Breaking
Sun. Nov 24th, 2024

கல்முனை மாநகர சபை கலைக்கப்பட்டு, உள்ளூராட்சித் தேர்தல் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது குறித்து மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய தருணம் வந்துள்ளது என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அந்த மன்றத்தின் தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார், பொதுச் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தனியான உள்ளூராட்சி மன்றத்தைக் கொண்டிருந்த சாய்ந்தமருது எனும் பழம்பெரும் பிரதேசமானது, 1985 ஆம் ஆண்டு கல்முனையுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்பிரதேச மக்கள் தாம் இழந்த உரிமையை மீளப்பெற்றுக் கொள்வதில் அங்கலாய்ப்புடன் இருந்து வருகின்றனர்.

இந்த நீண்டகால அபிலாஷையை வென்றெடுப்பதற்காக எமது மறுமலர்ச்சி மன்றம் கடந்த இரண்டு தசாப்த காலமாக பல்வேறு வடிவங்களில் போராட்ட்ங்களை முன்னெடுத்ததன் பயனாக சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபை, இக்கோரிக்கையை ஊரின் அவசியத் தேவைதான் என 2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஏற்றுக் கொண்டு, எம்மிடம் ஒரு சம்மதக் கடிதத்தை தந்த போதிலும் அதனை வென்றெடுப்பதற்கான முயற்சிகளில் கடந்த வருடம் (2015) ஜனவரி மாதம் தொடக்கம் ஈடுபட்டு வந்தது.

அதேவேளை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, 2010 ஆம் ஆண்டு எமது கோரிக்கையை ஏற்று, அதனை நிறைவேற்றித் தருவதாக எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரகடன மாநாட்டில் கலந்து கொண்டு பகிரங்கமாக வாக்குறுதியளித்திருந்தார். அதன் பின்னர் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சராக அவர் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுவதாகவும் பல தடவைகள் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை காய்ச்சல் கோஷம் எனக் கூறி எதிர்த்து வந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, 2014 ஆம் ஆண்டு முற்பகுதியில் அக்கோரிக்கையை நியாயமானது என ஏற்றுக்கொண்டு அப்போதைய 100 நாள் வேலைத்திட்ட அரசாங்க காலத்தில், நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்ததுடன் அப்போது உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சராக பதவி வகித்த கரு ஜெயசூரியவை

பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சகிதம் சந்தித்து அவரது இணக்கத்தையும் உத்தரவாதத்தையும் பெற்றுத் தந்திருந்தது.

இதற்கு கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரம் அவசியம் என கோரப்பட்டபோது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண சபையில் தனி நபர் பிரேரணை ஒன்றை கொண்டு சென்று, நிறைவேற்றியதன் பேரில் சபைத் தவிசாளரினால் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சுக்கு சிபார்சு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அந்த அரசாங்கம் 180 நாட்கள் நீடித்தும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம்

பிரகடனம் செய்யப்படவில்லை.

அதன் பின்னர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது கல்முனையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில், தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருத்துக்கான உள்ளூராட்சி மன்றம் உருவாக்கித் தரப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உறுதியளிக்கப்பட்டது. தேர்தல் முடிவுற்றதும் புதிதாக உள்ளூராட்சி அமைச்சராக பொறுப்பேற்ற பைசர் முஸ்தபாவும் உறுதியளித்திருந்தார். ஆனால் இதுவரை அமைச்சு மட்டத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.

அதுவொரு மூடு மந்திரமாகவே இருந்து வருகின்றது. இவ்விடயம் கிடப்பில் போடப்பட்டிருப்பது ஏன் என்கின்ற மர்மம் துலங்க வேண்டிய தருணத்திற்கு வந்துள்ளோம். இந்த இழுத்தடிப்பு தொடர்பில் கடந்த வருடம் பள்ளிவாசல் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த அதிகார அரசியல்வாதிகள்தான் உண்மையில் இதற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கின்றனரா என்கின்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.

