன்பாட்டிலிருக்கும் என அந்தத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.