வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றச் செயலணி குறித்து குறைகூறும் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தாயாராகவே உள்ளேன் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசாங்கம் வலி.வடக்கில் காணிகளை விடுவித்துள்ளது. அதேபோன்று வடக்கின் ஏனைய பகுதிகளிலும் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இவ்வாறான சூழலில் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அவர்களது நிலங்களில் மீள்குடியேற்றி வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் வடக்கிற்காக மீள்குடியேற்றச் செயலணியை ஸ்தாபித்துள்ளது.
தற்போது அந்த செயலணி குறித்து குறைகூறுகின்றார்கள். இச்செயலணியில் குறைபாடுகள் காணப்படுகின்றன என குறைகூறுபவர்கள் கருதுவார்களாயின் அவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு தயாராகவே உள்ளேன்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலோ அல்லது தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரையிலோ தமிழ் மக்களுக்கு அநீதி இழைப்பது எமது நோக்கமல்ல. அவர்களின் எதிர்காலத்திற்காக அரசாங்கம் என்ற வகையில் நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு அம்மக்களின் பிரதிநிதிகள் ஒத்துழைப்புக்களை நல்கவேண்டும் என்றார்.
முன்னதாக வடமாகாண மக்களின் மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கத்தினர் அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், ரிஷாட் பதியுதீன், பைஸர் முஸ்தபா ஆகியோர் அடங்கிய விசேட செயலணி உருவாக்கப்பட்டது.
இச்செயலணியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டிருக்காத நிலையில் வடமாகாணசபையிலும், பாராளுமன்றத்திலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதோடு இச்செயலணியை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.