அரசியல் தலைமைகள் அனைவரும் எமது மக்களை வாக்குகள் போடும் ஒரு இயந்திரமாக பாவிக்கின்றனர். ஆனால் மக்களின் தேவைகள் என்று வரும்போது மௌனித்து, ஒளிந்துபோய், வக்கிர அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

சாய்ந்தமருது மக்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுக்க முடியாமைக்கு காரணம் தலைமைகளின் இயலாமையா அல்லது கூட இருந்து குழிபறிப்போரின் முட்டுக்கட்டைகளா அல்லது நீங்களே இந்த ஊருக்கு சதி செய்து, துரோகமிழைக்கின்றீர்களா என்பது தொடர்பில் துலங்காமல் இனியும் மௌனம் காக்கமுடியாது.

நீங்கள் வாக்குறுகுதி வழங்கியபோது இருந்த சூழ்நிலை பற்றி ஒரு கணம் சிந்தித்து பார்க்க கோருகிறோம்.

முழு அம்பாறை மாவட்டமும் இந்த சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரத்தையே பேசு பொருளாக கொண்டிருந்த நிலமை குறித்து தலைமகள் மீட்டிப் பார்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த நாட்டின் தேசியத் தலைமையான பிரதமர் ரணிலை அழைத்து வந்து இந்த மக்களுக்கு வாக்குறுதி வழங்கி, வாக்குகளையும் பெற்று விட்டு, அதன் மூலம் தங்களுக்கான அதிகார பதவிகளை அலங்கரிக்கின்ற நீங்கள், கொடுத்த வாக்குறுதி

குறித்து எதுவித சலனமும் இன்றி உலாவருவது எவ்வளவு முனாஃபிக்தனமானது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

தொடர்ந்தும் இந்த மக்களை முற்றுமுழுதாக ஏமாற்றும் வகையில் சாய்ந்தமருது தோணா அபிவிருத்திக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மாநாடு கூட்டி அறிவிக்கின்றீர்கள். உண்மையில் அது சாய்ந்தமருது மக்களுக்கானது அல்ல. உங்களின் சகாக்களின் பொக்கட்டுகளை நிரப்புவதற்கான வேலைத் திட்டம்தான் என்று மக்கள் விசனம் தெரிவித்துக் கொண்டிருப்பதை நீங்கள் கொஞ்சமும் கணக்கில் எடுக்காமல் இருப்பது பற்றி கவலையடைகின்றோம். தோணா எனும் மடுவுக்கும் கோடிகளைக் கொட்டி சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை குழிதோண்டிப்புதைக்க முற்பட்டிருப்பதானது உங்களுக்கு தலைமைத்துவம் பெற்றுத்தந்த மண்ணிலிருந்து நீங்கள் தூரமாவதற்கான அத்திவாரமாக அமையலாம் என்பதை சற்று புரிந்து கொள்ளுங்கள்.

அதேவேளை சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை பிரகடனம் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை கொண்டு வருமாறு சில மாதங்களுக்கு முன்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் எமது மறுமலச்சி மன்றம் கோரிக்கை விடுத்திருந்தது. அவரது பணிப்புரையின் பேரில் அவரது கட்சியின் திருமலை எம்.பி. அப்துல்லாஹ் மஹ்ரூப்

அதனை பொறுப்பேற்றுக் கொண்ட போதிலும், அது கூட இன்னும் நடந்தேறவில்லை. இந்த ஊரின் தேவை குறித்து குரல் எழுப்புவதற்கு மக்கள் பிரதிநிதி ஒருவர் இல்லாமையின் வலியை நாம் சுமந்து கொண்டிருக்கின்றோம்.

இத்தகைய ஏமாற்று வித்தைகளை கண்மூடித்தனமாக இனியும் பொறுத்துக்க கொண்டிருக்க முடியாது. மக்கள் சக்தி மூலம் தீர்வினை தேடவேண்டிய நிலைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ளோம். ஆகையினால் தமது அரசியல் தலைமைகளை அதிகபட்சம் நம்பி ஏமாந்துள்ள சாய்ந்தமருது மக்கள் இனியும் அவர்களை நம்பிக் கொண்டு காலத்தை மேலும் வீணடித்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு, திடீரென கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வாக்குச் சீட்டில் புள்ளடியிடுகின்ற துர்ப்பாக்கிய நிலையொன்று மீண்டும் ஏற்பட இடமளிக்கக் கூடாது என வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *