Breaking
Mon. Nov 25th, 2024

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்த குடோனில் ரெய்டு நடத்த சென்றபோது உயரமான மதில் சுவரின் மீது ஏறமுடியாத தொந்தி போலீஸ்காரரை ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிவிட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் நகரில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் துறை சூப்பிரண்ட் அலுவகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு அதிரடி நடத்த உத்தரவிடப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது அந்த குடோனின் நுழைவு வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. குடோனை சுற்றிலும் மிகஉயர்ந்த மதில் சுவர்கள் எழுப்பப்பட்டிருந்ததால் சுவரை தாண்டி உள்ளே குதித்து குற்றவாளிகளை பிடிக்கலாம் என சாதாரண உடையில் சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் ராதிகா பகத் தீர்மானித்தார்.

உடனடியாக சுவரின்மீது ஏறி உள்ளே குதிக்குமாறு உடன்வந்த போலீசாருக்கு உத்தரவிட்ட ராதிகா, தானும் மதில்மீது ஏறினார். அப்போது, சுவரை பிடித்தபடி ஏறமுடியாமல் ஒரு போலீஸ்காரர் ‘வடிவேலு பாணியில் வௌவால் போல்’ தொங்கிக் கொண்டிருந்தார்.

அவர் எப்படியாவது மேலே ஏறி வந்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் மதில் சுவரின் உச்சியில் காத்திருந்த ராதிக்கா பகத், ‘இனி வேலைக்கு ஆகாது’ என்று முடிவெடுத்து, அந்த தொந்தி காவலரின் அருகில் வந்தார். மதிலின் உச்சியில் நின்றபடி அந்த காவலரின் கையை பிடித்து மேலே தூக்கி விட்டார்.

பின்னர், குடோனுக்குள் நுழைந்து ரெய்டு நடத்திய போலீஸ் படையினர் அங்கு பதுக்கி வைத்திருந்த 70 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தனர். துணிச்சலாக மதிலின் மீது தாவி ஏறியதுடன் ஏற முடியாமல் தவித்த காவலரை ராதிகா பகத் தூக்கிவிடும் காட்சிகள் மத்தியப் பிரதேசம் மாநில ஊடகங்களில் புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *