கடந்த ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களால் பயன்படுத்தப்பட்ட மிகவும் ஆடம்பர கார்கள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி இருந்தன.
பல கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர கார்களை மஹிந்த குடும்பத்தினர் தம்வசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனினும் அந்த கார்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில், பிலியந்தலை மக்குலுதுவ மாவத்தை என்ற பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த நிஸான் GTR 3800 மோட்டர் வாகனம் மீட்கப்பட்டிருந்தன.
கடந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது இராணுவத்திற்கு வாகனம் வழங்கும் நபர் ஒருவரினால் கொண்டு வந்து மறைக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
இந்த மோட்டார் வாகனம் பதிவு செய்யப்படவில்லை எனவும் போலி வாகன இலக்கத் தகடுகளை பயன்படுத்தி மோட்டார் வாகன போட்டிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு நிறங்களை மாற்றியதாக விசாரணைகளில் தகவல் வெளியாகியது.
இந்த மோட்டார் வாகனம் தொடர்பில், வாகனத்தை மறைத்து வைத்த வீட்டின் உரிமையாளர் துப்பு வழங்கியதாக அப்போதைய பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் இடம்பெற்ற சட்ட ரீதியான நடவடிக்கை தொடர்பில் தற்போது வரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கு முன்னர் வெளியிட்ட கருத்தே தற்போது இந்த விடயம் மீண்டும் வெளியில் வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
“எங்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பல்வேறு தரப்பில் இருந்து சுமத்தப்பட்டிருந்தது. எங்களின் ரேசிங் கார்கள் குறித்து பேசினார்கள். எங்கள் ஹோட்டல் குறித்து பேசினார்கள், வெளிநாட்டு பணம் குறித்து பேசினார்கள். எனினும் இதுவரை ஒன்றுக்கும் உண்மைகளை நிரூபிக்கவில்லை. போலி குற்றச்சாட்டில் என்னை சிறைக்கு அனுப்ப முயற்சிப்பதாக” நாமல் குறிப்பிட்டிருந்தார்.
பிலியந்தலையில் கைப்பற்றப்பட்ட மோட்டர் வாகனம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவினால் மோட்டார் பந்தயங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதை நிரூபிக்கும் வகையிலான புகைப்படங்கள் அப்போதைய காலப்பகுதியில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
யோஷித ராஜபக்ச குறித்த மோட்டார் வாகனத்தில் மோட்டார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கு ஆயத்தமாகுவதாக அவரது முகப்புத்தகத்தில் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.