Breaking
Sun. Nov 24th, 2024

(சுஐப் எம்.காசிம்)    

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாத வடமாகாண சபைக்கு, அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட விசேட செயலணியை நிராகரிக்கும் எந்த யோக்கியதையும் கிடையாது என்று யாழ் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவரும், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான பி.ஏ.சுபியான் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை பதவியேற்ற பின்னர், வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு எத்தனையோ தடவைகள் நாம் அவரிடம் கோரியபோதும் எந்த முயற்சியும் எடுக்காத விக்னேஸ்வரன், இந்த செயலணியின் செயற்பாடுகளை முடக்குவதற்கு முயற்சிப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்தின்  மதவழிபாட்டுத் தலங்களுக்கு சம்பிரதாயபூர்வமாக விஜயம் செய்தபோது யாழ் சோனகர்தெரு பள்ளிவாயலுக்கும் வந்து அங்கு குழுமியிருந்த முஸ்லிம்களை சந்தித்தார். அவருடன் தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர் மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஐயா ஆகியோரும் உடனிருந்தனர். முஸ்லிம்களின் வெளியேற்றம் “துன்பியல் சம்பவம்” என வழமையான பாணியில் அச்சமயம் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தலைவர்களிடம், எங்களை மீளக்குடியேற்ற உதவ வேண்டுமென நாம் கோரியபோது அவர்களும் முகமலர்ச்சியுடன் தலையாட்டி விட்டுச்சென்றனர்.

எனினும், ஒன்றுமே நடக்கவில்லை. பின்னர் எங்கள் அமைப்பும் மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் இன்னோரன்ன அமைப்பும் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் எத்தனையோ கடிதங்களை எழுதி மீள்குடியேற்றத்துக்கு உதவுமாறு கெஞ்சினோம். அவர் எதற்குமே செவி சாய்க்கவில்லை.

கடந்த வருடம் 2015 ஏப்ரல் முதாலம் திகதி சரியாக ஒன்பது மணிக்கு மக்கள் பணிமனை உறுப்பினர்களுடன், முதலமைச்சர் காரியாலயத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து எங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறி மீள்குடியேற்ற உதவுமாறு கெஞ்சிப்பார்த்தோம். மாகாண சபையின் அதிகாரத்துக்குட்பட்ட வகையிலாவது, மாகாண சபையின் நான்கு அமைச்சுக்களின் உதவியுடன் எங்களுக்கு ஓரளவேனும், நாங்கள் வாழ்வதற்கு ஏற்றவகையில் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு தெரிவித்தோம். அப்போது முதலமைச்சர் “இது நல்ல விடயம். வருடப்பிறப்பு வருகின்றது. ஏப்பிரல் கடைசியில் வேலையைத் தொடங்குவோமே” என்றார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. பின்னரும் எத்தனையோ கடிதங்கள் அனுப்பியும் பதில் இல்லாத நிலையில் நாம் விரக்தியுடன் காலத்தைக் கடத்தினோம்.

பின்னர் ஐக்கிய நாடுகளின் அமெரிக்க இராஜாங்க செயலாளர் சமந்தா பவர்  யாழ் உஸ்மானியாக் கல்லூரிக்கு விஜயம் செய்தபோது, விக்கி ஐயாவும் அங்கு வருகை தந்திருந்தார். எங்கள் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துங்கள் என்று மீண்டும் நாம் கோரியபோது தலையாட்டியாகவே சென்றார்.

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக இனப்படுகொலைத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய விக்னேஸ்வரன் ஐயாவிடம், வெறுங்கையுடனும், உடுத்த உடையுடனும் 1990 ஆம் ஆண்டு நாங்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் மாகாண சபையில் இனச்சுத்திகரிப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டுவாருங்கள் என்று நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். அப்போதுதான் மாகாண ஆட்சி நீதியானதென்று வெளிஉலகுக்கு தெரியப்படுத்த முடியுமென எமது கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்கான பதிலும் இல்லை.

அமைச்சர் றிசாத் பதியுதீனும் எங்களைப் போன்ற ஓர் அகதி. முஸ்லிம் அகதிகளை மீள்குடியேற்ற வேண்டுமென முனைப்புடன் செயற்படுபவர். அதற்காக அவர் படுகின்ற கஷ்டங்களை நாம் அறிவோம். வடமாகாணத்தில் வாழ்ந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்ற வேண்டுமென்ற அவாவில் அவர்,  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாகவும்,  அவரது பகீரத முயற்சியினாலும்  உருவாக்கப்பட்டதே இந்தச் செயலணி.

ஆனால் இந்தச் செயலணியை முடக்குவதற்காக விக்னேஸ்வரன் கூறும் காரணங்கள்  வேடிக்கையானது. வடக்கிலும், கிழக்கிலும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனின் கருத்திட்டத்தில் உருவான 65௦௦௦ வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு எத்தகைய தடைகளும் போடாத வடக்குமாகாண சபை, அமைச்சர் றிசாத் பதியுதீனின் இந்த முயற்சிக்கு மாத்திரம் தடைபோடுவது எந்த வகையில் நியாயம்? 65௦௦௦ வீட்டுத்திட்டத்தில் வடக்குக்கு 40௦௦௦, கிழக்குக்கு 25௦௦௦ என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வடக்கிலே வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு இந்த வீட்டுத்திட்டத்திலும், இந்திய வீட்டுத்திட்டத்தைப் போன்று அநீதி இழைக்கப்படுவதற்கான சான்றுகளே அதிகம் உண்டு என்பதை இந்த இடத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

                                   .

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *