தகவல் அறியும் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கொன்று இன்று (27) காலை 09 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது,
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர்களுக்கான இந்த கருத்தரங்கில், பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான மற்றும் அமைச்சின் செயலாளர் நிமல் போபகே ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.
இலங்கை வாழ் மக்களின் தகவல் அறியும் உரிமையை பலப்படுத்தும் நோக்கில் தற்போதய அரசாங்கத்தின் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட தகவல் அறியும் சட்டம் தொடர்பில் மக்களை அறிவுறுத்துவதென்பது தேசிய தேவையொன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன் ஆரம்ப கட்டமாக ஊடகவியலாளர்களை இது தொடர்பில் அறிவுறுத்துவதே பொருத்தமாகும் என்பதே அரசின் நம்பிக்கை.
அதனடிப்படையில் மேற்கூறப்பட்ட சட்டம் தொடர்பில் விசேட ஊடக கருத்தரங்கொன்றினை நடாத்துவதற்கு இலங்கை பத்திரிகையாளர் சங்கம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் என்பன இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.